கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் உள்ள மனித குலத்தையே நாசம் செய்து வரும் நிலையில் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் என்று கூறப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை தங்களுக்கு ஏற்றுமதி செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை அடுத்து தொலைபேசியிலும் அவர் இது குறித்து மோடியிடம் பேசினார்
இந்த நிலையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ள நிலையில் அமெரிக்கா உள்பட ஒரு சில நாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்ய தடையை மத்திய அரசு சமீபத்தில் விலக்குவதாக அறிவித்தது
அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த போதிலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் இந்த முடிவுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது கூறியதாவது: மிகவும் அசாதாரணமான ஒரு காலச் சூழ்நிலையில், இரண்டு நண்பர்களுக்கு இடையே, மிக நெருங்கிய ஒத்துழைப்பு அவசியமாகிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதி குறித்த முடிவுக்காக இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி கூறுகிறேன். இந்தியாவின் உதவியை ஒருபோதும் மறக்க முடியாது., கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு மட்டுமின்றி மனித குலத்துக்கே உதவும் வலிமையான தலைமையாக விளங்கும் பிரதமர் மோடிக்கு நன்றி’ என டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.