அமெரிக்காவில் உள்ள அலபாமா நகரில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் மூக்கே இல்லாமல் ஒரு குழந்தை பிறந்தது. ட்ராசோடாமி என்ற அரியவகை நோய் பாதிப்பு காரணமாக பிறந்த இந்த குழந்தை சில நாட்களில் இறந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மருத்துவர்களின் கணிப்பையும் மீறி இந்த குழந்தை தொடர்ந்து உயிர் வாழ்ந்தது. குறையுடன் பிறந்தாலும் குழந்தை அழகாக இருந்ததால் இந்த குழந்தையின் பெற்றோர் கண்ணும் கருத்துமாக கடந்த மூன்று ஆண்டுகளாக வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இந்த குழந்தை பரிதாபமாக மரணம் அடைந்தது. சமீபத்தில் இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடி மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்த இந்த குழந்தை திடீரென எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்துவிட்டதை அறிந்து பெற்றோர்கள் கதறியழுதனர்.
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் குழந்தையின் தந்தை கூறியதாவது: "எங்களின் சிறிய நண்பனை இழந்துவிட்டோம். இவனது மறைவு எங்களை நீண்ட காலத்திற்கு காயப்படுத்தும், அழகிய சிறுவன் எங்கள் மகனாக பிறந்ததற்கு நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.