ரவி பிரகாஷ்
கொலைசெய்யப்பட்ட மூன்றுபேர்
மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்திலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஜியாகஞ் கிராமம். இந்த கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஒரு புறம் வீட்டிற்குள் நுழைந்து மூன்று பேரைக் கொன்றதைப் பற்றியும் இன்னொரு புறம் இறந்த நபருக்கு ஆர்எஸ்எஸுடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டும் வருகிறது.
இந்த கொலைகள் தொடர்பான நிறையக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
மேற்கு வங்க காவல்துறையினர் மற்றும் சிஐடி இந்த கொலைகள் தொடர்பான மர்மங்களைக் களைய முயற்சி செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
ஆனால் சிலரை காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த நபர்களில் இறந்த பந்து பிரகாஷ் பாலின் தந்தை அமர் பாலும் ஒருவர். இந்த விசாரணையில் உள்ளவர்கள் யாரும் இந்து அல்லாத வேற்று மதத்தவர்கள் கிடையாது. விசாரணை முடிந்ததும் காவலில் உள்ளவர்கள் சிலர் விடுவிக்கப்படலாம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஆர்எஸ்எஸுடனான சம்பந்தம்
இறந்த பந்து பிரகாஷ் பாலின் தாய் தன்னுடைய மகனுக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதனால் இந்த கொலைகளைப் பற்றிய மர்மங்கள் இன்னும் ஆழமாகிக் கொண்டே போகின்றன. யார் என்ன காரணத்திற்காகப் பந்து பிரகாஷ் பால். அவருடைய கர்ப்பிணி மனைவி பியூட்டி பால் மற்றும் அவர்களின் 7 வயது மகன் ஆர்ய பால் ஆகியோரை கொடூரமாகக் கொலை செய்தார்கள் என்பது சரிவரக் கணிக்க முடியவில்லை.
இந்த கொலைகள் அரசியல் காரணமாக இல்லாமல் வேறு ஏதோ சொந்த காரணங்களுக்காக நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இப்போதுவரை நடந்த விசாரணையில் இந்த மூன்று கொலைகளுக்குக் காரணம் சமூக வலைத்தளத்தில் கூறப்பட்டது போன்று அரசியலோ மதமோ இல்லை என்பது தெரிய வந்துள்ளது என மேற்கு வங்கத்தின் கூடுதல் காவல்துறைத் தலைமை இயக்குநர்(சட்டம் மற்றும் ஒழுங்கு) ஞானவந்த் சிங் கூறியுள்ளார்.
இறந்து போன பந்து பிரகாஷ் பால் ஒரு ஆசிரியர். இதைத் தவிர்த்து அவர் காப்பீடு திட்டம் மற்றும் செயின் மார்கெட்டிங்கில் இருந்துள்ளார். இந்த கொலைகளுக்கான காரணம் பணம் அல்லது குடும்பக் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
சிஐடியின் ஈடுபாடு
ஞாயிற்றுக்கிழமையன்று சிஐடியை சேர்ந்தவர்கள் சாகர்திகி காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் வரும் ஷாஹ்பூர் பாரலா கிராமத்தில், இறந்த பிரகாஷ் பாலின் தாய் மாயா பாலிடம் விசாரித்தனர்.
அங்கிருந்து 19 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஜியாகஞ்சில் அமைந்துள்ள பிரகாஷ் பாலின் வீட்டிற்கு சிஐடியைச் சேர்ந்த சிலர் சென்றனர்.
பிரகாஷ் பால் ஒன்றரை வருடத்திற்கு முன்புதான் அந்த பகுதியில் புதிய வீடு கட்டி குடிபுகுந்தார். தினமும் ரயில் மூலம் பாரலா கிராம தொடக்கப்பள்ளிக்கு வந்து செல்வார்.
பந்து பிரகாஷ் வேலை செய்யும் பள்ளி
இந்த பள்ளி அவரின் அம்மாவின் வீட்டிற்கு மிக அருகில் உள்ளது. அங்கே வேலை முடிந்ததும் மீண்டும் ஜியாகஞ் செல்வார்.
இந்த வழக்கில் இப்போதைக்கு நிறையத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என முர்ஷிதாபாத்தின் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் முகேஷ் குமார் கூறியுள்ளார்.
கொலைசெய்யப்பட்ட மூன்றுபேர்
மேலும் அவர், இறந்த நபருக்கும் பாஜக அல்லது ஆர்எஸ்எஸ்கும் தொடர்பு இருப்பது போல எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இணையதளத்தில் இது குறித்து தவறாகப் பரப்பப்படுவதாகத் தோன்றுகிறது எனக் கூறினார்.
உண்மையும் பொய்யும்
பிரதாப் ஹால்தார்(இடது பக்கம் வெள்ளை சட்டை போட்டிருப்பவர்)
பாஜகவின் ஜியாகஞ் மண்டலத்தின் தலைவர் பிரதாப் ஹால்தார் லேபூபகான் பகுதியில் வசிப்பவர். பந்து பிரகாஷ் பாலின் வீட்டின் அருகில் வசித்து வருகிறார்.
பந்து பிரகாஷ் பாஜகவுக்காக வேலை செய்யவில்லை ஆனால் ஆர்எஸ்எஸுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறுவார்கள் என பிரதாப் பிபிசியிடம் கூறினார்.
"ஆர்எஸ்எஸ் கிளையில் பதிவேடு ஏதும் கிடையாது, இதனால் ஆதாரங்கள் கிடைப்பது மிகவும் கடினம். அங்கிருப்பவர்களே இதைப் பற்றிக் கூற முடியும்" எனவும் கூறினார் பிரதாப்.
உறதியாகக் கூறமுடியாது
முர்ஷிதாபாத் மாவட்ட ஆர்எஸ்எஸின் தலைவர் சமர் ராய் பிபிசியிடம் பேசியபோது, பந்து பிரகாஷ் இந்த சங்கத்தின் தன்னார்வலர் . அவருடைய ஜியாகஞ் இல்லத்தில் சில சந்திப்புகள் நடந்துள்ளது. ஆனால் தான் இதுவரை அவரை சந்தித்ததில்லை என ஒப்புக்கொண்டார்.
மாயா பால்( பிரகாஷ் பாலின் தாய்)
மேலும் , இதுவரை என்னுடன் எந்த சந்திப்புக்கும் அவர் வந்தது கிடையாது ஆனால் சங்கத்தின் சில தன்னார்வலர்கள் அவர் அடிக்கடி அலுவலகத்திற்கு வந்து செல்வதாகக் கூறினர். இதைவைத்து தான் அவரும் தன்னார்வலர் எனக் கூறினேன். ஆனால் இதற்கான புகைப்படமோ எந்த ஆவணமோ இல்லை என்றார்.
பிரகாஷ் பாலின் தாய்க்கு அவர் ஒரே மகன் ஆவார். அவருடைய தாய் மாயா பாலுக்கு இப்போது 70 வயது. அவர் திருமணமாகி ஏழு வருடங்களுக்குப் பிறகுத் தன் கணவரிடமிருந்து பிரிந்து தன்னுடைய சகோதரர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். சில வருடங்கள் கழித்து, மாயாபால் சிறிது தூரத்தில் வேறு வீட்டை வாங்கி விட்டார்.
பந்து பிரகாஷ் அவருடைய இரட்டை சகோதரி பந்து பிரியா மற்றும் இவர்களுக்கு மூத்த சகோதரி பந்து பீரித்தி ஆகியோரை வளர்த்தார். இப்போது மகள்கள் இருவருக்கும் திருமணமானது.
பந்து பிரகாஷின் வீடு
மாயா தன் மகன் மற்றும் மருமகளுடனே வசித்து வந்தார். ஜியாகஞ்சில் பந்து பிரியாவின் வீடு அவரின் அண்ணனின் வீட்டிற்கு அருகில் தான் இருக்கிறது.
ஜியாகஞ்சிற்கு மகன் செல்லும்வரை தன் மகனோடு இருந்தார். பிறகுத் தனது வீட்டில் தனியாக இருந்து வருகிறார்.
குரு கோல்வல்கர்: 'வெறுப்பின் தலைவனா' இந்து தேசியவாதத்தின் மாபெரும் ரசிகரா?
காந்திக்கு ஆர்.எஸ்.எஸ் உடன் உண்மையில் எப்படிப்பட்ட உறவு இருந்தது?
எந்த கட்சியுடனும் தொடர்பில்லை
"பந்து பிரகாஷிற்கு எந்த கட்சியுடனும் தொடர்பு இல்லை. யாரவது சந்தா கேட்க வந்தால் அவர் கொடுத்துவிடுவார். ஆனால் தன்னுடைய வேலையை மட்டும்தான் பார்ப்பார். இதைத்தவிர அவருக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏன் மக்கள் தேவையில்லாமல் பொய் கூறுகிறார்கள்? பொய் செய்தி பரப்ப விரும்புகிறார்கள் எனத் தெரியவில்லை" என்று மாயா பால் பிபிசியிடம் கூறினார்
போலீஸ் விரும்பினால் கொலைகாரர்களை அன்றே பிடித்திருக்கலாம். இப்போது ஆறு நாள் ஆனது, இன்னும் அவர்களால் யாரையும் பிடிக்க முடியவில்லை. போலீஸ்மேல் எப்படி நம்பிக்கை கொள்வது? எனக் கூறினார் மாயா பால்.
பந்து பிகாஷ் பாலின் தந்தை
பந்து பிகாஷ் பாலின் தந்தை அமர் பால் மூன்று குழந்தைகள் பிறந்த பிறகு தன்னுடைய முதல் மனைவியைப் பிரிந்து ராம்பூர் ஹாட்டில் தனியாக வசித்து வந்தார்.
பிறகு சில வருடங்கள் கழித்து அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரின் இரண்டாவது மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள். இதனால் பிரகாஷுக்கும் அவரது தந்தைக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது என கிராமவாசிகள் கூறுகின்றனர் . இதனால் தான் அவர் விசாரணைக் காவலில் உள்ளார்.
அரசியலாக்கப்படுகிறது
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டத்தலைவர் அபூ தாஹேர் கான், பாஜக மட்டமான அரசியல் செய்கிறது. இதுபோல் பொய்யான செய்திகளைப் பரப்பி அவர்கள் எதை நிரூபிக்க நினைக்கின்றனர் எனத் தெரியவில்லை. அந்த ஆசிரியருக்கு ஆர்எஸ்எஸுடன் எந்த தொடர்பும் இல்லை என அவரது குடும்பமே சொல்கிறது, இதைப்பற்றி நாம் ஏன் கதைகட்டுகிறோம் எனக் கூறியுள்ளார்.
இந்த வழக்கு சமநிலையில் விசாரிக்கப்படும் மேலும் சரியான நேரத்தில் இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் எனத் தெரியவரும் என்றார்.
இந்த கொலைக்கான உண்மையான காரணம் தெரிந்தால்தான் மற்றும் கொலையாளிகள் பிடிபட்டால்தான் இதில் அரசியல் கோணம் இருக்கிறதா என்பது தெரியும்.