பாகிஸ்தானில் பிரசவத்திற்கு சென்ற இளம்பெண்ணுக்கு அனுபவம் இல்லாத மருத்துவ ஊழியர்கள் பிரசவம் பார்த்து குழந்தை தலையை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் தார்பார்கர் மாவட்டத்தில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பெண் மகப்பெறு மருத்துவர் இல்லாததால் அனுபவம் இல்லாத மருத்துவ ஊழியர்கள் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க முயன்றபோது அவர்கள் அலட்சியத்தால் குழந்தையின் தலை துண்டாகியுள்ளது. இந்நிலையில் குழந்தையின் தலை பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த நிலையில் அதை எடுக்காமலே தையல் போட்டு அனுப்பியுள்ளனர். இதனால் பெண்ணின் உடல்நிலை மோசமான நிலையில் கடைசியாக அவர் லியாகத் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் தலையை வெளியே எடுத்துள்ளனர்.
ஆரம்ப சுகாதார ஊழியர்களின் இந்த அலட்சிய செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து உடனடி விசாரணை மேற்கொள்ள சிந்து சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.