அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப்பின் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டோர் கொரோனா பாதித்து இறந்ததாக வெளியாகியுள்ள ஆய்வு முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. ஆனால் ஆரம்பம் முதலே அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொரோனா ஒரு சாதாரண காய்ச்சல் என்ற அளவிலேயே பேசி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் கடந்த மாதம் முதலாக தீவிரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் கலிபொர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் அதிபர் ட்ரம்ப் நடத்திய தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் மக்கள் மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஜூன் 20 முதல் செப்டம்பர் 22 வரையிலான காலத்தில் ட்ரம்ப் நடத்தி 18 தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொண்டவர்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டபோது அதில் 700 பேர் கொரோனா பாதிப்பால் இறந்து விட்டதாகவும், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்த அரசியல் பின்னணியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.