Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் பெண்கள்: "ஒவ்வொரு ஆணும் உங்களுடன் பாலுறவு வைத்து கொள்ள விரும்புவார்கள்" - பிபிசி புலனாய்வு

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (18:31 IST)
ஆப்கானிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் மீது பல பாலியல் புகார்கள் குவிந்துள்ளன. இவற்றை அந்த அதிகாரிகள் மறுத்தாலும், இது தொடர்பாக பிபிசி நடத்திய புலனாய்வில், பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்கள் அனுபவித்த பாலியல் தாக்குதல் குறித்து விவரித்தனர்.


 
காபூலை சுற்றியுள்ள மலைப்பகுதியின் அடிவாரத்தில் உள்ள ஒரு வீட்டில், முன்னாள் அரசு அதிகாரி ஒருவரை சந்தித்தேன். பின் விளைவுகள் ஏதேனும் ஏற்படுமோ என்று பயந்து, அவர் தனது பெயரை குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், அவர் தனது கதையை உலகிற்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.
 
அவரது முன்னாள் தலைமை அதிகாரி, அதாவது அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தன்னை தொடர்ந்து துன்புறுத்தியதாக அப்பெண் கூறுகிறார். ஒரு நாள் அந்த அமைச்சரின் அலுவலகத்திற்கு செல்லும்போது, தன்னை தாக்க முயன்றதாக அவர் தெரிவிக்கிறார்.


 
"என்னிடம் நேரடியாக வந்து பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு கேட்டார். என்னுடைய தகுதி மற்றும் வேலை அனுபவத்தை பற்றி அவரிடம் கூறினேன். அவர் என்னிடம் இதுபோன்று கேட்பார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் வெளியே செல்ல எழுந்து நின்றேன். என் கையை பிடித்து இழுத்து, அவரது அலுவலகத்திற்கு பின்புறம் இருக்கும் அறைக்கு என்னை கூட்டிச் சென்றார். என்னை அங்கு தள்ளி 'கொஞ்ச நிமிடங்கள்தான் ஆகும். கவலைப்படாதே. என்னுடன் வா!' என்று கூறினார்."
 
"நான் அவரை தள்ளிவிட்டு, என்னை கத்த வைக்க வேண்டாம் என்று எச்சரித்தேன். அதுதான் நான் அவரை கடைசி முறை பார்த்தது. நான் மிகுந்த கோபம் அடைந்தோடு, கவலையும் அடைந்தேன்" என்று அப்பெண் கூறினார்.
 
அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் புகார் தெரிவித்தாரா?
 
"இல்லை. என் வேலையை ராஜிநாமா செய்துவிட்டேன். எனக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை. நீங்கள் காவல்துறைக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ சென்றால், அங்கு எவ்வளவு ஊழல் நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் சென்று புகார் அளிக்க இங்கு பாதுகாப்பான இடம் ஏதுமில்லை. நீங்கள் பேசினால், அனைவரும் பெண்கள் மீதுதான் பழி போடுவார்கள்" என்று அவர் தெரிவிக்கிறார்.
 
தன்னுடன் பணிபுரிந்த வேறு இரு பெண்கள், அதே அமைச்சரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறியதாக இந்த முன்னாள் அரசு அதிகாரி தெவித்தார். இதனை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.


 
மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாலியல் தொழிலை ஊக்குவிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை அதிபர் அலுவலகம் மறுக்கிறது
"எந்த வெட்கமும் பயமும் இல்லாமல் அந்த அமைச்சர் இதனை செய்கிறார். ஏனென்றால் அவர் அரசாங்கத்தில் ஒரு செல்வாக்குள்ள மனிதர்" என்று கூறுகிறார் அப்பெண்.
 
பெண்கள் வாழ்வதற்கு மோசமான நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. 2018ம் ஆண்டு வெளியான ஐநா அறிக்கை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் ஒரு சில அழுத்தங்களால், கொடுத்த புகார்களை திரும்பப் பெற வேண்டிய நிலை இருப்பது குறித்து விவரிக்கிறது. பல சூழ்நிலைகளில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களில், பெண்களே குற்றஞ்சாட்டப்படுகின்றனர்.


 
இப்படியிருக்க, செல்வாக்குமிக்க ஆண்கள் தவறாக நடந்து கொண்டால், அதனை வெளியே பேசுவது சுலபமானது அல்ல.
 
அதனால்தான், நாம் ஆறு பெண்களிடம் பேசியும் அவர்கள் பெயர் சொல்லவே அஞ்சுகிறார்கள். ஆனால், அவர்களிடம் நாம் பேசியதில், ஆப்கான் அரசாங்கத்தில் இருக்கும் இந்த பாலியல் துன்புறுத்தல் பிரச்சனை, ஒருவரையோ அல்லது ஒரே ஒரு துறையையோ சார்ந்ததோ அல்ல என்பது தெரிய வந்தது.
 
'இது எங்கள் கலாசாரத்தின் அங்கமாகிவிட்டது'
தன் கதையை பகிர்ந்து கொள்ள விரும்பும் மற்றுமொரு பெண்ணை சந்தித்தேன். அவர் அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனியின் நெருங்கிய நபர் ஒருவரை சந்திக்க வேண்டும் என்று கூறப்பட்டபோது சற்று பதட்டமடைந்தார்.
 
"அதிபருடன் பல புகைப்படங்களில் நான் அந்த நபரை பார்த்திருக்கிறேன். அவரது தனி அலுவலகத்திற்கு என்னை வரச் சொன்னார். வந்து இங்கு அமரு, நான் உன் ஆவணங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறேன் என்று கூறினார். பின்னர் என்னிடம் நெருங்கி வந்த அவர், நாம் மது அருந்தலாம், பாலியல் உறவில் ஈடுபடலாம் என்று கூறினார்" என்கிறார் அந்தப் பெண்.
 
"என்னிடம் இரு வழிகள்தான் இருந்தன. ஒன்று ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது அங்கிருந்து வெளியேற வேண்டும். நான் ஒப்புக் கொண்டிருந்தால், அதோடு இந்த விஷயம் நின்றுருக்காது. பல ஆண்கள் இதுபோல என்னிடம் வந்து கேட்பார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பயத்தில் அங்கிருந்து வெளியேறிவிட்டேன்", என்றார்
 
பெண்கள் வாழ்வதற்கு மோசமான நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
உங்கள் வேலை என்ன ஆனது என்று கேட்டேன்.
 
அரசாங்கத்துறைக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக அவர் கூறினார்.
 
அப்போது அவரிடம் "வங்கிக்கணக்கில் இருந்து உங்களுக்கு பணம் வந்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் அதை வாங்கவில்லை" என்று தனக்கு தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
 
பேசிக்கொண்டிருக்கும்போதே உடைந்து அழுத அப்பெண், "இதனை நினைக்கும் போதெல்லாம் இரவில் தூங்க முடியவில்லை. கோபமாகவும் வேதனையாகவும் உள்ளது" என கூறினார்.
 
"நீங்கள் நீதிபதியிடமோ, போலீஸ், அரசு வழக்கறிஞர் என்று யாரிடம் போய் புகார் அளித்தாலும், அவர்களும் தங்களோடும் பாலியல் உறவில் ஈடுபடுமாறு உங்களை கேட்பார்கள். அப்படியிருக்க நீங்கள் யாரிடம் செல்ல முடியும்? இது ஒரு கலாசாரமாகிவிட்டது போல இருக்கிறது. உங்களை சுற்றி இருக்கும் அனைவரும் உங்களிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது போல இருக்கிறது" என்கிறார் அவர்.
 
இந்த விவகாரம் பல ஆண்டுகளாக வெளியே வராமல் இருந்தது. கடந்த மே மாதம், அதிபரின் முன்னாள் ஆலோசகர் ஜெனரல் ஹபிபுல்லா அஹ்மட்சாய் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பி, இது குறித்து ஆப்கன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
 
பாலியல் தொழிலை உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஊக்குவிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
 
வலி நிவாரண மாத்திரைகளுக்கு அடிமையான பெண் அதிலிருந்து மீண்ட கதை
முஸ்லிம் குழந்தைகளை அவர்கள் குடும்பத்திடம் இருந்து பிரிக்கும் சீனா
இது தொடர்பாக விளக்கம் பெற, அதிபர் அலுவலகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அது ஏற்கப்படவில்லை. அதேபோல மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கும் எந்த பதிலும் இல்லை.
 
ஜெனரல் ஹபிபுல்லாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானது என்று முன்னதாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையையே நம்மிடம் சுட்டிக்காட்டினர்.
 
இது குறித்து ஆப்கன் அரசின் பெண் அமைச்சர் நர்கிஸ் நெஹன் தனது ட்விட்டர் பதிவில், "ஆப்கன் அரசாங்க அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஒரு பெண்ணாக நான் கூறுகிறேன். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையற்றவை என நம்பிக்கையுடன் சொல்வேன்" என்று எழுதியிருக்கிறார்.
 
முன்னாள் எம்பியான பிரபல பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் ஃபவ்சியா கூஃபி கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள பல ஆண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் தமக்கு கிடைக்கப்பெற்றதாக தெரிவித்தார்.
 
ஃபவ்சியா கூஃபி
"இதற்கு காரணமான ஆண்கள், தங்களை அரசாங்கம் பாதுகாக்குமென எண்ணுகின்றனர். அதுவே, இது மாதிரியான தவறுகளை செய்ய அவர்களை ஊக்குவிக்கிறது" என்று அவர் கூறுகிறார்.
 
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்கக் குழு ஒன்றினை அரசாங்கம் அமைத்துள்ளது. அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தால் இது விசாரிக்கப்படும். இதற்காக அதிபரால் ஒரு நபர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
அட்டர்னி ஜெனரலின் செய்தித் தொடர்பாளர் ஜம்ஷித் ரசூலியை அவரது அலுவகத்தில் சந்தித்து பேசினேன். அவரது அலுவலகத்தில் அதிபர் கனியின் புகைப்படம் சுவரில் இருந்ததை பார்க்க முடிந்தது.
 
விசாரணை ஒருதலைபட்சமாக நடக்காது என்பதை மக்கள் ஏன் நம்ப வேண்டும்? என்று நான் அவரிடம் கேட்டேன்.
 
"அட்டர்னி ஜெனரல் சுதந்திரமாக செயல்பட அரசியல் சாசனம் உரிமை அளித்துள்ளது. இது ஒருதலைபட்சமாக இருக்காது என்று மக்களுக்கு உறுதியளிக்க, செயற்பாட்டாளர்கள், முஸ்லிம் மத குருக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளையும் இந்த விசாரணையில் அங்கம் வகிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.
 
அரசாங்க அமைப்புகளிடம் புகார் அளிக்கும் அளவுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று நான் சந்தித்த பெண்கள் கூறியதை அவரிடம் கூறினேன்.
 
"புகார் அளிக்கும் ஒவ்வொருவரின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்று நாங்கள் அறிவித்துள்ளோம்" என அவர் அதற்கு பதிலளித்தார். "எங்களுடன் யார் ஒத்துழைக்கிறார்களோ, நாங்கள் அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்க வழி செய்வோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
 
இது ஆப்கன் உள்நாட்டு விவகாரம் என்று கூறி இது தொடர்பாக கருத்து தெரிவிக்க, அந்நாட்டின் NATO தலைமையிலான பணியகம் மறுத்துவிட்டது. ஐ.நா பெண்கள் ஆணையத்திடம் பல முறை கருத்துக்கூற கோரிக்கை விடுக்கப்பட்டும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
 
ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஆபத்தான தருணத்தில் உள்ளனர். அமெரிக்கா மற்றும் தாலிபான் இடையே நடைபெற்று வரும் அமைதி பேச்சுவார்த்தைகள் குறித்து முடிவு எடுப்பதில் பெண்கள் உறுதியாக இருக்கின்றனர். 2001ம் ஆண்டு தூக்கியெறிப்பட்ட தாலிபான் ஆட்சிக்காலம் முடிந்ததில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள்.
 
ஆனால், அரசாங்கத்தில் நடைபெறும் இந்தப் பாலியல் தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படாமல் போனால், அவர்களின் இந்த முன்னேற்றம் சிதைந்து போகும்.
 
"பெண்களின் குரலை கேட்டு, அதனை ஒப்புக் கொள்ள வேண்டியது அதிபரின் பொறுப்பு என்பதை நான் அவரிடம் சொல்ல விரும்புகிறேன். நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று அவர் நினைத்தால், அவர் இந்தப் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும். ஒருநாள் உண்மை வெளிவரும். ஆனால், தற்போது அது ஒரு நீண்ட நாள் கனவாகவே உள்ளது" என்றும் நாம் நேர்காணல் எடுத்த பெண்களில் ஒருவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்