தாய்லாந்து நாட்டில் அரச குடும்பத்தை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகள் மக்களாட்சி அதிகாரம் பெற்ற நாடுகளாக மாறிவிட்ட போதிலும், சில நாடுகளில் அரச பரம்பரைக்கான மரியாதைகளும் தொடர்ந்து வருகின்றன. இதுபோன்ற நாடுகளில் மக்கள் ஆட்சியாளர்கள், பிரதமர் போன்றவர்களை தேர்வு செய்ய முடிந்தாலும் அரச பரம்பரைக்கான அதிகாரங்கள், உரிமைகள் தனியாக உண்டு.
அவ்வாறாக அரச பரம்பரை மரியாதை தொடர்ந்து வரும் நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று. தற்போது தாய்லாந்தி மஹா வஜ்ரலாங்கோர்ன் அரசராக உள்ளார். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்தில் ஆடைகள் விற்பனை செய்து வரும் மொங்கால் திரகோட் என்பவர் அரச பரம்பரை குறித்து விமர்சித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அரச பரம்பரை மீது அவதூறு பேசுவது தாய்லாந்தில் ”லெஸ் மெஜெஸ்டெ” என்னும் குற்றமாக கருதப்படுகிறது. அவ்வாறாக அரச பரம்பரையை விமர்சித்த மொங்கால் திரகோட் மீது குற்றம் சுமத்தப்பட்டு 28 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து நீதிமன்றத்தில் திரகோட் மேல்முறையீடு செய்தார். அதனால் தண்டனை காலம் குறையாமல் மேலும் எகிறியிருக்கிறது. ஏற்கனவே 28 ஆண்டுகாலம் சிறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் மேல்முறையீடு செய்ததற்கு 22 ஆண்டுகள் கூடுதலாக சிறை தண்டனை சேர்த்து 50 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையை விதித்துள்ளது தாய்லாந்து நீதிமன்றம். விளையாட்டாக போட போன போஸ்ட் வினையாகி தற்போது 50 ஆண்டுகாலம் சிறை வாழ்க்கையை திரகோட்டுக்கு அளித்துவிட்டது.