கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில், ஹிஜாப் தடைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணின் சகோதரர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதையடுத்து மீண்டும் அமைதியற்ற சூழல் தற்போது அங்கு நிலவி வருகிறது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பெண்ணின் தந்தை ஊடகத்தில் ஹிஜாப் அணிவது பற்றி பேசியுள்ளார்.
அதைக் கேள்விப்பட்டு சுமார் முப்பது முதல் நாற்பது நபர்கள் அந்தப் பெண்ணின் தந்தையின் உணவகத்திற்கு வந்து உள்ளனர். அப்போது அவர் தந்தை இல்லாததால் உணவகத்தில் இருந்த பெண்ணின் சகோதரர் சைஃபிடம் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக அந்தப் புகாரில் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட பெண்ணின் தந்தை ஊடகத்தில் பேசும்போது, ஹிஜாப் அணிவதற்கு எதிராக ஏன் சிலர் காவி துண்டை அணிந்து வருகிறார்கள் என்று கேள்வி கேட்டதே இந்த எதிர்ப்புக்குக் காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து உடுப்பி காவல்துறை கண்காணிப்பாளர் என்.விஷ்ணுவர்தன் பிபிசி ஹிந்தியிடம், "முதல்கட்டமாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது", என்று கூறினார். தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கர்நாடகா மாநில உடுப்பி பகுதியில் அமைந்துள்ள பெண்கள் அரசு ப்ரி-யுனிவர்சிட்டி வகுப்பறையில் ஹிஜாப் ஆடை அணிவதற்கான அனுமதியை 6 மாணவர்கள் கேட்டுள்ளனர். அதில் ஒருவர்தான் தாக்குதலுக்கு உள்ளான சைஃபின் சகோதரி ஹஜ்ரா ஷிஃபா. இந்த ஆறு மாணவர்கள் கேட்ட அனுமதிக்கு எதிராக, மற்ற சமூகத்தை சார்ந்த மாணவ மாணவிகள் காவி துண்டு மற்றும் தலைப்பாகைகள் அணிந்து வகுப்புகளுக்கு வந்தனர்.
மேலும் ஹிஜாப் அணிவதற்கு எதிராக கல்லூரி மற்றும் கர்நாடக மாநில அரசு விதித்த தடைக்கு எதிராக இந்த ஆறு மாணவர்களும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று, இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் வழங்கிய சூழலில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதற்கான தடைக்கு எதிராக தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வந்தது.உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த 6 மாணவர்களில் 3 மாணவர்களுக்கு இறுதி செய்முறைத் தேர்வில் பங்கேற்க அனுமதி தரப்படவில்லை.கர்நாடகாவில் உள்ள ஒரு சில கல்லூரிகளில், மாணவிகள் ஹிஜாப் இல்லாமல் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிஜாப் விவகாரம் ஒரு முக்கிய பிரச்னையாக இருக்கக் கூடிய சூழலில், கர்நாடகாவின் ஷிவமோகா நகரில் பஜ்ரங் தள் அமைப்பின் ஆர்வலர், ஹர்ஷா கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து கடந்த திங்கட்கிழமை அன்று, குறிப்பிட்ட பகுதிகளில் கல் வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முதல் கட்டமாக ஹர்ஷா கொல்லப்பட்டதில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். "முன்பகை காரணமாக கொலை நடந்து உள்ளது போல் தெரிகிறது", என பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி ஹிந்தியிடம் கூறியுள்ளார்.