Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நச்சுத் தேரைகளை கழுவி சாப்பிட்டு சேவை செய்யும் மக்கள் வெறுக்கும் பறவை

BBC
, வெள்ளி, 25 நவம்பர் 2022 (13:35 IST)
ஆஸ்திரேலியாவில் வெள்ளை அரிவாள் மூக்கன் (ஐபிஸ்) என்ற இந்தப் பறவை அளவுக்கு மிகவும் இழிவுபடுத்தப்படும் மிகச் சில உயிரினங்களே உள்ளன.

அது “பின் சிக்கன் (குப்பைத்தொட்டிக் கோழி)” என்ற பெயரைப் பெற்றுள்ளது. அது குப்பைகளைக் கிளறுவதும், மக்களுடைய கைகளில் இருந்தே உணவைப் பிடுங்குவதும் இந்தப் பெயர் பெறக் காரணம் என்கிறார்கள். ஒரு துப்புரவுப் பறவையைப் போல் எங்கிருந்து வேண்டுமானாலும் இது உணவை எடுத்துக் கொள்ளும்.

துப்புரவுப் பறவைகள் நன்மை பயக்கும் வேலையை செய்தாலும் இழிவாகப் பார்க்கப்படுவது உலகளாவிய பண்பாகவே தோன்றுகிறது. ஆனால், இந்த பார்வையைத் தாண்டி, இந்த வெள்ளை ஐபிஸ் பறவை வேறொரு வியப்பூட்டும் பண்பைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியர்கள் அதிகமாக வெறுக்கும் இன்னொரு உயிரினங்களில் ஒன்றை உண்ணக்கூடிய பழக்கத்தை இது உருவாக்கியுள்ளது. கேன் டோட் என்றழைக்கப்படும் ஒருவகை தேரைதான் அது உண்ணும் அந்த உயிரினம். இது நச்சுத்தன்மை கொண்ட, அதிகமாகப் பரவியுள்ள உயிரினம்.

கேன் தேரைகளுக்கு அந்நாட்டில் இயற்கையான வேட்டையாடி உயிரினங்கள் இல்லை. இதனால் இவை உள்நாட்டு உயிரினங்களின் எண்ணிக்கையில் அழிவை ஏற்படுத்தியது.

இந்தத் தேரையின் தோலில் நஞ்சு உள்ளது. அச்சுறுத்தல் ஏற்படும்போது அதனை வெளியிடுகிறது. இதனால் அதோடு தொடர்புகொள்ளும் பெரும்பாலான உயிரினங்கள் மாரடைப்பால் விரைவில் உயிரிழக்கின்றன.

ஆகையால் தான், ஐபிஸ் பறவை இந்தத் தேரைகளைக் கையாள்வதைப் பற்றிய ஒளிப்படங்களையும் காணொளிகளையும் தனது சமூக உறுப்பினர்கள் அனுப்பத் தொடங்கியபோது எமிலி வின்சென்ட் ஆச்சர்யப்பட்டார்.

சுற்றுச்சூழல் தன்னார்வ நிறுவனமான வாட்டர்கமினில் ஆக்கிரமிப்பு உயிரினங்கள் குறித்த நிகழ்ச்சிகளை நடத்தும் வின்சென்ட், ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையில் இந்த நடத்தை பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

“ஐபிஸ் பறவை தேரைகளைப் புரட்டிக் கொண்டிருந்தது. அவற்றைக் காற்றில் வீசியது. அதைப் பார்த்த மக்கள், ‘அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது!’ என்று ஆச்சர்யப்பட்டனர்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

“இதைச் செய்த பிறகு அவை ஈரமான புல்லில் தேரைகளைத் தேய்த்து துடைக்கின்றன அல்லது அவற்றை அருகிலுள்ள நீர்நிலைக்குக் கொண்டு சென்று சுத்தம் செய்கின்றன.”

தேரைகளை முழுவதுமாக விழுங்குவதற்கு முன்பாக அவற்றின் தோலில் இருக்கும் நஞ்சை நீக்குவதற்காக, “நன்கு அழுத்தம் கொடுத்துத் தேய்ப்பது, கழுவுவது போன்ற செயல்முறைகளைத் தொடர்ந்து செய்யும்” முறையை இந்தப் பறவைகள் மேற்கொள்வதாக அவர் நம்புகிறார்.

“இது ஆச்சர்யமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.”

“புத்திசாலி” பறவைகள்

பறவைகள் இந்த கேன் தேரைகளைச் சாப்பிடுவது இது முதல் முறையல்ல என்று பிபிசியிடம் கூறுகிறார் மக்வாரி பல்கலைக்கழகப் பேராசிரியர் ரிக் ஷைன்.

பாம்புகள், பாலூட்டிகள், முதலைகள் போன்ற உயிரினங்களைவிட பறவைகளுக்கு இவற்றுடைய நஞ்சின் பாதிப்பு குறைவாக இருப்பதைப் போல் தெரிகின்றது.

ஆனால், அதிகளவில் அதை எடுத்துக் கொண்டால் அவை இறக்கக்கூடும். அதுமட்டுமின்றி அவற்றின் சுவை மிகவும் “மோசமாக” இருக்கும் என்கிறார் பேராசிரியர் ஷைன்.

இந்த உயிரினங்கள் ஆஸ்திரேலியா முழுவதும் பரவியதால், பருந்து, காகம் போன்ற பறவைகள் அவற்றின் தோளிலுள்ள நஞ்சு சுரப்பிகளைத் தவிர்த்துவிட்டு எப்படிச் சாப்பிடுவது என்பதை விரைவாகக் கண்டுபிடித்துவிட்டன.

அவை தேரைகளைப் புரட்டிப் போட்டு, முதுகின் உட்புறத்தைக் கிழித்து, சுரப்பிகளை மட்டும் தீண்டாமலேயே விட்டுவிடுகின்றன.

ஆனால், 20 ஆண்டுகளாக தேரைகளைப் பற்றி ஆய்வு செய்து வரும் பேராசிரியர் ஷைன், இதை முழுவதுமாகச் சாப்பிடுவதற்கு இத்தகைய முறையைப் பயன்படுத்தியது குறித்துக் கேள்விப்படுவது இதுவே முதல் முறை.

“ஐபிஸ் பறவைக்கு நியாயமற்ற முறையில் தவறான பெயர் கிடைத்துள்ளது. ஆனால், இவை அறிவார்ந்த பறவைகள் என்பதை இந்தச் செயல்பாடு நிரூபிக்கிறது,” என்று வின்சென்ட் கூறுகிறார்.

எண்ணிக்கைப் பெருக்கத்தில் கட்டுப்பாடு

இந்தத் தேரைகள் இப்போது 2 பில்லியனுக்கும் மேல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், வின்சென்ட், பேராசிரியர் ஷைன் இருவரும் பூர்வீக உயிரினங்கள் இந்தத் தேரைகளுக்கு ஏற்ப புதியனவற்றைக் கற்றுக்கொள்கின்றன என்பதற்கு இதுவொரு நம்பிக்கைக்குரிய அறிகுறி என்கின்றனர்.

சில உயிரினங்கள் இத்தகைய இரைகள் “உணவுப் பட்டியலுக்கு மிக மோசமான தேர்வு” என்பதை மெல்ல மெல்ல உணர்ந்து கொண்டிருக்கின்றன. சில உயிரினங்கள் மரபணு மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. அவை இந்த நஞ்சுக்குக் குறைவான பாதிப்புகளையே சந்திக்கின்றன.

இன்னொருபுறம், ஐபிஸ் போன்ற பறவைகள் தேரைகளை எவ்வாறு பாதுகாப்பாகச் சாப்பிடுவது என்பதைக் கண்டுபிடித்துள்ளன. இது அவற்றின் எண்ணிக்கையை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர உதவும்.

“இந்தத் தேரைகள் நம்பமுடியாத இனப்பெருக்கத் திறனைப் பெற்றுள்ளன. எனவே சுற்றுச்சூழலில் இருந்து அகற்றப்படும் ஒவ்வொரு பெண் கேன் தேரையும் ஒவ்வோர் ஆண்டும் 70,000 புதிய கேன் தேரைகள் உற்பத்தியாவதைத் தடுக்கும்” என்கிறார் வின்சென்ட்.

இவற்றைக் கட்டுப்படுத்தும் சுமையைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிப்பது, ஆஸ்திரேலியா வெறுக்கக்கூடிய ஐபிஸ் பறவை, கொறித்துண்ணிகள், எறும்புகள் போன்றவைதான்,” என்கிறார் பேராசிரியர் ஷைன்.

“அந்த உயிரினங்கள் அனைத்தும் அனைத்தும் கண்ணுக்குத் தெரியாத ஒரு ராணுவத்தைப் போல் அற்புதமான வேலையைச் செய்கின்றன. அவை ஒவ்வோர் ஆண்டும் கேன் தேரைகளின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. ஆகையால் இந்த வெறுக்கப்படும் உயிரினங்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூபி மனோகரனின் இடைநீக்க உத்தரவுக்கு தடை: காங்கிரஸ் தலைமை அறிவிப்பு