விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
கிரகநிலை:
தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.
கிரகமாற்றம்:
01-09-2022 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-09-2022 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
அறிவும், ஆற்றலும் ஒருங்கே பெற்ற விருச்சிக ராசியினரே நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் வெற்றி நிச்சயம். இந்த மாதம் புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும்.
தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனை பெறுவார்கள்.
குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். நல்லது கெட்டது அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்க பெறுவீர்கள். பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களிடம் அன்பு அதிகரிக்கும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம்.
கலைத்துறையினருக்கு நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும்.
பெண்களுக்கு எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.
மாணவர்களுக்கு எதையும் அவசரமாக செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை குறையும்.
விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலை பளு கூடும்.
அனுஷம்:
இந்த மாதம் குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.
கேட்டை:
இந்த மாதம் உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். சுக்கிரன் சஞ்சாரம் மூலம் பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும்.
பரிகாரம்: சஷ்டிக் கவசம், சண்முக கவசம் பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: செப் 18, 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 11, 12