Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அரசியலமைப்பின் 20வது திருத்தம் - சர்ச்சையா சாதனையா?

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (23:58 IST)
இலங்கையில் ஆளும் ராஜபக்‌ஷ சகோதரர்களின் தேர்தல் வாக்குறுதியை உண்மையாக்கும் வகையில், புதிதாக அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு, அந்நாட்டின் அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கான முதலாவது வரைவுக்கு கடந்த 2ஆம் தேதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

இதையடுத்து அரசு அறிவிக்கையில் வெளியிட்பபட்ட அந்த வரைவு திருத்தம், அடுத்த இரு வாரங்களில் நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது அரசியலைப்பு திருத்தம், 19ஆவது திருத்தத்துக்கு மாற்றாக அமையும். தற்போது நடைமுறையில் உள்ள 19ஆவது திருத்தம், முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அது ஆட்சியில் உள்ள அதிபரின் நிர்வாக அதிகாரத்தை குறைத்து, தன்னாட்சி முறைப்படி இயங்கும் ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இந்த நிலையில், புதிதாக முன்மொழியப்பட்டுள்ள திருத்தம், நாட்டின் எதிர்காலத்தின் மீது எத்தகைய விளைவுகளை கொண்டுவரும் என்று இலங்கை மற்றும் வெளிநாடுகளிலில் கவலைகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் பல முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், ஏற்கனவே பலமாக உள்ள இலங்கை அதிபரின் அதிகாரத்தை மேலும் கூட்டும் வகையிலும், தன்னாட்சி ஆணையங்களின் அதிகாரங்களை பாதிக்கும் வகையிலும் இந்த சட்டதிருத்தத்தில் உள்ள விஷயங்கள் முக்கிய கவனம் பெற்றுள்ளன.

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் புதிய திருத்தத்துக்கு எதிராக எதிர்கட்சிகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரசு சாரா அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன அரசின் கூட்டணியில் உள்ள கட்சிகள், இந்த திருத்தம் குறித்து கவலை தெரிவித்துள்ளதோடு, கையெழுத்திடப்பட்டுள்ள முதல் வரைவு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என கோரியுள்ளன.

புதிய திருத்தம் என்ன சொல்கிறது?

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள, தனியாரால் நடத்தப்படும், ஆங்கில நாளிதழான எஃப்டி, "இந்த சட்டதிருத்தம், அதிபரின் பழைய நிர்வாக அதிகாரங்களை மீண்டும் கொண்டு வருவதுடன், அரசியலமைப்பு கவுன்சிலுக்கு பதிலாக வலுவிழந்த நாடாளுமன்ற கவுன்சிலை உருவாக்க வகை செய்கிறது.

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்ளவும் அது வகை செய்கிறது" என அந்த நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கள நாளிதழான மவுபிமா, "புதிய திருத்தம் மூலம் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்த ஒரே ஆண்டிலேயே நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் அதிபருக்கு உள்ளது என்றும், முன்பு போல நான்கரை ஆண்டுகள் கட்டாயமாக காத்திருக்க வேண்டிய தேவை இல்லை" என்றும் கூறியுள்ளது.

19ஆவது அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட சில அம்சங்கள் இதிலும் தொடர்கின்றன. அதிபர் பொறுப்பிற்கு வருபவரால் இரண்டு முறை மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்பன போன்ற அம்சங்கள் புதிய வரைவிலும் இடம் பெற்றுள்ளன.

சுயாதீன ஆணையங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் அதே சமயம், தணிக்கை சேவை ஆணையம், தேசிய கொள்முதல் ஆணையம் ஆகியவற்றை நீக்க 20ஆவது திருத்தம் வகை செய்கிறது.

புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கவுன்சில், மனித உரிமைகள் ஆணையம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி ஆணையங்களுக்கான தலைவர்கள் தேர்வு செய்யப்படுவது குறித்த முடிவுகளை மேற்பார்வை செய்யும்.

ஆனால், முன்புள்ள அரசியலமைப்பை போல இல்லாமல், அரசியலமைப்பு கவுன்சில், நாடாளுமன்ற கவுன்சில் ஆகிய இரண்டிலுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அங்கம் வகிப்பர்.

இந்த சட்டசதிருத்தம் என்பது அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கான ஒரு ஆரம்பமாகவே அரசும் பார்க்கிறது.

அரசால் நடத்தப்படும் தமிழ் நாளிதழான தினகரனில் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான செய்தியில், இந்த திருத்தம் என்பது, நாட்டில் அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கான 'முதல்படி' என்று இலங்கையின் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 
திருத்தத்தை யார் எதிர்க்கிறார்கள்?

புதிய திருத்தம், ஜனநாயகத்திற்கு எதிராக அமையும் என எதிர்கட்சிகளை சேர்ந்த பல அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.

தனியாரால் நடத்தப்படும் ஆங்கில செய்தித்தளமான "எக்கனாமி நெக்ஸ்ட்", கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், பிரதான எதிர்கட்சி கூட்டணியான சமகி ஜன பலவேகய, இந்த புதிய திருத்தம் நாட்டின் ஜனநாயகத்தை அழிப்பதோடு, நாட்டை 'சர்வாதிகாரத்தை' நோக்கி கொண்டு செல்வதாக கூறியுள்ளது. மேலும், "19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாதுக்காப்பதற்காக ஒரு இயக்கத்தை உருவாக்க கட்சி முடிவு செய்துள்ளதாகவும், இதில் ஜனநாயக கொள்கைகள் மேலும் சேர்க்கப்படும்." என்றும் அவர்கள் கூறியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ம. சுமந்திரன், புதிதாக பரிந்துரைக்கப்படும் இந்த திருத்தம், அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஒரு அதிபரை உருவாக்கும் என்று கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி எச்சரிக்கை விடுத்தார்.

 
அவரின் கருத்துகளை குறிப்பிட்டுள்ள "தி டெய்லி மிரர்" நாளிதழ்,"நாட்டின் மேம்பாட்டிற்காக உழைக்கும் சக்திகளோடு இணைந்து, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேவும் இந்த சட்டத்திற்கு எதிராக நாங்கள் அயராது போராடுவோம்." என்று அவர் கூறியதாக தெரிவித்துள்ளது.

பல தன்னார்வலர் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக குழுக்களும்கூட இது குறித்து கவலை தெரிவித்துள்ளன.

"சமூக நீதிக்கான தேசிய இயக்கம்" என்ற அத்தகைய ஒரு அமைப்பு கடந்த 10ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அளவு கடந்த அதிகாரம் தனி ஒரு மனிதரின் கைக்கு போகும்போது, ஏற்படும் விளைவுகள், மீண்டு வர முடியாத ஆபத்துகளாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளது என்கிறது, "கொலம்போ பேஜ்" என்ற செய்தித்தளம்.

அதிபர் ராஜபக்‌ஷ மற்றும் அவரின் கூட்டணிக்கு ஆதரவளித்த, தேசிய அமைப்புகளுக்கான சம்மேளனம் கூட, புதிய திருத்தத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுள்ளது.

அதே நேரத்தில், புதிய திருத்தம், அரசிற்கு இருக்கும் பொறுப்பு மற்றும் அதன் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை குறைக்கும் வகையில் அமையும் என்று கூறியுள்ளது, "டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா" (TISL) என்ற அமைப்பு.

கடந்த 11ஆம் தேதி "வீரகேசரி" நாளிதழ் வெளியிட்ட செய்தியில், டி.ஐ.எஸ்.எல் நிர்வாக இயக்குநர் அசோகா உபயசேகரேவின் கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது.

"புதிய திருத்தம், தகவல் அறியும் உரிமைச்சட்டம், பொதுநிதியை மேற்பார்வையிடுதல், ஊழல் குறித்த விசாரணைகள் மற்றும் ஒரு தேர்தலை எந்த சார்பும் இல்லாமல் நியாயமான முறையில் நடத்துதல் ஆகிய விடயங்களுக்கு பாதகமாகவே அமையும்" என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்

இந்த புதிய வரைவு, ஐக்கிய நாடுகள் சபையின் பார்வையிலிருந்தும் தப்பவில்லை. "இந்த வரைவு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி பெற்ற அமைப்புகளுக்கு எதிர்மறையான பாதிப்புகளை விளைவிக்கக்கூடும்" என்று கூறியுள்ளார், ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திற்கான தலைவரான மிஷல் பாச்லெட்.

19ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை விமர்சனம் செய்தும், 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாகவும் சில அமைச்சர்கள் பேசியுள்ளார்கள்.

கடந்த 8ஆம் தேதி தினகரனில் வெளியான செய்தியில், நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி, 19ஆம் சட்டத்திருத்தம் அரசின் ஆளுமைக்கு தடையாக உள்ளது என்றும், 20ஆவது திருத்தம் நாடு மற்றும் மக்களின் நன்மைக்காக அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளதாக கூறுகிறது.

கடந்த 7ஆம் தேதி வெளியான சிங்கள நாளிதழான அருணாவில், அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுக்காப்பாக வைக்க அதிபரிடம் நிர்வாக அதிகாரம் இருக்க வேண்டும் என்று கூறியதாக தெரிவிக்கிறது.

புதிய வரைவிற்கு எதிர்ப்பு வரத்தொடங்கியுள்ள நிலையில், அதிபர் மற்றும் பிரதமர், இந்த வரைவு குறித்து பரிசீலனை செய்வதற்கு தயாராக இருப்பதாகவே தெரிகிறது.

"தி ஐலேண்ட்" என்ற பத்திரிக்கை கடந்த 11ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், "அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷ, புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தம், புதிய வரைவு உருவாக வழிவகுக்கும் என்று சமூக அமைப்புகளுக்கு உறுதி அளித்துள்ளார்." என்று தெரிவிக்கிறது.

இதற்கிடையே, புதிய திருத்த வரைவை முழுமையாக படித்து புரிந்து கொள்ள ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை கடந்த 12ஆம் தேதி, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நியமித்தார்.

கடந்த 15ஆம் தேதி, அக்குழு அளித்த அறிக்கை 16ஆம் தேதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது

இருப்பினும், 16ஆம் தேதி அது குறித்து செய்தி வெளியிட்டுள்ள "டெய்லி மிரர்", பெயர் குறிப்பிடாத "முக்கிய நபர்" மூலமாக கிடைத்த தகவலின்படி, "அரசு 20வது திருத்தத்தில் மாற்றங்கள் செய்யாது என்றும், திருத்தம் மீதான வாதம் நடக்கும்போது, கமிட்டியை சேர்ந்தோர் அதில் பேசுகையில், புதிய அம்சங்களை அவர்கள் முன்வைத்தால், அவையும் அதில் சேர்க்கப்படும்." என்று கூறியதாக தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments