1950 ஆம் ஆண்டு முதல் முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆம், 1950 ஆம் ஆண்டு முதல் முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று தேவாலய உறுப்பினர்களின் துஷ்பிரயோகங்கள் தொடர்பான விசாரணை குழுவின் தலைவர் ஜீன் மார்க் சாவே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது விரிவான விசாரணை அறிக்கையில், தேவாலயத்தின் சாதாரண உறுப்பினர்கள் செய்த தவறுகளை கணக்கிட்டால் இந்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,000 ஆக உயரும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் வரலாற்றிலேயே இந்த அறிக்கை ஒரு திருப்புமுனை என்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணை, காவல்துறை புலனாய்வு, தேவாலய தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அறிக்கையை ஜீன் மார்க் சாவே தலைமையிலான குழு தயாரித்துள்ளது. ஆனால், விசாரணை குழு மதிப்பிட்ட பல வழக்குகள், பிரெஞ்சு சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்த முடியாத வகையில் பழைய வழக்குகளாக உள்ளன.
2018இல், உலகின் பல நாடுகளில் தேவாலய பாதிரியார்களால் சிறார்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, பிரெஞ்சு கத்தோலிக்க தேவாலயம் இந்த விசாரணை குழுவை நியமித்தது.