சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறனர்.
தமிழ்நாட்டின் சாத்தான்குளத்தில் காவலில் இருந்தபோது இறந்த தந்தை, மகன் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அப்பகுதி பஜாரில் உள்ள அவர்களது கடை முன்பு வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு குடும்பத்தினர். கனிமொழி எம்பி உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கடையை திறந்ததாக கூறப்படும் விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தனர்.
அவர்களை கைது செய்தவுடன் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் அடித்ததாக புகார் எழுந்தது. சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த இருவர் மரணம் அடைந்த முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சாத்தான்குளம் பஜாரில் உள்ள பென்னிக்ஸ் கடை முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக இருவரது படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
திமுக எம்.பி கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், சாத்தான்குளம் வியாபாரிகள், ஸ்டெர்லைட் போராட்ட குழுவினர், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பிறகு ஜெயராஜ் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு கனிமொழி ஆறுதல் கூறினர். இந்த நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் சாத்தான்குளம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.