அமெரிக்காவின் பள்ளிக்குச் செல்லும் சிறுமி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு, உடன் படிக்கும் இரு சிறுவர்கள் மற்றும் ஒரு பள்ளி ஊழியர் காயமடைந்து இருக்கிறார்கள்.
பெயர் குறிப்பிடப்படாத ஆறாம் வகுப்பு படிக்கும் 11 அல்லது 12 வயது சிறுமி, இதாஹோ என்கிற அமெரிக்க மாகாணத்தின் பாய்ஸ் நகரத்தில் இருக்கும் ரிக்பி பள்ளிக்கு துப்பாக்கியை பையில் வைத்து எடுத்து வந்திருக்கிறார்.
அந்த சிறுமியால் சுடப்பட்டவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அந்த சிறுமியின் கையிலிருந்த துப்பாக்கியை ஒரு பெண் ஆசிரியர் கைப்பற்றி, காவல் துறை அதிகாரிகள் வரும் வரை அவரை தனிமைப்படுத்தினார் என அதிகாரிகள் கூறினர்.
அச்சிறுமி ஏன் துப்பாக்கியால் சுட்டார் என்பதற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.
சிறுமி தன் பையில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சில முறை பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் சுட்டார் என ஜெஃபர்சன் கவுன்டியின் ஷெரிஃப் ஸ்டீவ் ஆண்டர்சன் கூறினார். அதோடு துப்பாக்கியால் சுட்ட சிறுமி அப்பள்ளிக்கு அருகில் இருக்கும் இதாஹோ ஃபால்ஸ் நகரத்தைச் சேர்ந்தவர் எனவும் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ விசாரித்து வருகிறது. அவர்களோடு உள்ளூர் சட்ட அமைப்பும் விசாரித்து வருகிறது.
"நானும் என் வகுப்பு நண்பனும் எங்கள் ஆசிரியரோடு வகுப்பில் இருந்தோம். நாங்கள் எங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தோம். திடீரென ஒரு பெரிய சத்தம் கேட்டது. மீண்டும் அதே போல இரண்டு முறை பெரிய சத்தம் கேட்டது. பிறகு எல்லோரும் அலறும் சத்தம் கேட்டது" என அசோசியேடட் பிரஸ்ஸிடம் கூறினார் 12 வயதான யேண்டல் ராட்ரிக்ஸ்.
"எங்கள் வகுப்பு ஆசிரியர் என்ன நடந்தது என காணச் சென்ற போது, அவர் ரத்த வெள்ளத்தைக் கண்டார்"
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுக் கொண்ட போதே, தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்ததை அடுத்து, துப்பாக்கி கட்டுப்பாட்டு விதிமுறைகளை வலுப்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்தார்.
சில ரக துப்பாக்கிகளுக்கு சில விதிமுறைகளை விதிப்பது, துப்பாக்கி வாங்குபவர்களின் பின்புலம் பரிசோதிப்பதை வலுப்படுத்துவது, உள்ளூரிலேயே வன்முறை தடுப்புகளை ஆதரிப்பது போன்ற சில முன்னெடுப்புகளைக் குறிப்பிடலாம்.