நடிகை ஷகிலாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கிறது. அந்த படத்துக்கு "ஷகிலா" என்றே பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
1990களில் இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்த நாயகியாகவும், வயது வந்தோருக்கான படங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர் வட்டத்தை சேர்த்தவர் நடிகை ஷகிலா.
அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியாயின. அப்போது வெளியாகும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கே அப்படங்கள் பெரும் சாவாலாக இருந்தன.
இதன் பிறகு கடந்த சில ஆண்டுகளாக ஆபாச படங்களில் நடிப்பதை தவிர்த்த ஷிகலா, சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கிறார். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஷகிலாவின் வாழ்கை வரலாறு படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இந்திரஜித் லங்கேஷ். இப்படம் நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கையை, ஆபாச படங்களில் நடித்ததற்காக, குடும்பத்தினராலேயே புறக்கணிக்கப்பட்ட சூழல், திரைத்துறையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஆகியவற்றை விவரிக்கிறது. அவரது கதாபாத்திரத்தில் இந்தி நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார்.
ஷகிலா, திரையில் கொடிகட்டிப்பறந்தபோது அவர் நடித்த படங்களை தடை செய்ய வேண்டும் என திரை உலகத்தினரே குரல் கொடுத்தனர். அந்த அளவுக்கு அவரது படங்கள் ஆபாசத்தை தூண்டுவதாக சர்ச்சை எழுந்தது. அந்த நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக ஷகிலா படம் வெளிவரவிருக்கிறது.
ஷகிலா
இப்படம் நேரடியாக இந்தி மொழியில் எடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.
இந்த படம் வெளியாவதையொட்டி ஷகிலா படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய நடிகை ஷகிலா, "என்னுடைய வாழ்க்கை வரலாற்று படம் நான் இருக்கும்போதே எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது" என்று கூறினார்.
"எனக்கு தெரிந்து நான் செய்த தவறை செய்யாதீர்கள். தற்போது சினிமா துறைக்கு வரும் நடிகைகள், படிக்கும் மாணவிகள் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள். அதைத்தான் என் புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். அதைத்தான் படமாக எடுத்து இருக்கிறார்கள். பெண்களுக்கு நல்லதொரு தகவல் தரும் களமாக இந்த திரைப்படம் இருக்கும்," என்றார் ஷகிலா