Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பறக்கும் மர்மப் பொருள்கள் வேற்றுக்கிரக வேலையா? ஆராய குழு அமைத்த அமெரிக்க ராணுவம்

பறக்கும் மர்மப் பொருள்கள் வேற்றுக்கிரக வேலையா? ஆராய குழு அமைத்த அமெரிக்க ராணுவம்
அமெரிக்காவின் பாதுகாக்கப்பட்ட வான் பரப்பில் 'பறக்கும் மர்மப் பொருள்கள்' காணப்பட்டது தொடர்பான தகவல்களைப் பற்றி ஆராய ஒரு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளது அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன்.

ஆர்வமூட்டும் பொருள்கள் பற்றி ஆராய்ந்து, தொடர்புடைய அச்சங்களைப் போக்க இந்தக் குழு உழைக்கும் என்று செவ்வாய்க்கிழமை பென்டகன் அறிவித்துள்ளது.
 
இந்த பறக்கும் மர்மப் பொருள்களை ராணுவ விமானிகள் பார்த்துக் குழம்பியுள்ளனர். இவை குறித்து தகவல்களும் அளித்துள்ளனர்.
 
பறக்கும் மர்மப் பொருள்கள் தோன்றியதாக வந்த இத்தகைய 144 தகவல்களை ஆராய்ந்து உண்மையை வெளிக்கொண்டுவரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராணுவ அறிக்கை ஒன்று கடந்த ஜூன் மாதம் வெளியானது. ஆனால், பறக்கும் மரமப் பொருள் குறித்து எந்த விளக்கத்தையும் அந்த அறிக்கையால் தர முடியவில்லை.
 
ஆனால், இந்தப் பொருள்கள் வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற கோணத்தை இந்த அறிக்கை மறுக்கவில்லை.
 
இந்த மர்மப் பொருள்கள், கண்மூடித்தனமாக வானில் பறப்பதாக பல தருணங்களில் அமெரிக்க ராணுவம் பதிவு செய்த இந்த தகவல்களைப் பற்றி ஆராய்ந்து ஓர் அறிக்கை அளிக்கும்படி அமெரிக்க நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து ஜூன் மாதம் அந்த அறிக்கை வெளியானது. ஆனால், அந்த அறிக்கையால் விளக்கம் எதையும் தர முடியாத நிலையில், இப்போது புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் புதிய குழுவை உயர் மட்ட ராணுவ, உளவுத் துறை நிர்வாகிகள் மேற்பார்வை செய்வர்.
 
'ஏர்பார்ன் ஆப்ஜக்ட் ஐடென்டிஃபிகேஷன் அன்ட் மேனேஜ்மென்ட் சின்க்ரனைசேஷன் குரூப்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் குழு ஆர்வமூட்டும் பொருள்களை கண்டுபிடித்து, அடையாளம் கண்டு அவை என்ன என்பதையும் விளக்கும் என்று பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் கத்லீன் ஹிக்ஸ் பென்டகன் தலைமைக்கு செவ்வாய்க்கிழமை அளித்த ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 
உளவு கண்டுபிடிப்பு திறனில் உள்ள குறைபாடுகளை களைவது, உளவு மற்றும் எதிர் உளவுத் தகவல்களை அலசி ஆராய்வது, இந்த விவகாரம் குறித்து கொள்கைகளைப் பரிந்துரைப்பது ஆகியவையே இந்த இந்தக் குழுவுக்கான வழிகாட்டு நெறிகள்.
 
அடையாளம் காணப்பட்ட அல்லது அடையாளம் காணமுடியாத எல்லா வான்வழி ஊடுருவல்களையும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், அவை ஒவ்வொன்றையும் ஆராய்வதாகவும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
 
ஜூன் மாதம் வெளியான அறிக்கையில் சவால்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை ஏற்றுக்கொள்வதாகவும் கத்லீன் ஹிக்ஸ் அளித்த குறிப்பு கூறுகிறது.
 
2004ம் ஆண்டு முதல் பறக்கும் மர்மப் பொருள்களைப் பார்த்ததாக செய்யப்பட்ட 144 பதிவுகளில் ஒரே ஒரு நிகழ்வுக்கு மட்டும் விளக்கம் கிடைத்துள்ளது. மீதி 143 நிகழ்வுகளுக்கு எந்த விளக்கமும் இல்லை.
 
இதெல்லாம் வேற்றுக்கிரக நடவடிக்கையாக இருக்கும் என்று குறிப்பிட போதுமான அறிகுறிகள் இல்லை என்று கூறும் பென்டகன், அவை வேற்றுக்கிரக நடவடிக்கையாக இருப்பதற்கான வாய்ப்புகளையும் மறுக்கவில்லை.
 
பதிவு செய்யப்பட்ட 144 நிகழ்வுகளில் ஒன்று பெரிதாக ஊதப்பட்ட பலூனாக இருக்கும் என உறுதியாக நம்பப்படுகிறது. பிற நிகழ்வுகள் பற்றி தெரியவில்லை.
 
ஆனால், அவை சீனா, ரஷ்யா போன்ற பிற நாடுகளின் அதி உயர் தொழில்நுட்ப நடவடிக்கையாக இருக்கலாம், ரேடார் அமைப்புகளில் தென்பட்ட பனிப்படிகம் போன்ற இயற்கைப் புலப்பாடுகளாக அவை இருக்கலாம், அல்லது சில அமெரிக்க நிறுவனங்களின் ரகசிய நடவடிக்கையாக இருக்கலாம் என்பது உள்ளிட்ட விளக்கங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், தெளிவான விளக்கம் இதுவரை கிடைக்கவில்லை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 ஆயிரமாக பதிவான தினசரி கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!