580 ஆண்டுகளில் மிக நீண்ட பகுதி சந்திர கிரகணம் நவம்பர் 19 அன்று நிகழவிருக்கிறது. இந்த சந்திர கிரகணம் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் தென்படும் என்று வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
2021ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணமாக அறியப்படும் இது, இதற்கு முன்பு 15ஆம் நூற்றாண்டில் தென்பட்ட சந்திர கிரகணத்தில் இருந்து மிக நீண்டதாக இருக்கும். கடைசியாக இவ்வளவு நீளமான கிரகணம் 1440 பிப்ரவரி 18ஆம் தேதி நிகழ்ந்தது.
சந்திர கிரகணம் பவுர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். பொதுவாக இரவு நேரத்தில் நிகழும் சந்திர கிரகணமும் பகல் நேரத்தில் நிகழும் சூரிய கிரகணமும்தான் இந்தியாவில் தெரியும்.
பூமியின் நிழலில் இருந்து விலகிச்செல்லும்போது சந்திரன் சிவப்பு-பழுப்பு நிறத்தில் தோன்றும் என்று அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா தெரிவித்துள்ளது.இந்த கிரகணம் வட அமெரிக்கா, கிழக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் உட்பட உலகின் பல பகுதிகளில் தெரியும் என்று வானியல் நிகழ்வுகள் பற்றிய செய்திகளை வெளியிடும் எர்த்ஸ்கை இணையதளம் தெரிவித்துள்ளது."அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பார்வையாளர்களைப் பொருத்தவரை, பகுதி கிரகணம் அதிகாலை 2 மணிக்குப் பிறகு தொடங்குகிறது, அதன் அதிகபட்சம் அதிகாலை 4 மணிக்கு அடையும்" என்று நாசா தெரிவித்துள்ளது.
"மேற்கு கடற்கரையில் உள்ள பார்வையாளர்களுக்கு, இது இரவு 11 மணிக்குப் பிறகு தொடங்கும், அதிகபட்சம் அதிகாலை 1 மணிக்கு தொடங்குகிறது."
மிக நீளமான பகுதி சந்திர கிரகணம் நவம்பர் 19 அன்று நிகழும் மற்றும் மதியம் 12.48 மணிக்கு தொடங்கி மாலை 4.17 மணிக்கு முடிவடையும் என்று வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சந்திர கிரகணம் இந்தியாவில் எங்கு தெரியும்?
நிலவின் 97 சதவீதம் பூமியின் நிழலால் மூடப்பட்டிருப்பதால், பிற்பகல் 2.34 மணிக்கு இந்தியாவில் இது தெரியும். அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் உள்ள சில பகுதிகளில் இருந்து இந்த அரிய நிகழ்வை பார்க்க முடியும்.
எம்பி பிர்லா கோளரங்கத்தின் ஆராய்ச்சி மற்றும் கல்வி இயக்குநர் டெபிப்ரோசாத் திவாரி இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமில் உள்ள சில பகுதிகள், சந்திர உதயத்திற்குப் பிறகு, கிழக்கு அடிவானத்திற்கு மிக அருகில், பகுதி கிரகணத்தின் கடைசி விரைவான தருணங்களை அனுபவிக்கும்" என்று விளக்கினார்.
சந்திர கிரகணம் 2021: கால அளவு
கிரகணத்தின் காலம் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் 24 விநாடிகள் ஆகும், இது 580 ஆண்டுகளில் மிக நீண்டதாக இருக்கும்.
சந்திர கிரகணம் என்றால் என்ன?
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும். அப்போது, பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.
இதற்கிடையில், சந்திரன் பூமியின் நிழலின் மங்கலான பெனும்பிரல் பகுதி வழியாக பயணிக்கும் போது, சந்திர கிரகணம் நிகழ்கிறது.
நவம்பர் 19 சந்திர கிரகணத்தில் என்ன நடக்கும்?
சந்திரன் ரத்த-சிவப்பு நிறத்தில் தோன்றக்கூடும், இது சூரிய ஒளியின் சிவப்புக் கதிர்கள் பூமியின் வளிமண்டலத்தின் வழியாகச் சென்று, குறைந்தபட்சம் திசை திருப்பப்பட்டு சந்திரனில் விழும் போது நிகழ்கிறது.கடைசியாக பிப்ரவரி 18, 1440 அன்று ஒரு பகுதி சந்திர கிரகணம் ஏற்பட்டது, அடுத்த முறை இதேபோன்ற நிகழ்வு 2669ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி தென்படும்.