அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.
அதிமுக இரு அணிகள் இணைவது இன்று உறுதியாகியுள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்திக்க உள்ளனர். அங்கு அவர்கள் கூடி ஆலோசித்து அதிமுகவின் இரு அணிகள் இணைப்பை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அதிமுக பாஜகவுடன் இணைய உள்ளதாக கூறபடுகிறது. பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் இணைந்தது. அதுபோல அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது. அப்படி இணையும் போது 2 அமைச்சர்கள் பதவி புதிதாக வழங்கவும் பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் அணியின் முக்கிய கோரிக்கை சசிகலா மற்றும் அவரது உறவினர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இரு அணிகளும் இணைப்பு குறித்து அறிக்கை வெளியாகும் போது சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை அதிமுக பாஜகவுடன் இணையும் காரணத்தினால்தான் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார்களோ? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதிமுகவின் இரு அணிகள் இணைய பாஜகவும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.