ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரை பிரதமர் மோடியால் நிறுத்த முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நேட்டோவுடன் இணைவதை எதிர்த்து உக்ரைன் மீது கடந்த 2022ம் ஆண்டில் ரஷ்யா போரைத் தொடங்கியது. இந்த போரில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி, பொருளுதவி செய்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு சமீபமாக வடகொரியா தனது 10 ஆயிரம் வீரர்களையும், ஆயுதங்களையும் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த போர் தொடங்கியது முதலே இந்த போரை நிறுத்த இந்திய பிரதமர் மோடியால் முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து பேசி வருகிறார். சமீபத்தில் பிரதமர் மோடி உக்ரைனுக்கு பயணம் சென்றதுடன், போரில் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார். அதன்பின்னர் ப்ரிக்ஸ் மாநாட்டிற்காக ரஷ்யா சென்றவர் புதினுடன் பேசினார். பின்னர் இந்த யுக போருக்கானது அல்ல என்றும் பிரதமர் மோடி பேசினார்.
இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து பேசிய ஜெலன்ஸ்கி “உலகின் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா 5வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. சர்வதேச அரசியலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகம் முழுவதும் செல்வாக்கு உள்ளது. உக்ரைன் போரை நிறுத்த அவரால் முடியும். இதுத்தொடர்பாக இந்தியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது” என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K