கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் என்ன சிக்கல் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து மருத்துவர் அரவிந்தராஜின் பதிவு:-
கொரோனாவிற்கு ஏன் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை ?? ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிப்பு ன்னு அரசு அறிவித்ததும் மக்களுக்கு எழுந்த ஒரே கேள்வி !! "அட ச்ச.... எவ்ளோ நாள் தான் வீட்லயே இருக்குறது??? இந்த கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபுடிச்சா தான் என்ன" ?? இது ஒரு நியாயமான ஆதங்கம் தான். இதற்கான தெளிவான பதில் தேவை-ன்னா அப்டியே காலச்சக்கரத்தை சுழற்றி கொஞ்சம் பின்நோக்கி போகலாம். மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே தோன்றிய இனம் தான் இந்த வைரஸ். (நமக்கெல்லாம் சீனியர் இவர்!!)
நாம எப்படி கற்காலத்துல இருந்து கூகிள் காலத்துக்கு ஏற்ற மாதிரி நம்மை தகவமைச்சிட்டு வளர்ந்தோமோ, அதே மாதிரி வைரஸும் பல்வேறு தகவமைப்பை மேற்கொண்டு வளர்ச்சியடைந்தது. இந்த வைரஸ் இருக்கு-ல்ல, இதனோட மரபணு DNA அல்லது RNA இவற்றில் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கும். இந்த RNA வைரஸ் கிருமி DNA வைரஸ் கிருமிகளை விட கொஞ்சம் சவாலானது. (கொரோனா ஒரு RNA வைரஸ்)
எப்டின்னு சொல்றேன் கேளுங்க !!
இந்த DNA வைரஸ் தன்னுடைய உருவ அமைப்பு மற்றும் மரபணு செயல்பாட்டை பெரிதாக மாற்றிக்கொள்ளாது. ஆனா RNA வைரஸ் அப்படி இல்லை. அடிக்கடி தன்னுடைய மரபணு செயல்பாடு, உருவம், அதில் உள்ள புரதம் ன்னு எல்லாத்தையும் கண்டபடி மாத்திக்கும். இதை 'Mutation' ன்னு கூறுவோம். கிட்டத்தட்ட மாறுவேஷத்துல சுத்துற கதை தான். 'DNA Proofreading' ன்னு ஒரு வார்த்தை உண்டு. அதாவது, மரபணு செயல்பாட்டில் ஏதேனும் மாறுதல் நிகழும் சூழல் ஏற்பட்டால் அது நிகழாத வண்ணம் ஒரே நிலையில் மாறாமல் இருப்பது தான் Proofreading. இந்த குணாதிசயம் பல DNA வைரஸ்களுக்கு உண்டு.
ஆனால், அந்த குணம் RNA வைரஸ்களுக்கு இல்லை. அதனால் தனக்குள் எந்த மாறுதல் நிகழ்ந்தாலும் அது கண்டுகொள்ளாமல் Mutate ஆகி மாறிக்கொண்டே இருக்கும். ஆகவே, RNA வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பது சற்று சவாலான விஷயமாக உள்ளது. ஒரு முறை வைரஸ் தாக்கினால் அது அடுத்த முறை தாக்கும் பொழுது அதே குணாதிசயங்கள் கொண்டிருக்கும் ன்னு நிச்சயமாக சொல்ல முடியாது !! அது Mutate ஆகி மரபணுவில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு புதிய விதமாக தாக்கும். அதனால் தான் சீரான இடைவெளிகளில் BOOSTER DOSE தடுப்பூசிகள் அறிவுறுத்தப்படுகின்றன.
Booster Dose தடுப்பூசி அறிவுரை செய்ய இரண்டு மிக முக்கிய காரணங்கள் உண்டு.
1.முதல்ல தடுப்பூசி எப்படி வேலை செய்யுது-ன்னு பாப்போம்!!!
"நோயை உண்டாக்கும் வைரஸ் நம் உடலை தாக்கும் முன்பாகவே, நாம் அதே வைரஸின் நோய் தாக்கும் திறனை நீக்கிவிட்டு, ஆய்வங்கங்களில் அவற்றை மேலும் சில மாறுதல்களுக்கு உட்படுத்தி பாதுகாப்பான "வலுவிழந்த வைரஸ்" கிருமியை உடலில் செலுத்துவோம். இப்போ, உடலில் செலுத்திய வலுவிழந்த வைரஸ் நோயை உண்டாக்காது. ஆனால், உடலில் ஏதோ ஒரு அந்நிய சக்தி வந்துவிட்டதே-ன்னு நமது நோய் எதிர்ப்பு மண்டலம் அதை கண்டறிந்து அதற்கு எதிராக போரிட வெள்ளை அணுக்களை(WBC) கட்டளையிடும். வைரஸுக்கு எதிராக போரிடும் எதிர்ப்புசக்தியை நாம் பெற்றுவிடுவோம். ஒருமுறை வைரஸ் நமது உடலை தாக்கியதால் அந்த வைரஸ் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு நியாபகத்தில் வைக்கப்படும். இதை 'Cognition' என்று கூறுவோம்.
ஒருவேளை, சிறிது நாட்கள் கழித்து நோயை உண்டாக்கும் வைரஸ் தாக்கினால், நமது நோய் எதிர்ப்பு மண்டலம் வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி, நியாபக சக்தி ஆகிய இரண்டையும் ஏற்கனவே பெற்றுவிட்டதால் வைரஸை எளிதில் கண்டறிந்து போரிட்டு வெற்றி பெரும். இது தான் தடுப்பூசியின் வேலை. தடுப்பூசி போட்ட சில வருடங்களில், அந்த குறிப்பிட்ட வைரஸுக்கு எதிராக உடலில் உருவான Cognition குறையும். நோய் எதிர்ப்பு திறன் மங்கும். இவை மீண்டும் வலுப்பெறவே இந்த Booster Dose தடுப்பூசி அவசியமாகிறது.
2. இரண்டாவது காரணம் நான் ஏற்கனவே கூறிய Mutation. வைரஸ் கிருமிகள் சில வருட இடைவெளிகளில் தன்னைத்தானே மாறுதல்களுக்கு உட்படுத்திக்கொண்டு மாறுவேடமணிந்து தாக்கும். (உதா- இன்ப்ளூயன்சா)!! மாறுபட்ட வைரஸின் கிருமித்தொற்றை எதிர்க்கவே சிறிது மாற்றம் செய்யப்பட்ட தடுப்பூசிகள் சீரான இடைவெளியில் தரப்படுகின்றன. இந்த கொரோனா வைரஸ் RNA வைரஸ். தன்னை மாறுதலுக்கு உட்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டது. தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தாலும் பலருக்கு இந்த வைரஸ் கிருமி தாக்கும். ஏனென்றால் இது வீரியம் மிகுந்த வைரஸ். ஆகவே தான் வீட்டிலிருக்க அறிவுரை செய்கிறோம்.
மனித இனத்தை சுமார் 2700 ஆண்டுகளாக வதைத்து 300 மில்லியன் மக்களின் உயிரை பறித்த பெரியம்மை நோய்க்கு 1796-ல் தான் 'எட்வர்ட் ஜென்னர்' தடுப்பூசி கண்டுபிடித்து பெரியம்மையை உலகை விட்டே விரட்டினார். நாம் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டறிய 2700 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அறிவியல் வேகமாக முன்னேறி வருகிறது. கண்டுபிடிப்புகளும் மிக வேகமாக நிகழும். இன்னும் சில மாதங்களில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும். யார் கண்டது?? கொரோனா வைரஸ் தன்னை மாறுதல்களுக்கு உட்படுத்திக்கொண்டு வீரியம் குறைந்த வைரஸாக மாறவும் வாய்ப்புகள் உண்டு.
ஆனால், இவை எல்லாம் எதிர்காலம் குறித்த பார்வை. இதை அறிவியலின் கையில் விட்டுவிடுவோம். மக்களாகிய நாம் நிகழ்காலத்தில் செய்ய வேண்டியவை என்ன ?? நம்மை சுத்தமாக வைத்துக்கொண்டு, சுய ஒழுக்கத்துடன் செயல்பட்டு வீட்டிலேயே தங்கி வைரஸை நம்மிடம் அண்ட விடாமல் பார்த்துக்கொள்வது மட்டுமே. அறிவியலின் பக்கம் நிற்போம். கொரோனாவை வெல்வோம் !!