Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நேரலையில் நெறியாளர் மீது துப்பாக்கி வைத்த கும்பல் - டி.வி. நிலையத்திற்குள் என்ன நடந்தது?

Ecuador

Sinoj

, புதன், 10 ஜனவரி 2024 (21:36 IST)
ஈக்வடார் நாட்டில் பல நாட்களாகத் தொடரும் வன்முறைகளின் உச்சக்கட்டமாக ஒரு தொலைக்காட்சி ஸ்டுடியோ மீதான தாக்குதலுக்குப் பிறகு குற்றக் கும்பல்களை "அழிக்க" அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
 
பொதுத் தொலைக்காட்சியான டிசி (TC)யில் ஒரு நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது முகமூடி அணிந்த, துப்பாக்கி ஏந்திய நபர்கள் ஸ்டுடியோவுக்குள் நேரடியாக நுழைந்து ஊழியர்களை தரையில் தள்ளி தாக்கினார்கள்.
 
இந்த சம்பவத்தில் இரண்டு ஊழியர்கள் காயமடைந்த நிலையில், 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
ஈக்வடாரில் திங்கள்கிழமை 60 நாள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதில் இருந்து குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
 
ஒரு மோசமான குற்றக் கும்பலின் தலைவர் அந்நாட்டு சிறையில் இருந்து தப்பியதை அடுத்து அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. குயாகுவிலில் உள்ள தொலைக்காட்சி ஸ்டுடியோவில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அதே நகரத்தில் உள்ள சிறையிலிருந்து தப்பிச் சென்ற நபருடன் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சோனெரோஸ் கும்பலின் தலைவரான அடோல்போ மசியாஸ் வில்லமர் அல்லது ஃபிட்டோ என அவர் நன்கு அறியப்பட்டுள்ளார்.
 
அதிபர் நோபோவா செவ்வாயன்று, நாட்டில் தற்போது ஒரு "உள் ஆயுத மோதல்" நிலவுவதாகவும், "பயங்கரவாத அமைப்புகள் மற்றும் போர்க் குணமிக்க குற்றக்கும்பல்கள் நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடுவதாக" கூறிய அவர், அந்த குற்றக் கும்பலை அழிக்க "இராணுவ நடவடிக்கைகளுக்கு" உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.
 
அண்டை நாடான பெருவில், நாட்டிற்குள் எந்த ஒரு குற்றக்கும்பல்களும் ஊடுருவிவிடாமல் இருக்க உடனடியாக ஒரு போலீஸ் படையை எல்லையில் நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவிட்டது.
 
ஈக்வடாரில் நடந்த "வெட்கக்கேடான தாக்குதல்களை" கண்டிப்பதாகவும், அதிபர் டேனியல் நோபோவா மற்றும் அவரது ஈக்வடார் அரசாங்கத்துடன் "நெருக்கமாக ஒருங்கிணைத்து" செயல்படுவதாகவும், "உதவி வழங்க தயாராக" இருப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
 
ஈக்வடார் உலகின் முன்னணி வாழைப்பழ ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகும். மேலும், எண்ணெய், காபி, கோகோ, இறால் மற்றும் மீன் பொருட்களையும் ஏற்றுமதி செய்கிறது. அந்தப் பிரதேசத்தில், அதன் சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் வெளியில் நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு கோக்கைன் என்ற போதைப் பொருளைக் கடத்தும் வழிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வெளிநாட்டு மற்றும் உள்ளூர் போதைப்பொருள் விற்பனை கும்பல்களுக்கு இடையே இது போன்ற சண்டைகள் நடக்கின்றன.
 
தொலைக்காட்சி நிலையத்தில் செவ்வாய்கிழமை நடந்த தாக்குதலின் போது, ​​துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர், தொலைக்காட்சி ஊழியர் ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து, ஒரு கைத்துப்பாக்கியையும் காட்டி மிரட்டினார்.
 
ஒரு பெண், "சுட வேண்டாம், தயவுசெய்து சுட வேண்டாம்" என்று கெஞ்சுவதையும் கேட்க முடிந்தது என ஏ,எஃப்,பி (AFP) செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ஒரு நபர் வெளிப்படையாக வலியில் அலறித் துடித்ததையும் கேட்க முடிந்தது.
 
"அவர்கள் எங்களைக் கொல்ல வந்தார்கள்" என்று ஒரு தொலைக்காட்சி ஊழியர் AFP க்கு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் அனுப்பிய செய்தியில் தெரிவித்தார். "கடவுளே இந்த கொடூர சம்பவம் நடப்பதை தடுத்து நிறுத்துங்கள். குற்றவாளிகள் அனைவரும் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின் மூலம் வெளியுலகிலும் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்."
 
இந்த தாக்குதலில் ஒரு ஒளிப்பதிவாளர் காலில் சுடப்பட்டதாகவும், மற்றொருவரின் கை முறிந்ததாகவும் செய்தித்துறை துணை இயக்குநர் தெரிவித்தார்.
 
"கவனமாக இருங்கள், அவர்கள் உள்ளே நுழைய முயற்சிக்கிறார்கள், அவர்கள் திருடுகிறார்கள், அவர்கள் எங்களை ஏமாற்றுகிறார்கள் என்று எங்கள் அலுவலகத்தின் மற்ற பணியாளர்கள் நாங்கள் காதுகளில் அணிந்திருந்த ஒலிவாங்கிகளின் மூலம் எங்களிடம் பேசிக்கொண்டே இருந்தனர்," என்று ஜார்ஜ் ரெண்டன் என்ற அந்தப் பணியாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
 
"ஸ்டுடியோவின் கதவுகள் மிகவும் தடிமனானவை. கிட்டத்தட்ட குண்டு துளைக்காதவை. அவர்கள் அந்த ஸ்டுடியோவுக்குள் நுழைய முயன்றனர். ஸ்டுடியோவுக்குள் நுழைந்து அவர்களின் அறிவிப்பை எங்கள் மூலம் வெளியிட முயன்றனர்," என்று அவர் கூறினார்.
 
“கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் ஆயுதங்களின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும்,” என என்று போலீசார் தெரிவித்தனர்.
 
தொலைக்காட்சி நிலையத்திற்குள் புகுந்த ஆயுததாரிகள் கைது செய்யப்பட்ட பின்னர் இந்தப் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
 
அதிபர் நோபோவின் அவசர நிலை பிரகடனம், சமீபத்திய சிறைக் கலவரங்கள் மற்றும் சிறைகளில் இருந்து தப்பித்தல் மற்றும் குற்றக் கும்பல் மீது அதிகாரிகளால் குற்றம் சாட்டும் பிற வன்முறைச் செயல்களின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையே ஆகும்.
 
அவரது ஆணையில் சோனெரோஸ் (மனாபி மாகாணத்தில் உள்ள சோன் நகரத்தின் பெயர்) மற்றும் 21 குற்றக் கும்பல்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
 
சிறையிலிருந்து ஃபிட்டோ தப்பித்ததைத் தொடர்ந்து வன்முறையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டJ/ திங்களன்று கலவரம் வெடித்த குறைந்தது ஆறு சிறைகளுக்குள் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் முயற்சித்து வருகின்றனர்.
 
சிஏஏ போராட்டம்: உமர் காலித் ஜாமீன் மனுவை ஓராண்டில் ஒருமுறை கூட விசாரிக்காத உச்ச நீதிமன்றம் - பட்டியலிடுவதில் விதிமீறலா?
 
செவ்வாயன்று குயாகுவிலில் கிரிமினல் கும்பலுடன் தொடர்புடைய தாக்குதல்களில் எட்டு பேர் கொல்லப்பட்டனர் என்பதுடன் மூன்று பேர் காயமடைந்தனர். அதே நேரத்தில் அருகிலுள்ள நகரமான நோபோல் நகரில் "ஆயுதத் தரித்த குற்றவாளிகளால்" இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
 
ரியோபாம்பா நகரில், மற்றொரு தண்டனை பெற்ற போதைப்பொருள் கும்பலின் தலைவர் உட்பட கிட்டத்தட்ட 40 கைதிகள் சிறையிலிருந்து தப்பியோடினர்.
 
குறைந்தது ஏழு காவல் அதிகாரிகளும் கடத்தப்பட்டனர் என்பதுடன் சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ ஒன்று, கடத்தப்பட்ட அதிகாரிகளில் மூவர் தரையில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. அவர்கள் மீது துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அதிபருக்கு ஒரு செய்தியைக் கூறச்செய்து அக்காட்சிகள் அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று AFP தெரிவித்துள்ளது.
 
"நீங்கள் போரை அறிவித்தீர்கள், உங்களை எதிர்த்தும் போர் தொடுக்கப்படும்" என்று குற்றக்கும்பலைச் சேர்ந்தவர்கள் எழுதிக் கொடுத்த காகிதத்தில் இருந்த அந்த அதிகாரி செய்தியைப் படிக்கிறார். "நீங்கள் அவசர கால நிலையை பிரகடனம் செய்தீர்கள். நாங்கள் காவல்துறை, பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை போரைத் தூண்டும் குற்றவாளிகளாக நாங்கள் அறிவிக்கிறோம்."
 
பாதுகாப்புக் காரணங்களுக்காக க்விட்டோவில் உள்ள அரசு வளாகத்தை காலி செய்ய காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
 
குவாயாகுவிலில் உள்ள தொலைக்காட்சி நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட செய்திக்குப் பின்னர் அந்நகரம் முழுவதும் குழப்பத்தில் தவிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் குய்டோவில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
 
"நகரத்தில் மிகவும் பதற்றமாகக் காணப்படுகிறது," என மரியோ யுரேனா என்பவர் கூறினார். "வேலை செய்யும் இடங்களில் இருந்து, மக்கள் முன்னதாகவே வீடு திரும்புகிறார்கள். மக்கள் அனைவரும் இப்படித்தான் வெளியேறுகிறார்கள். எல்லா இடங்களிலும் நிறைய போக்குவரத்து நெரிசலாக உள்ளதுடன் எச்சரிக்கை ஒலிகளையும் கேட்கவேண்டிய நிலையில் எங்கும் குழப்பமாக உள்ளது."
 
குவென்கா நகரத்தில் உள்ள மற்ற மக்கள் தொலைக்காட்சி நிலையம் கைப்பற்றப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக AFP இடம் தெரிவித்தனர்.
 
"ஈக்வடாரில், இதுபோன்ற விஷயங்களை நாங்கள் பார்த்ததில்லை. இங்கு ஒரு தொலைக்காட்சி சேனல் நடைமுறையில் துப்பாக்கி ஏந்திய குற்றக்கும்பலிடம் சிக்கிக்கொண்டு, துப்பாக்கிச் சூடு, குற்றவாளிகளுடன் ஒளிபரப்பு தொடங்குகிறது," என்று பிரான்சிஸ்கோ ரோசாஸ் கூறினார்.
 
"அப்படியானால் நாம் என்ன வகையான பாதுகாப்பு சூழ்நிலையில் இருக்கிறோம்? ஒரு தொலைக்காட்சி நிலையம் இந்த வகையான அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் போது, இந்த வகையான பாதுகாப்பின்மை காரணமாக சாதாரண பொதுமக்கள், வணிகர்கள், உணவகங்கள் அல்லது கடைகளின் நிலைகளைக் கற்பனை செய்து பாருங்கள்."
 
சமீபத்திய ஆண்டுகளில், நாட்டின் சிறைச்சாலைகள் எதிரி கும்பல்களைச் சேர்ந்த சிறைக்கைதிகளின் வன்முறைகள் மற்றும் சண்டைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் கைதிகள் பல படுகொலைகளை நடத்தும் இடங்களாக மாறியுள்ளன.
 
சமீப ஆண்டுகளில் ஈக்வடார் சிறைகளில் வெடித்த பல கொடிய கலவரங்கள் மற்றும் சிறைச் சண்டைகளுக்குப் பின்னால் சோனெரோஸ் ஒரு சக்திவாய்ந்த சிறைக் குற்றக் கும்பல் என்று கருதப்படுகிறது.
 
ஃபிட்டோவை வேறு சிறைக்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்ட நிலையில், அதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு தப்பியோடியதாகக் கருதப்படுகிறது. அவர் தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு சிறைக் காவலர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
 
அதிபர் வேட்பாளரும் ஊடகவியலாளருமான பெர்னாண்டோ வில்லவிசென்சியோவின் படுகொலைக்குப் பின் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று நவம்பரில் பதவியேற்ற அதிபர் நோபோவின் அரசாங்கத்திற்கும் ஃபிட்டோ தப்பியது ஒரு மிகப்பெரிய அடியாகும்.
 
க்விட்டோவில் அதிபர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை முடித்துக்கொண்டு திரும்பிய போது சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அதற்கு சில நாட்களுக்கு முன்பே ஃபிட்டோவிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக வில்லவிசென்சியோ முன்பே தெரிவித்திருந்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் புதிய மைல் கல்!