Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கையில் அதானி நிறுவன திட்டத்தை முறைகேடாக அனுமதிக்க முயற்சியா? அதனால் என்ன ஆபத்து?

இலங்கையில் அதானி நிறுவன திட்டத்தை முறைகேடாக அனுமதிக்க முயற்சியா? அதனால் என்ன ஆபத்து?

Sinoj

, செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (21:41 IST)
இலங்கையில் மன்னார் பகுதியில் அதானி நிறுவனத்தின் திட்டத்திற்கு முறைகேடாக அனுமதி தர அந்நாட்டு அரசு அமைப்புகள் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு உள்ளிட்ட ஆய்வுகள் அனைத்தும் அதானி நிறுவனத்திற்கு சாதகமாக நடத்தப்பட்டு அறிக்கை கொடுக்கப்பட்டிருப்பதாக புகார்கள் கூறப்படுகின்றன.
 
இலங்கையில் அதானி நிறுவனத்தின் திட்டம் என்ன? ராமர் பால் உள்பட பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்கள் அமைந்துள்ள அந்த இடத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதால் என்னென்ன பாதிப்புகள் வரக்கூடும்? இந்த திட்டத்திற்கு அதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மக்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
 
மன்னார் பகுதியின் அமைவிட சிறப்புகள்
உலகிலேயே பறவைகள் இடம்பெயர்ந்து செல்லும் முக்கிய எட்டு இடங்களில், தெற்கு ஆசிய மார்க்கத்தின் சொர்க்கமாக இலங்கை விளங்குகின்றது. பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் கடந்து, சுமார் 30 நாடுகளில் இடம்பெயர்ந்து இந்த பறவைகள் இலங்கைக்கு வருகின்றன. ஆண்டுக்கு சுமார் ஒன்றரை கோடி பறவைகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இலங்கைக்குள் பறவைகள் பிரவேசிக்கும் பிரதான மார்க்கமாக மன்னார் உள்ளது.
 
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட மாகாணத்தின் ஒரு அங்கமாக மன்னார் மாவட்டம் காணப்படுகின்றது. இந்த மாவட்டத்தில் கடல் தொழிலாளர்கள் அதிகளவில் காணப்படுகின்றனர். அதற்கேற்ற விசேஷமான ஒரு சூழல் கட்டமைப்பை இந்த மாவட்டம் கொண்டுள்ளது. இலங்கை வரலாற்றில் இணைந்ததான பூகோள ரீதியிலும் அரசியல் ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இந்த இடம் காணப்படுகின்றது. அதனால், மன்னார் மாவட்டத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் ஊடாக எழுகின்ற பிரச்னை, பறவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அமையாது.
 
ஆனால், அந்த மதிப்பீடுகளை பொருட்படுத்தாமல், புலம்பெயர் பறவைகள் இலங்கைக்குள் வராத காலப் பகுதியில், அரச நிறுவனங்கள் அறிவியல்பூர்வமற்ற சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து, அதானி கிரீன் எனர்ஜி ஸ்ரீலங்கா நிறுவனத்திற்கு, உத்தேச மன்னார் கற்றாலை மின்உற்பத்தி திட்டத்தை வழங்குவதற்கு தயாராகி வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
 
 
இலங்கை காற்றாலை திட்டம் - ''அதானியின் பாதையில் செல்ல பறவைகளுக்கு பறக்க கற்றுக்கொடுக்க வேண்டும்"பட மூலாதாரம்,GETTY IMAGES
காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கான அனுமதியை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்காக மக்கள் கருத்துக் கேட்பு மார்ச் மாதம் 6-ம் தேதி வரை இடம்பெறுகின்றது. எனினும், இவ்வாறு எழுகின்ற குற்றச்சாட்டுகளை இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்த நிபுணர் குழு ஆகியன நிராகரித்துள்ளன.
 
''இலங்கைக்கு வருகைத் தரும் புலம்பெயர் பறவைகளில் 10 லட்சம் வரை பறவைகள் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப் பகுதியில் மன்னாரில் தங்கிவிடும். எனினும், புலம்பெயர் பறவைகள் இல்லாத காலப் பகுதியில் ஆய்வுகளை நடாத்தி, அதில் புலம்பெயர் பறவைகளுக்கு பிரச்னை கிடையாது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும் தொழில்நுட்ப தவறாகும். இரண்டாவது விஷயம் என்னவென்றால், இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையான பகல் பொழுதில் நடந்து சென்று தயாரித்துள்ளனர். எனினும், ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள் இரவு நேரத்திலேயே பறப்பதாக செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக விஞ்ஞான ரீதியில் சுட்டிக்காட்டியுள்ளோம்.
 
இவ்வாறு பறந்து வரும் பறவை கூட்டத்தில், சில வேளைகளில் இரண்டரை முதல் நான்கு லட்சம் வரையான பறவைகள் காணப்படுகின்றன. அப்படியென்றால், பகல் பொழுதில் வனப் பகுதிகளில் தங்கியிருந்து, இரவு வேளைகளில் பறக்கும் பறவைகள் தொடர்பில் எவ்வாறு கூற முடியும்? என கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியர் சம்பத் சேனவிரத்ன, பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.
 
 
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை: பறவைகளுக்கான தாழ்வாரங்கள் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.
 
''புறவைகளுக்கு செல்ல பாதையொன்று அமைக்கப்பட்டுள்ளதாக நகைச்சுவையொன்று இதில் கூறப்பட்டுள்ளது. அதனூடாக செல்ல வேண்டும் என்றால், திருப்புமுனைகளில் பெயர் பலகைகள் இருக்க வேண்டும். அதானியின் வரைபடத்தையும், சுற்றாடல் அதிகார சபையின் வரைபடத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, அந்த பாதைக்கு இடையிலும் காற்றாலைகள் காணப்படுகின்றன.
 
அதானியின் பாதையில் செல்வதற்கு பறவைகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இந்த இடத்தில் எப்படியாவது காற்றாலை திட்டத்தைக் கொண்டு வரும் வகையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது" என அவர் மேலும் கூறுகின்றார்.
 
பறவைகளின் சொர்க்கமாக காணப்படுகின்ற மன்னார் தீவும், அதனை அண்மித்துள்ள பகுதிகளும் விஞ்ஞான ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகின்றது. ராமர் பாலம் (ஆதாம் பாலம்) தேசிய பூங்காவாகவும், விடத்தல் தீவு இயற்கை வனப் பகுதியாகவும், வங்காலை புனித பூமியாகவும் சர்வதேச ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
 
எனினும், ராமர் பாலத்தை (ஆதாம் பாலம்) தேசிய பூங்கா பட்டியலிலிருந்து நீக்குவதற்கும், விடத்தல் தீவை இயற்கை வனப் பகுதியிலிருந்து விடுவிப்பதற்கும் வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே, இந்த காற்றாலை திட்டம் பேசுபொருளாக மாறியுள்ளது.
 
 
உத்தேச மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 250 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், புதிதாக 52 காற்று விசையாழிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. தம்பவாணி காற்றாலை திட்டத்திற்கு இணையாக மன்னார் தீவில் பெரும்பாலான பகுதிகளில் புதிய காற்றாலை விசையாழிகளை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அறிக்கையினூடாக அறிய முடிகின்றது.
 
ஆண்டொன்றில் 1048 மணித்தியாலங்களுக்கான ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக ஆண்டொன்றில் 8 லட்சம் டன் கரியமில வாயு உமிழ்வை குறைக்கும் என கூறப்படுகின்றது. இதற்காக ஆண்டொன்றிற்கு 1.8 கோடி ரூபாய் எரிபொருளுக்காக செலவிடப்படவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையினால் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி வெளியிடப்பட்ட 1852/2 என இலக்கமிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிக்கையின் பிரகாரம், மின்உற்பத்தி அபிவிருத்தி பிரதேசத்திற்குள் 202 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
 
 
மன்னார் மற்றும் புனரீனில் 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை தொடங்க இலங்கை அரசுடன் அதானி ஒப்பந்தம் செய்துள்ளது.
 
அதானி நிறுவன திட்டத்தை முறைகேடாக அனுமதிக்க முயற்சியா?
"இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை இந்த திட்டத்தின் திட்ட முன்மொழிவாளராக செயற்பட்டு வருகின்றது. இது சட்டவிரோதமானது" என கலாநிதி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
''இதில் மூன்று விதமான தவறுகள் காணப்படுகின்றன. சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு அறிக்கையை சுற்றாடல் அதிகார சபை தயார் செய்து, அதற்கேற்ற சரியான இடத்தை தெரிவு செய்ய வேண்டும். ஆனால் மாற்று இடத்தை தேர்வு செய்வதனை தவிர்த்து, சுற்றாடல் அதிகார சபை முதலில் தெரிவு செய்ய மன்னாரையே பொய்யான முறையில் பெயரிடுகின்றது.
 
சுற்றாடல் சட்டத்தின் பிரகாரம், மாற்று இடம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இரண்டாவது, அதானி நிறுவனத்திற்காக இந்த திட்டத்தை அரசாங்கத்தின் ஒழுங்குபடுத்தல் நிறுவனமான இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையே நிர்வகித்து வருகின்றது. எப்படி அது நடக்க முடியும்.
 
மூன்றாவது, இந்த இடத்தை முன்மொழிந்தவராக எடுத்துக்கொண்டு, மூன்றாவது நபருக்கு வழங்கினால், அதற்கான முறை என்ன? அப்படியொன்றால், விலை மனு கோரப்பட்டு, தகுதியானவர் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால், அதானி முன்னராகவே தெரிவு செய்யப்பட்டு, அதனை அவருக்கு வழங்க முயற்சிப்பார்களாயினும், அது பாரிய முறைகேடாகும்" என கலாநிதி ஜகத் குணவர்தன தெரிவிக்கின்றார்.
 
''சட்டத்தை எப்படி விளக்குவது என தெரியவில்லை"
ஒழுங்குப்படுத்தல் நிறுவனமாக செயற்படுகின்ற அரச நிறுவனமொன்று, திட்டத்தின் முன்மொழிவாளராக செயற்படுகின்றமையின் சட்ட பின்னணி என்னவென்றது தொடர்பில் நாம், இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் ரஞ்ஜித் சேபாலவிடம் வினவினோம்.
 
எனினும், அவர் சட்டத்தின் பின்னணி குறித்து தெளிவூட்டுவதற்கு பதிலாக, முதலீட்டாளருக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்தும் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
 
''சட்டத்தை எப்படி விளக்குவது என்பது தொடர்பில் எனக்கு தெரியாது. நாங்கள் திட்ட முன்மொழிவாளர்கள் என விண்ணப்பமொன்றை முன்வைத்தோம். இந்த திட்டம் எங்களுடைய அதிகாரத்தினால் செயற்படுத்தப்படுகின்றது என இதனூடாக குறிப்பிடப்படவில்லை. இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவையான அனைத்து அங்கீகாரங்களையும் பெற்றுக்கொடுப்பதையே நாம் செய்கின்றோம்.
 
முதலீட்டாளர்கள் வந்து இதனை செய்வதற்கு இரண்டு மூன்று வருடங்கள் சென்றுவிடும். அப்படியென்றால், முதலீட்டாளர்கள் வருகை தர மாட்டார்கள். முதலீடு செய்ய தயார் என்ற அடிப்படையிலேயே நாம் இதனை செய்கின்றோம். அதில் எமக்கு ஏதேனும் செலவீனங்கள் ஏற்படும் பட்சத்தில் அதனை நாம் அறவிட்டுக் கொள்வோம். இதுவே எமது கொள்கையாகும்" என அவர் பதிலளித்தார்.
 
 
“அந்தச் சூழலை தேவையில்லாமல் மாற்றினால் மன்னாரில் வசிக்கும் சுமார் 70,000 மக்கள் தண்ணீரை இழக்க நேரிடும்"
 
 
இந்த திட்டத்திற்கான சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பில் அறிக்கையை ரமணி எல்லேபொல தலைமையிலான புத்திஜீவிகள் குழு தயாரித்துள்ளது. பறவைகள் மற்றும் மிருகங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து கொழும்பு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் தேவக்க வீரகோன், மூலிகைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாக கலாநிதி ஹிமேஷ் ஜயசிங்க, நீர்நிலைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து டி.ஏ.ஜே.ரண்வல ஆகியோர் ஆராய்ந்துள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்காக பேரை கொண்ட குழுவொன்று ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளது.
 
இந்த ஆய்வு குழுவின் பிரதானியாக செயற்பட்ட ரமணி எல்லேபொல, பிபிசி சிங்கள சேவைக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
 
''அதானிக்கு தேவையான திட்டத்திற்கு நாம் அனுமதி வழங்கியதாக கூற முடியாது. சுற்றுச்சூழல் நிலைமைகளை ஆராய்ந்து சில காற்றாலை விசையாழிகளை அகற்றியுள்ளோம். சில விசையாழிகள் நிர்மாணிக்கப்பட்ட இடங்களை மாற்றியுள்ளோம்."
 
இதேவேளை, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை புலம்பெயர் பறவைகள் தொடர்பாக ஆய்வுகளை நடாத்தினோம். எனினும், இரவு வேளைகளில் பறவைகள் தொடர்பாக ஆராயவில்லை என, கலாநிதி தேவக்க வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
 
''இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளமையினால், பறவைகள் வருவது குறைவாக இருக்கும். நாங்கள் பெரியளவிலான தாக்கத்தை இதற்கு செலுத்தவில்லை. நாம் சேகரித்த தரவுகளின் அடிப்படையிலும், மாதிரி அறிக்கையின் அடிப்படையிலும் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. காற்றாலை விசையாழிகளில் பறவைகள் மோதுகின்றன. அதனை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர முடியாது. பறவைகள் மோதுவதை குறைக்கும் வகையிலேயே நாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்" என கலாநிதி தேவக்க வீரகோன் தெரிவிக்கின்றார்.
 
ன்னாரில் இயங்கி வரும் தம்பவானி மின் உற்பத்தி நிலையத்தினால் பறவைகள் இறப்பது முந்தைய மதிப்பீடுகளை விட அதிகமாகும்.
 
தம்பவாணி என்ற பெயரில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான காற்றாலை மின்உற்பத்தி நிலையம் மன்னாரில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தை நிர்மாணிக்கும் போது, சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பில் ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
 
எனினும், இந்த மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படுகின்ற பறவைகளின் மரணங்களின் எண்ணிக்கை, ஆய்வுகளின் ஊடாக மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக காணப்படுகின்றது. இந்த மின் உற்பத்தி நிலையத்தின் விசையாழிகள், கரையோர பகுதியொன்றை அண்மித்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும், அதானி நிறுவனத்தின் திட்டத்தினால் மன்னார் தீவு பகுதியில் பெரும் பகுதியை ஆக்கிரமித்து விசையாழிகள் இயங்கவுள்ளன. அதனால், அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது" என சுற்றாடல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
உத்தேச காற்றாலை திட்டத்தின் ஒரு விசையாழியை ஸ்தாபிப்பதற்காக 27 மீட்டர் விட்டத்தை கொண்ட நிலப் பரப்பு தேவைப்படுகின்றது. அத்துடன், ஒவ்வொரு காற்றாலை விசையாழியை சூழவும் 17 மீட்டர் நீளமான பிரவேச மார்க்கம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வீதிகள் நிர்மாணிக்கப்படுவதால், இயற்கை நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு, மன்னார் பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் நிலைமை ஏற்படக் கூடும் என, சுற்றாடல் நீதிக்காக நிலையத்தின் மூத்த ஆலோசகர் ஹேமந்த விதானகே தெரிவிக்கின்றார்.
 
''நாங்கள் முன்னர் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை ஸ்தாபிக்கும் போது, மன்னாரில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என அறிந்திருக்கவில்லை. எனினும், வீதிகள் அமைக்கப்பட்டதன் பின்னர் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய 7 அல்லது 8 இடங்களை மத்திய சுற்றாடல் அதிகார சபை அடையாளம் கண்டுள்ளது. மன்னாரின் பல பகுதிகளில் வறட்சியான இடங்கள் காணப்படுகின்றன.
 
நீர் இருக்கும் இடத்திலிருந்தே மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்கின்றார்கள். எமக்கு தேவையான விதத்தில் சூழலை மாற்றியமைக்க முயற்சித்தால், மன்னாரில் வாழ்கின்ற சுமார் 70,000 பேருக்கு நீர் இல்லாது போகும். அதற்கு மேலதிகமாக காற்று காணப்படுகின்ற இடங்களில் நிழல் காணப்படுவதை உணர முடியும்" என அவர் கூறுகின்றார்.
 
சுற்றாடல் பாதிப்புகளை மதிப்பீடு செய்த அறிக்கையின் ஊடாக அடையாளம் கண்டுள்ள பிரச்னைகளை குறைத்துக்கொள்வதற்கு, அவர்கள் தயாரித்த அறிக்கையிலேயே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இணையதளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அவற்றை பதிவிறக்க முடியும்.
 
இதுதொடர்பான கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்றால், மார்ச் மாதம் 06ம் தேதிக்கு முன்னர் dg@cea.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக கருத்து களை பகிர்ந்து கொள்ள முடியும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ச் 3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்