அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது.
ஆனால், இதற்கு மாறாக தற்போது தென் கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா மற்றும் தென் கொரியா இரண்டு நாடுகளுமே ஒரே கொடியின் கீழ் விளையாடும் என்று தெரிகிறது. மேலும், இரு நாடுகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றிணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் பிப்ரவரி 9 ஆம் தேதி குளிர்கால ஒலிம்பிக் தொடர் துவங்கவுள்ளது. இதில் வடகொரியாவும் பங்கேற்கவுள்ள நிலையில், பிப். 8ஆம் தேதி பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதாம்.
வடகொரியாவில் அதன் நிறுவனர் கிம் 2-சங் கொரில்லா படையை உருவாக்கியதன் நினைவாக ஏப்ரல் 25 ஆம் தேதி இது போன்ற ராணுவ அணிவகுப்பு நடைபெற்று வந்தது. ஆனால், முதல் முறையாக வடகொரிய ராணுவம் நிறுவப்பட்டதன் 70-வது ஆண்டு தினமான பிப். 8 அன்று ராணுவ அணிவகுப்பு நடைபெறுவது உலக நாடுகளுக்கு சந்தேகத்தையும், அச்சதையும் ஏற்படுத்தியுள்ளது.