அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக அந்தப் பதவிக்குப் போட்டியிட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால், இன்னும் இந்த தேர்தல் முடிவு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தம்முடைய தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்துவரும் டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக ஆதாரம் ஏதுமில்லாமல் குற்றம்சாட்டிவருகிறார். இது அமெரிக்கத் தேர்தல் வரலாறு கண்டிராத புதிய காட்சி.
தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக கூறும் அதிபரின் கருத்துடன் முரண்படும் வகையில் கருத்துத் தெரிவித்த மூத்த தேர்தல் அதிகாரி ஒருவரை பதவி நீக்கிவிட்டதாக டொனால்டு டிரம்ப் இப்போது அறிவித்துள்ளார்.
இணையப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு முகமை (Cyber Security and Infrastructure Security - Cisa) தலைவரான கிறிஸ் க்ரெப்ஸ் வாக்காளர் நம்பிக்கை குறித்து தெரிவித்த தகவல்கள் மிகவும் துல்லியமற்றதாக இருந்ததால் அவரைப் பதவி நீக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார் டிரம்ப்.
நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஆதாரம் இல்லாமல் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டிவரும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் தேர்தல் அதிகாரிகள் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பாக நடந்த தேர்தல் என்று இதனைக் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில், தமது தோல்வியை ஒப்புக்கொள்ள தொடர்ந்து மறுத்துவரும் டிரம்ப், முன்பே பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பரை பதவி நீக்கினார். அவர் தமக்கு உண்மையாக இல்லை என்று டிரம்ப் சந்தேகப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இப்போது கிறிஸ் க்ரெப்ஸ் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
ஜனவரியில் பதவியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு சி.ஐ.ஏ. இயக்குநர் ஜீனா ஹேஸ்பெல், எஃப்.பி.ஐ. இயக்குநர் கிறிஸ்டோபர் ரே ஆகியோரும் பதவி நீக்கப்படலாம் எனறும் அமெரிக்கத் தலைநகரில் ஒரு சந்தேகம் நிலவுகிறது.
இந்த கிறிஸ் க்ரெப்ஸ் டிரம்ப் நியமித்தவர்தான்.
டிரம்ப் பதவி நீக்கிய மற்றவர்களைப் போலவே தம்முடைய பதவி பறிக்கப்பட்ட செய்தி க்ரெப்ஸுக்கு டிரம்பின் ட்வீட்டைப் பார்த்தே தெரியும்.
மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான அவர் இந்த பதவிப் பறிப்பைப் பார்த்து கலங்கியதாகத் தெரியவில்லை.
கடந்த அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து உருவாக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு முகமைக்கு க்ரெப்ஸ்தான் தொடக்கத்தில் இருந்து தலைவராக இருந்து வருகிறார்.
தேர்தலில் இணையத் தாக்குதல் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தேர்தல் அதிகாரிகளோடும், வாக்கு இயந்திரங்களை அளிக்கும் தனியார் நிறுவனங்களோடும் இணைந்து பணியாற்றுகிறது இந்த முகமை. வாக்குச்சீட்டு பட்டியலிடும் பணி உள்ளிட்டவற்றையும் இது கவனிக்கிறது. தமது முகமை சார்பில் தேர்தல் தொடர்பான பொய்த் தகவல்களை அம்பலப்படுத்தும் வகையில் ஒரு இணைய தளத்தை நடத்தி வந்தார் க்ரெப்ஸ்.
பல மாநிலங்களில் வாக்கு இயந்திரங்கள் வாக்குகளை பைடனுக்கு சாதகமாக மாற்றிப் பதிவு செய்ததாக டிரம்ப் கூறும் குற்றச்சாட்டை மறுத்து, நேரடியாக டிரம்புடன் முரண்படும் வகையில் அவர் ஒரு ட்வீட் வெளியிட்டார். அது வெளியான சில மணி நேரங்களில் க்ரெப்சின் பதவி பறிபோயுள்ளது.