கொரோனா வைரஸால் உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் அமெரிக்காவில் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது.
ஆரம்பக்கட்டங்களில் சீனா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ப்ரான்ஸ் ஆகிய நாடுகளே கொரோனாவால் அதிக பலிகளை சந்தித்து வந்த நிலையில், பலி எண்ணிக்கை ஆயிரங்களில் இருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவை அந்த நாடுகள் கட்டுக்குள் கொண்டு வந்தன. ஆனால் அமெரிக்காவில் நிலைமை மிகவும் மோசமான நிலையினை அடைந்துள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கைகள் லட்சத்தில் உள்ள நிலையில் அமெரிக்காவில் பலி எண்ணிக்கையே லட்சத்தை நெருங்கி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,448 பேர் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 29,531 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் மொத்த எண்ணிக்கை 75,543 ஆக உள்ளது. இதுவரை மொத்தமாக 12.95 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.