பாகிஸ்தானில் எழுந்து நின்று பாடாத கர்ப்பிணிப் பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கராச்சியில் உள்ள கங்கா கிராமத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் சமீனா சமூன் என்ற பாடகி ஒருவர் மேடையில் பாடல் பாடியுள்ளார். அவர் கர்ப்பமாக இருந்ததால் எழுந்து நிற்க முடியாமல் அமர்ந்தபடி பாடல்களை பாடியுள்ளார்.
அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த தாரிக் ஜடோய் என்பவர் சமீனாவை எழுந்து நின்று பாடும்படி வற்புறுத்தியுள்ளார். எழுந்து நிற்க சிரமமாக இருக்கிறது என்று சமீனா கூறியுள்ளார். ஆனால் தாரிக் தொடர்ந்து சமீனாவை எழுந்து நிற்கும்படி கூறியுள்ளார். இறுதியில் சமீனா எழுந்து நின்றுள்ளார்.
ஆனால் தாரிக் கோபத்தில் சமீனா எழுந்து நின்றதை கவனிக்காமல் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அங்கிருந்தவர்கள் சமீனாவை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
சமீனா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சமீனாவின் கணவர் தாரிக் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் தாரிக் ஜடோயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.