Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"ஆர்க்டிக் பனி உருகுவதால் புதிய வைரஸ்கள், வலிமையான பாக்டீரியாக்கள் பரவலாம்"!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (10:22 IST)
புவி வேகமாக வேகமாக வெப்பமடைந்துஆர்க்டிக்ப் பனிப்படலம் உருகுவகுதால், அணுக்கழிவுகள், கண்டுபிடிக்கப்படாத வைரஸ்கள், ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு மதிக்காத பாக்டீரியாக்கள் பரவலாம் என ஓர் அறிக்கை கண்டறிந்துள்ளது.
 
பனி உருகுவதால், பனிப்போர் காலத்து அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், அணு உலைகள், சுரங்கங்களிலிருந்து ஏற்படுட்ட சேதங்கள் போன்றவை வெளிப்படலாம் என அவ்வறிக்கை கூறுகிறது.
 
ஆர்க்டிக் பகுதியில் பனியில் உறைந்திருக்கும் 90 லட்சம் சதுர மைல் பரப்பளவு சுமார் 10 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்க்டிக்கின் பெரும்பகுதி இன்னும் முழுமையாக அறியப்படவில்லை என்று கூறுகிறார் அபெரிஸ்ட்வெத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும் இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியருமான முனைவர் அர்வின் எட்வர்ட்ஸ்.
 
முனைவர் எட்வர்ட்ஸ், அமெரிக்க பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்வியாளர்களுடனும், தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் புரொபல்ஷன் ஆய்வகத்துடனும் இணைந்து இவ்வறிக்கையை எழுதினார்.
 
இயற்கை செயல்முறைகள், விபத்துக்கள், மனிதர்கள் வேண்டுமென்றே சேமித்து வைத்திருக்கும் பொருட்கள் ஆர்க்டிக் பகுதியில் பல்வேறு வகையான வேதிக் கலவைகள் உள்ளன.
 
அணுக்கழிவுகள், வைரஸ்கள், வேதிப் பொருள்கள்
பெர்மா ஃப்ரோஸ்ட் எனப்படும் நிரந்தர பனிப்படலங்கள் நிலைகுலைந்து உருகி வருவது பசுமை இல்ல வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடுவதற்கான ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
 
இதன் தாக்கங்கள் மிகப் பரவலாக இருக்கும் என்றும், அணுக்கழிவுகள், கதிர்வீச்சு, அறியப்படாத வைரஸ்கள் மற்றும் கவலைக்குரிய பிற வேதிப் பொருள்கள் வெளியாவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பது குறைவாகவே புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாக இந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
1955 முதல் 1990 ஆம் ஆண்டுக்கு இடையில், சோவியத் யூனியன் 130 அணு ஆயுத சோதனைகளை வளிமண்டலத்திலும், வடமேற்கு ரஷ்யாவின் கடற்கரையில் நோவயா ஜெம்லியா தீவுக்கூட்டத்தின் கடலிலும் நடத்தியது.
 
சோதனைகளில் 224 தனித்தனி வெடி சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன, சுமார் 265 மெகா டன் அணுசக்தி வெளிப்பட்டது. ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அருகிலுள்ள காரா மற்றும் பேரன்ட்ஸ் கடல்களில் சிதறடிக்கப்பட்டன.
 
ரஷ்ய அரசாங்கம் ஒரு முக்கிய தூய்மைப்படுத்தும் திட்டத்தை தொடங்கிய போதிலும், கடலடி வண்டல் பகுதி, தாவரங்கள் மற்றும் பனிக்கட்டிகளுக்கு இடையில் கதிரியக்க பொருட்களான சீசியம், புளூட்டோனியம் கொண்டு அதிகம் சோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாக மதிப்பாய்வு குறிப்புகள் கூறுகின்றன.
 
கிரீன்லாந்தில் உள்ள அமெரிக்காவின் கேம்ப் செஞ்சுரி என்கிற பனிஅடுக்குகளின் கீழ் அணுசக்தியால் இயங்கும் ஆராய்ச்சி மையமும் கணிசமான அணு மற்றும் டீசல் கழிவுகளை உற்பத்தி செய்தது.
1967 ஆம் ஆண்டு அவ்வாராய்ச்சிக் கூடத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன, ஆனால் அதன் கழிவுகள் பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பாறைகள் குவியும் இடத்தில் விடப்பட்டன. அது கிரீன்லாந்து பனிஅடுக்குகளில் ஏற்படும் மாற்றங்களால் நீண்ட கால அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.
 
1968ஆம் ஆண்டில், அதே நாட்டில் நடத்தப்பட்ட துலே குண்டுவெடிப்பு (Thule bomber crash) கிரீன்லாந்து பனிக்கட்டியில் பெரிய அளவில் புளூட்டோனியத்தை வெளிப்படுத்தியது.
 
ஆண்டிபயாடிக் மருந்துக்கு மதிக்காத பாக்டீரியா?
 
பூமியிலேயே, மூன்று மீட்டருக்கும் அதிகமான ஆழம் உள்ள பெர்மாஃப்ரோஸ்ட் போன்ற நிரந்தர உறைபனிப் பகுதிகள் போன்ற சில இடங்கள் தான் ஆன்டிபயாடிக் மருந்துகளையே எதிர் கொண்டிருக்காது.
 
சைபீரியாவின் ஆழமான நிரந்தரப் பனிப் படலத்தில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட பல்வேறு நுண்ணுயிர்கள் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு ஆற்றல்மிக்கதாக இருப்பதாகவும், அந்தப் படலம் உருகினால் அது நீரில் கலந்து புதிய ஆன்டிபயாடிக் எதிர்ப்பு சக்தி கொண்ட புதிய பாக்டீரியா திரிபுகளை உருவாக்கும் சாத்தியம் உள்ளது என்றும் கூறுகிறது இந்த ஆய்வு.
 
பெர்மாஃப்ரோஸ்டின் அடுக்குகள் திடீரென ஆபத்தான முறையில் வெளிப்படும் போது, தொடர்ந்து பல்லாண்டு கால உயிரினங்கள் ஒரே நேரத்தில் வெளிப்படும் வாய்ப்பை இது அதிகரிக்கிறது.
 
புதைபடிவ எரிபொருள்கள்
 
தொழில் புரட்சியின் தொடக்கத்திலிருந்து புதைபடிவ எரிபொருட்களின் கழிவுப் பொருள்கள் சுற்றுச்சூழலில் இருக்கின்றன. ஆர்க்டிக்கில் ஆர்சனிக், பாதரசம், நிக்கல் போன்ற உலோகங்களும் இயற்கையாகவே இருக்கின்றன.
 
பல பத்தாண்டுகளாக இப்பகுதியில் சுரங்கப் பணிகள் நடப்பதால், பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் உள்ள கழிவுப் பொருட்கள் பெரும் மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளன என்று அந்த அறிக்கை கூறுகிறது.
 
பெர்மாஃப்ரோஸ்டுக்குள் முற்காலத்தில் படிந்த அதிக செறிவுள்ள மாசுபாடுகளை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள், வேதிப் பொருள்கள் மீண்டும் வளிமண்டலத்தில் கலந்து, மனித உணவு சங்கிலிக்குள் நுழையலாம்.
 
வளங்களை பிரித்தெடுப்பது, ராணுவப் பணிகள், அறிவியல் திட்டங்கள் போன்ற காரணங்களுக்காக கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் நிரந்தர உறைபனியில் உருவாக்கப்பட்டன. இவற்றால் நிரந்தர உறைபனியில் சிக்கியுள்ள வேதிப் பொருள்கள், மாசு ஏற்படுத்தும் பொருள்கள் உள்ளிட்டவை வெளியேறும் சாத்தியத்தை அதிகரிக்கின்றன.
 
அது குறித்து இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. இந்த தாக்கத்தின் அளவைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. எனவே இந்த அபாயம் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள இப்பகுதியில் இன்னும் விரிவான ஆராய்ச்சிகள் தேவை என அவ்வறிக்கை கூறுகிறது.
 
"ஆர்க்டிக்கின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் பூமியின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கும். ஏனெனில் அது வளிமண்டலத்திற்கு கார்பனைத் திருப்பி அனுப்பி, கடல் மட்டத்தை உயர்த்துகிறது" என்கிறார் அபெரிஸ்ட்வெத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் அர்வின் எட்வர்ட்ஸ்.
 
"வெப்பமடைந்து வரும் ஆர்க்டிக்கில் இருந்து மற்ற அபாயங்கள் எப்படி வரலாம் என்பதை இந்த ஆய்வுக் கட்டுரை அடையாளம் காட்டுகிறது. இது பசுமை இல்ல வாயுக்கள் மட்டுமின்றி, தீங்கு விளைவிக்கும் விஷயங்களுக்கான குளிர்சாதன உறை பெட்டிபோல் இது இருந்திருக்கிறது."
 
"இந்த தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள், மாசுபடுத்திகள், அணுசக்தி பொருட்கள் மற்றும் அதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்" என்கிறார் அர்வின் எட்வர்ட்ஸ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments