Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

5 மாநில தேர்தல் கருத்துக் கணிப்புகள்: உ.பியில் மீண்டும் பாஜக, பஞ்சாபில் ஆம் ஆத்மி - முழு விவரம்

5 மாநில தேர்தல் கருத்துக் கணிப்புகள்: உ.பியில் மீண்டும் பாஜக, பஞ்சாபில் ஆம் ஆத்மி - முழு விவரம்
, செவ்வாய், 8 மார்ச் 2022 (08:15 IST)
இந்தியாவில் உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தராகண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தல்கள் மார்ச் 7ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை இந்தியாவின் பிரபல ஊடகங்கள் மற்றும் கருத்துக் கேட்பு ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
 
இந்த தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளன. இருப்பினும் அதற்கு முன்பாக வெளியாகி வரும் கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன என்பதை வாக்காளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தேர்தலுக்குப் பிந்தைய பிரபல ஊடகங்களான இந்தியா டுடே, ரிபப்ளிக் டிவி, சி-வோட்டர்ஸ், சாணக்கியா போன்றவை இந்த கருத்துக் கணிப்புகளை தனித்தோ பிற தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்தோ வெளியிட்டுள்ளன. அதன் விவரம்:
webdunia
உத்தர பிரதேசத்தில் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் நிறைவடைந்ததுமே ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளிப்படுத்துகின்றன.கருத்து கணிப்புகளின்படி, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையைப் பெறலாம். உத்தரகாண்டில் கடும் போட்டி நிலவுவதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
 
பஞ்சாபில் மொத்தம் 117 இடங்கள் உள்ளன. அங்கு பெரும்பான்மைக்கு 59 இடங்கள் அவசியம்.
 
இந்தியா டுடே ஆக்சிஸ் மை கருத்துக் கணிப்பின்படி பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கலாம்.
 
அதன்படி, மொத்தம் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 76 முதல் 90 இடங்கள்வரை கிடைக்கலாம். காங்கிரஸ் கட்சிக்கு 19 முதல் 31 இடங்கள் வரை கிடைக்கலாம். அகாலி தளம் கட்சிக்கு 7 முதல் 11 இடங்கள் வரை கிடைக்கலாம்.
 
2017ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் 77 இடங்களை வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்திருந்தது.
webdunia
ரிபப்ளிக் டிவி மற்றும் பி-மார்க் (P-MARQ) கருத்துக்கணிப்பின்படி ஆம் ஆத்மி கட்சிக்கு 62 முதல் 70 இடங்கள் கிடைக்கலாம் என்றும் காங்கிரஸுக்கு 23 முதல் 31 இடங்கள் கிடைக்கலாம். ஷிரோமணி அகாலி தளம் கட்சிக்கு 16 முதல் 24 இடங்கள் கிடைக்கலாம். ஏபிபி நியூஸ் - சி வோட்டர் கருத்துக் கணிப்பின்படி, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி 51 முதல் 61 இடங்களும், காங்கிரஸுக்கு 22 முதல் 28 இடங்களும், அகாலி தளம் கட்சிக்கு 20 முதல் 26 இடங்களும் கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
 
உத்தராகாண்ட்: கருத்துக் கணிப்பு
 
70 தொகுதிகள் கொண்ட உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.ஏபிபி சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பின்படி உத்தராகாண்டில் காங்கிரஸ் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கலாம்
 
அதேசமயம் இந்தியா டுடே மை ஆக்சிஸ் கருத்துக் கணிப்பு, பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கலாம் என்று கணித்துள்ளது.ஏபிபி சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பின்படி, உத்தராகண்டில் காங்கிரஸ் 32 முதல் 38 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி 26 முதல் 32 இடங்களையும் பெறலாம். மற்ற கட்சிகளுக்கு மூன்று முதல் ஏழு இடங்கள் வரை கிடைக்கலாம். 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் உத்தராகாண்டில் பாஜக பெரும்பான்மை பலம் பெற்றிருந்தது.
 
இந்தியா டுடே ஆக்சிஸ் மை கருத்துக்கணிப்பின்படி, பாஜக 36 முதல் 46 இடங்களையும், காங்கிரஸ் 20 முதல் 30 இடங்களையும் பெறலாம் என கணிக்கப்படுகிறது.
 
இந்த கருத்துக்கணிப்பின்படி, பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு முதல் நான்கு இடங்களைப் பெறலாம். இரண்டு முதல் ஐந்து இடங்கள் வரை பிற கட்சிகள் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.
 
கோவா: கருத்துக் கணிப்புகள்
கோவா சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 40 இடங்களில் பெரும்பான்மைக்கு 21 இடங்களைப் பெறுவது அவசியம். இங்கும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்தியா டுடே ஆக்சிஸ் மை கருத்துக்கணிப்பின்படி, கோவாவில் பாஜக 14 முதல் 18 இடங்களும், காங்கிரஸுக்கு 15 முதல் 20 இடங்களும், திரிணமூல் காங்கிரஸுக்கு 2 முதல் 5 இடங்களும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற கட்சிகள் நான்கு இடங்களைப் பெறலாம்.ஏபிபி சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பின்படி பாஜக 13 முதல் 17 இடங்களையும், காங்கிரஸ் 12 முதல் 16 இடங்களையும் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஒன்று முதல் ஐந்து இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் ஐந்து முதல் ஒன்பது இடங்களையும் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கோவாவில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் அங்கு கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைப்பதில் பாஜக வெற்றி பெற்றது.
 
உத்தரபிரதேசம்
 
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 403 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மை பெறுவதற்கு 202 இடங்கள் வெற்றி பெற வேண்டும். கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் உத்தர பிரதசத்தில் 312 இடங்களை வென்று பெரும் பலத்துடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. யோகி ஆதித்யநாத் முதல்வர் ஆனார். இந்த தேர்தலில் பாஜக கூட்டணி 262 முதல் 277 இடங்கள் வரை பிடிக்கும் என்றும் சமாஜ்வாதி கட்சி 119 முதல் 134 இடங்கள் பிடிக்கும் என்றும் சிஎன்என் நியூஸ் 18 கணித்துள்ளது. 
 
இந்தியா நியூஸ், நியூஸ் எக்ஸ் - போல்ஸ்ட்ராட், ஈடிஜி உள்ளிட்டவையும் பாஜக 200 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என கூறுகின்றன.
 
ரிபப்ளிக் பி-மார்க் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி சுமார் 240 இடங்கள் பெறும்  என்றும், சமாஜ்வாதி 140 இடங்களை பெறும் என்றும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சுமார் 17 இடங்கள் பெறும் என்றும் காங்கிரஸ் 4 இடங்களை பிடிக்கும்  என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
 
எந்த மாநிலத்தில் எத்தனை இடங்கள்?
 
உத்தர பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதியும், கடைசி கட்டம் திங்கள்கிழமையும் (மார்ச் 7) நடைபெற்றது.பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கு பிப்ரவரி 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.உத்தராகண்டில் 70 இடங்களுக்கும், கோவாவில் 40 இடங்களுக்கும் பிப்ரவரி 14ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.மணிப்பூரில் உள்ள 60 தொகுதிகளுக்கு பிப்ரவரி 28, மார்ச் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்!