Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்டெக் பழங்குடிகள் வரலாறு: மீண்டும் உயிர் பெறும் 700 வருட மிதக்கும் தோட்டங்கள்

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (12:11 IST)
மெக்சிக்கோ நகரில், 700 ஆண்டுகள் பழமையான ஆஸ்டெக் பண்ணை தொழில்நுட்பம் நவீன விவசாயத்திற்கு ஒரு நிலையான அம்சத்தை அளிக்கிறது.


அது ஒரு ஞாயிறு அதிகாலை நேரம். மெக்சிக்கோ நகரின் தெற்கே 28 கி.மீ தொலைவில் உள்ள வரலாற்று மையமான எக்ஸோசிமில்கோ(Xochimilco)வின் மிதக்கும் தோட்டங்கள் பகுதியில் நான் இருந்தேன். அங்கிருந்த முடிவற்ற கால்வாய்கள், நீர் வழிகள் ஏற்கனவே வண்ண மயமான தட்டையான படகுகள் நிறைந்திருந்திருந்தன. மெக்சிக்கோ நகரில் இருந்து ஒரு நாள் சுற்றுப்பயணத்துக்காக வந்திருந்த பயணிகளால் அவை நிரம்பியிருந்தன. வறுக்கப்பட்ட மக்காசோள கதிர்கள், மைக்கேலடா எனப்படும் காக்டெய்ல் ஆகியவற்றை சிறு வியாபாரிகள் விற்றுக் கொண்டிருந்தனர். இசை குழுவினரின் மரியாச்சி இசை காற்றில் பரவி இருந்தது.

ஆடம்பரமான கலை, இசை, உணவு, தொப்பிகள் ஆகியவற்றின் காட்சிகளை காண எக்ஸோசிமில்கோ கால்வாய் பகுதிக்கு ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். chinampas என்று அழைக்கப்படும் மிதக்கும் தோட்டங்களை ஒட்டி படகுகளில் அவர்கள் பயணிக்கும்போது பழமைவாய்ந்த பொறியியல் அதியத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையை பெரும்பாலானோர் மறந்து விடுகின்றனர்.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த தீவு வேளாண் பண்ணைகள் ஆஸ்டெக் பேரரசின் 14 ம் நூற்றாண்டின் பெரும் அளவிலான நில மறுசீரமைப்பு திட்டத்தின் கடைசியாக எஞ்சியிருக்கும் அடையாள சின்னங்களாகும். இன்றைக்கும் கூட இந்த மிதக்கும் வேளாண் பண்ணைகளில் இருந்து மெக்சிக்கோ நகர் மக்களுக்கு உணவு கிடைக்கின்றது.

1325ம் ஆண்டில் மெக்சிக்கோ பள்ளத்தாக்கு பகுதிக்கு ஆஸ்டெக் பழங்குடியினர் வந்தபோது, டெக்ஸ்கோகோ ஏரியின் ஒரு அசாதாரண காட்சியால் அவர்கள் வரவேற்கப்பட்டனர் என்று வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. கழுகு ஒன்று தன் அலகில் கொத்தி திண்ணும் பாம்புடன் ஏரியின் சதுப்பு நிலக்கரையில் இருந்த முட்கள் நிறைந்த கற்றாழையில் அமர்ந்திருந்தது. இந்த இடத்தைத்தான் கடவுள் தங்களுக்கான பகுதியாக தீர்க்கதரிசனமாக குறிப்பிடுவதாக கருதிய ஆஸ்டெக் பழங்குடியினர் இதனை தங்கள் வீடு என அழைத்தனர். காடு, மேடாக அலைந்து கொண்டிருந்த பழங்குடியினர், தங்களது தலைநகரத்தை அங்கேயே கட்டமைப்பது என்று திடமிட்டனர். அவர்கள் இந்த பகுதியை டெனோச்சிட்லான் என்று அழைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மெசோஅமெரிக்காவின் சக்திவாய்ந்த நகரங்களில் ஒன்றாக டெனோச்சிட்லான் மாறியது. ஆனால், பல கட்டுமான சிக்கல்களை எதிர்கொண்டது. டெக்ஸ்கோகோ ஏரி கரையில் ஆஸ்டெக் பழங்குடியினர் கட்டடங்கள் கட்டத் தொடங்கினர். ஆனால், எங்கு பார்த்தாலும் நீர் நிலைகளாக இருந்ததால், கட்டடத்தை விரிவாக்குவதற்கு போதுமான நிலப்பகுதி இல்லை என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

மெக்சிக்கோ பள்ளத்தாக்கின் லாகுஸ்ட்ரைன் நிலப்பரப்பு டெக்ஸ்கோகோ, சால்டோகன், ஜூம்பாங்கோ, சால்கோ மற்றும் சோச்சிமில்கோ எனும் ஐந்து பெரிய ஏரிகளாலும், மிகச்சிறிய சதுப்பு நில தீவுகளாலும் சூழப்பட்டிருந்தது.

தங்களின் நிலப்பற்றாக்குறைக்குத் தீர்வு காண, ஆஸ்டெக் பழங்குடியினர் chinampas என்று அழைக்கப்படும் மிதக்கும் தோட்டங்கள் அமைப்பது என்ற புத்திசாலிதனமான திட்டத்தை கொண்டு வந்ததாக தொல்லியல் ஆதாரங்கள், அதே போல ஸ்பெயின் காலனித்துவ எழுத்தாளர்களின் குறிப்புகளும் நமக்குச் சொல்கின்றன.

ஆழமற்ற ஏரிகளின் மீது நாணல்கள், ஈரநிலத்தில் வளரும் ஒருவகை புற்கள் ஆகியவற்றின் மீது தேவையான உயரத்துக்கு ஏற்ப அடித்தளத்தை அமைத்து அதன் மீது அவர்கள் செயற்கையாக இந்த நீண்ட குறுகிய நிலத்துண்டு பகுதியை கட்டமைத்தனர். இந்த தீவுகள் பின்னர் ஏரியின் தரையில் அஹுஜோட் என்று அழைக்கப்படும் பூர்வீக மரத்தின் வேலியால் இணைக்கப்பட்டன.

ஏற்கனவே உள்ள தீவுப்பகுதிகளுடன் இணைக்க டெனோச்சிட்லான் நகர மையத்தை பாலங்கள், பலகை நடைபாதைகள் வழியாக ஆஸ்டெக் பழங்குடியினர் கட்டமைத்தனர். நகர் மையத்தில் இருந்து எக்சோசிமில்கோ ஏரி படுகை போன்ற பகுதிகளில், அவர்கள் chinampas என்றழைக்கப்படும் மிதக்கும் தோடங்களை உருவாக்கினர்.

அவைகள் விவசாயம், கால்நடைகள் மேய்ச்சல், வேட்டையாடுதல், உணவு தேடுதல் ஆகிவற்றுக்காக உபயோகிக்கப்பட்டன. தண்ணீ்ர் மீதான இந்த அறிவார்ந்த வேளாண் தொழில்நுட்பமானது, ஆஸ்டெக் பழங்குடியினர் தங்களது வளர்ந்து வரும் பேரரசை தக்கவைத்துக் கொள்ள உதவியது.

" மிதக்கும் தோட்டம் (Chinampas) என்பது வெறுமனே ஒரு உற்பத்தி மற்றும் நிலையான வேளாண்-சுற்றுச்சூழல் நுட்பம் மட்டும் அல்ல. அவை ஆஸ்டெக் பழங்குடியின கலாச்சாரத்தின் பிரதிநிதித்துவம் ஆகும். எப்படி இயற்கையோடு தொடர்பு படுத்திக் கொள்வது, அதோடு பங்கு வகிப்பது மற்றும் அதனோடு வாழ்வது என்பதை நமக்குக் கற்றுக்கொடுத்த பழங்குடியினரின் பாரம்பரியத்தை எடுத்து சொல்கிறது," என மெக்சிக்கோ நகரத்தின் சூழலியல் தொடர்பான விஷயங்களுக்கான உள்ளார்ந்த தீர்வுகள், புதுமையை உருவாக்கும் ஒரு தன்னார்வ நிறுவனமான உம்பேலா சஸ்டெய்னபிள் டிரான்ஸ்ஃபார்மேஷன்ஸ் அமைப்பின் நிறுவனர் பாட்ரிசியா பெரெஸ்-பெல்மாண்ட் கூறினார்.

இதனால் , ஒரு வகையான 13 சதுர கி.மீக்கு பரந்த மிதக்கக்கூடிய கால்வாய்களால் பிரிக்கப்பட்ட நகரம் கிடைத்தது. இதனோடு இணைந்த வழித்தடங்களின் மீது 2.50 லட்சம் பேர் வசிக்கின்றனர். 16ம் நூற்றாண்டில் டெனோச்சிட்லான் பகுதிக்கு வந்த ஸ்பெயின் நாட்டினர், பகுதி அளவு நிலமாகவும், பகுதி அளவு தண்ணீராகவும் காணப்பட்ட சாலைகள், முழுமையான இயற்கையான எல்லைகளைக் கொண்ட மிதக்கும் தோட்டங்கள், நூற்றுக்கணக்கான மக்களை ஏற்றிச்செல்லும் விரைவான ஓடங்களைப் பார்த்து குழப்பமடைந்தனர்.

எதிர்பாராத விதமாக ஸ்பெயின் நாட்டினர் டெனோச்சிட்லான் பகுதியை அழித்தனர். நகர் மையத்தின் சில இடிபாடுகள், எக்சோசிம்மில்கோவின் மிதக்கும் தோட்டங்களில் உள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட தீவுகளின் வண்ணத்துண்டு பகுதி ஆகியவற்றுக்கு இடையே, பழங்காலத்தின் பெருநகரத்தின் எஞ்சிய பகுதிகளை இன்னும் கூட பார்க்க முடிகிறது.

உலகின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ள மிதக்கும் தோட்டங்கள் இன்னும் வளமானதாக சுற்றுச்சூழல் சாத்தியமுள்ளதாகக் காணப்படுகின்றன. இந்த செயற்கையான தீவு-பண்ணைகள் வடிவம் என்பது, உலகின் அதிகம் உற்பத்தி செய்யும் விவசாய முறைகளில் ஒன்றாகவும், நம்ப முடியாத அளவுக்கு திறன் கொண்டவையாக, தன்னிறைவு கொண்டவையாகவும் உள்ளன.

தாவர எச்சங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகள், ஏரியில் இருந்து கிடைக்கும் நல்ல வண்டல் படிவுகள் ஆகியவற்றால் தொடர்ந்து செறிவூட்டப்பட்ட மண்ணாக இருக்கிறது. கூடுதலாக, ahuejote எனும் வேலிகள் ஒவ்வொரு தீவை சுற்றியும் இருப்பதால் அவை அரிப்பு ஏற்படுவதை தடுக்கின்றன, மிதக்கும் தோட்டங்களை காற்றில் இருந்து, பூச்சிகளில் இருந்து பாதுகாக்கின்றன.

படரும் தாவரங்களுக்கு இயற்கையாக அமைந்த பற்றும் கோல்களாக திகழ்கின்றன. 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆஸ்டெக் பழங்குடியினர் மிதக்கும் தோட்டங்களில் ஒரு ஆண்டில் ஏழு வெவ்வேறு வகையான பயிர்களை பயிரிட்டு வளர்த்தனர். இதன் விளைவாக, வறண்ட நிலத்தை காட்டிலும் 12 மடங்கு விளைச்சல் கிடைத்தது.

மிதக்கும் தோட்டம் என்பது மிகவும் புதுமையான அம்சம் என்பதுடன், தண்ணீரை மிகவும் புத்திசாலித்தனத்துடன் உபயோகிக்கும் முறையாகும். இந்த குறுகிய தீவுப் பகுதிகள் நுண்ணிய மண் மற்றும் உயர்ந்த கரிமங்கள் நிறைந்தவையாகும். இவை சுற்றுவட்டாரத்தில் ஓடும் கால்வாய்களில் இருந்து தண்ணீரை ஈர்த்து நீண்டகாலத்துக்கு தக்கவைத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. கூடுதலாக மிதக்கும் தோட்டத்தின் அடுக்குகள், நிலத்தடி நீரை நேரடியாக உறிஞ்ச்சிக் கொண்டு தேவைக்கு ஏற்ற வகையில் உபயோகிக்கும் நீளமான வேர்களை கொண்ட பயிர்களை பயிரிடும் வகையிலான வடிவமைப்பை கொண்டவை. இதனால் இங்கு பயிரிடப்படும் பயிர்களுக்கு நீர்பாசனம் செய்யவேண்டிய தேவை குறைகிறது.

"மிதக்கும் தோட்டங்கள், மிகப்பெரிய கடற்பாசிகள் போல இருக்கின்றன. அவற்றுக்கு நீங்கள் நீர்பாசனம் செய்ய வேண்டியதில்லை. ஆண்டு முழுவதும் அவை உற்பத்தி செய்யக் கூடியவையாக இருக்கின்றன," என எக்சோசிமில்கோ விவசாயிகளுடன் இணைந்து மீளுருவாக்கம் செய்யும் விவசாய நடைமுறைகளை செயல்படுத்தும் அமைப்பான ஆர்கா டியர்ராவின் நிறுவனர் லூசியோ உசோபியாகா கூறுகிறார்.

அவரது குழுவினர், உள்ளூர் விவசாயிகள் குழு கட்டமைப்புடன் இணைந்து கடந்த 12 ஆண்டுகளாக எக்சோசிமில்கோவின் 5 ஹெக்டேருக்கும் மேற்பட்ட மிதக்கும் தோட்டத்தை மீட்டுருவாக்கம் செய்திருக்கின்றனர். பரஸ்பர நன்மை பயக்கும் தாவரங்கள் நெருக்கமாக வளர்க்கப்படும் துணை நடவு போன்ற பாரம்பரிய ஆஸ்டெக் பழங்குடியினரின் தொழில்நுட்பங்களை செயல்டுத்தி தரமான , சுவையான உணவுகளை உற்பத்தி செய்வதில் உறுதியாக உள்ளனர்.

எக்சோசிமில்கோவின் தனித்தன்மை வாய்ந்த சூழல் அமைப்புடன் கூடிய செயற்கையான தீவு பண்ணைகள் , நுண்ணூட்ட சத்துகள் அதிக அளவில் உள்ள நீர் கால்வாய்கள் உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த நீர்வாழ் விலங்கினங்களுக்கு பாதுகாப்பான சூழலியல் இடங்களையும் வழங்குகின்றன.

மிதக்கும் தோட்டங்கள், ஆபத்தான நிலையில் உள்ள ஆக்சோலோட்ல் சாலமண்டர் உட்பட, அதன் உடலின் ஒவ்வொரு பகுதியையும் மீண்டும் உருவாக்கக்கூடிய மரபணு வல்லமையைக் கொண்ட நீரிலும் நிலத்திலும் வசிக்க க்கூடிய அம்பிபியான் (amphibian) எனும் தவளை போன்ற உயிரினம் உள்ளிட்ட 2 சதவிகித உலகின் பல்லுயிர் பெருக்கத்தின் தாய்வீடாக இருக்கின்றன.

உள்ளூர் மக்களை பொறுத்தவரை, மிதக்கும் தோட்டங்கள் அவர்களது கலாச்சாரம், பொருளாதாரம், சமூக அடையாளத்தை வெளிப்படுத்தும் அடையாளங்களாக உள்ளன.

"மிதக்கும் தோட்டங்கள் நமது சமூகத்தின் ஆழ்ந்த, மரியாதையுடன், போற்றுத்தலுக்கும் உரியதாகும். மிதக்கும் தோட்டங்களின் வழியே, நாங்கள், எங்களுடைய மூதாதையர்களின் பாரம்பரியம் மற்றும் அறிவின் தொடர்ச்சியான அடையாளங்கள் மட்டுமின்றி, பல நூற்றாண்டுகள் பழமையான இயற்கையோடு கூடிய எங்களது தொடர்பை பாதுகாப்பதும் ஆகும்," என்றார் ஆர்கா டியர்ரா விவசாய குழுவின் தலைவர் சோனியா டாபியா.

எனினும், மிதக்கும் தோட்டத்தில் விவசாயம் செய்வது என்பது பல சவால்களைக் கொண்டதாகும். ஸ்பெயின் படையெடுப்பின் வெற்றிக்குப் பின்னரான 1521ம் ஆண்டின் மெக்சிக்கோ மற்றும் அதனைத்தொடர்ந்து சீரான நகர்மயமாதல் ஆகியவற்றால் மிதக்கும் தோட்டங்கள் பிரபலத்தை இழந்தன.

20ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் மெக்சிக்கோ நகரம் வெளிப்புறமாக சீராக வளர்ச்சியடைந்தது. எக்சோசிமில்கோவின் மிதக்கும் தோட்டங்களின் கணிசமான சதவிகிதத்தை விழுங்கியது. 1987ம் ஆண்டில் எக்சோசிமில்கோ சுற்றுச்சூழல் திட்டம் என்ற வடிவில் இறுதியாக ஒரு பின்னடைவு வந்தது. அப்போது 2577 ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த திட்டத்துக்காகப் பறிக்கப்பட்டன. கட்டங்கள், பாலங்கள், கால்பந்து மைதானம் ஆகிய நகர உபயோக கட்டுமானப்பணிகளுக்கான அனுமதிகள் அதிகரித்தன.

"எக்சோசிமில்கோ வரை நகரம் விரிவடைந்ததால், மிதக்கும் தோட்டங்களின் அமைப்பு மற்றும் செயல்முறைகளை கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தின," என்கிறார் பெரெஸ்-பெல்மாண்ட். மிதக்கும் தோட்டங்களில் பெரும்பாலானவை நகரத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன அல்லது கைவிடப்பட்டன எனவும் அவர் விவரிக்கிறார்.

சிறிய விவசாய உற்பத்தியாளர்கள் தொடர்ந்து தீவுப்பகுதிகளில் விவசாயம் செய்து வருகின்றனர். மிதக்கும் தோட்டத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கான தேவை என்பது பெரும்பாலும் குறைந்துவிட்டது. மெக்சிக்கோ நகரின் வெளிப்புறங்களில் உற்பத்தி செய்யப்பட்டு மொத்த கொள்முதல் சந்தைகள், பெரும் நிறுவனங்களுக்கு வரும் வேளாண் விளைபொருட்களை விலை மலிவானதாக வாங்கும் வகையில் மக்கள் மாறிவிட்டனர்.

எக்சோசிமில்கோ கால்வாய்களுக்கு சுற்றுலா என்பதன் வாயிலாக கொஞ்சம் கூடுதல் வருவாய் வருகிறது. ஆனால், அவை மிதக்கும் தோட்டங்களில் விவசாயம் செய்யும் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துக்கு போதுமானதாக இல்லை. எனவே அவர்கள் மெக்சிக்கோ புறநகர் பகுதிகளில் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்குமா என்று பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

கோவிட்-19 தொற்று பரவல் தொடங்கிய 2020ம் ஆண்டு வரை மிதக்கும் தோட்டமானது காலத்துக்கு ஏற்றதாக இல்லை என்பதாக பார்க்கப்பட்டது. எல்லைகள் மூடப்பட்டு, விநியோக சங்கலிகள் தடைபட்டபோது, மெக்சிக்கோவின் பெரிய திறந்தவெளி மொத்த சந்தையான லா சென்ட்ரல் டி அபாஸ்டோ, முடங்கிப்போனது. தொற்று நோயால் பாதிக்கபட்ட ஒரு சூழலில்தான், 2 கோடி மெக்சிக்கோ நகரவாசிகள், தங்களின் முன்னோர்கள் அவர்களுக்கான உணவை கொள்முதல் செய்த மிதக்கும் தோட்டங்களை நோக்கி திரும்பிப் பார்க்க ஆரம்பித்தனர்.

மிதக்கும் தோட்டங்கள், மெக்சிக்கோ நகரின் புறநகருக்கு நெருக்கமாக இருக்கிறது. அங்கே செழுமையான மற்றும் ஆரோக்கியமான பெட்டகங்கள் எனும், புத்தம் புதிய நிலையான விளைபொருட்கள் உபயோகப்படுத்துவதற்காக காத்திருக்கின்றன. "கோவிட்-19 பெருந்தொற்று உள்ளூர் விவசாயிகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதையும், விவசாய சமூகம் ஆரோக்கியத்தை உருவாக்க முடியும் என்றும், இது மிகவும் நம்பகமான உணவு அமைப்பு என்பதையும் வெளிப்படுத்தியது," என்றார் உசோபியாகா.

ஆர்கா டியர்ரா போன்ற உள்ளூர் அமைப்புகள், மிதக்கும் தோட்டத்தின் விவசாயிகளை, அவர்களுக்கு பலனளிக்கும் வாடிக்கையாளர்களுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. மிதக்கும் தோட்டத்தில் இருந்து கிடைக்கும் தேன், பலவகை முட்டைகள், புத்தம் புதிய காய்கறிகளை எளிதாக ஆர்டர் செய்து வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு வசதியாக இணையவழி விற்பனை தளங்களை உருவாக்கி உள்ளன.

மிதக்கும் தோட்டத்தின் விவசாயிகள், பெருந்தொற்று காலகட்டத்தின்போது உதவி தேவைப்படும் குடும்பத்தினர்கள், மருத்துவர்கள், நோயாளிகளுக்கு உணவு வழங்கும் காமிடாஸ் சாலிடாரிஸ் என அழைக்கப்படும் ஒற்றுமை உணவு திட்டத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர்.

அவர்களின் அதிக உற்பத்தி திறன், நகர் மையத்தின் அருகாமையில் இருப்பது, அதே போல உள்ளூர் அளவில் விளைவிக்கப்பட்ட உணவின் தெளிவான ஆரோக்கிய நன்மைகள் ஆகியவற்றால் பெருந்தொற்றின்போது மிதக்கும் தோட்டத்தின் விவசாயிகளின் பொருட்கள் இருமடங்குக்கும் அதிகமாக விற்பனையாயின. மிதக்கும் தோட்ட விவசாயிகள் மீண்டு வருவதற்கு இது ஊக்கப்படுத்தியது. தங்களது பழமைவாய்ந்த மிதக்கும் தோட்டங்களுக்கு அவர்கள் புத்துயிரூட்டி உள்ளனர்.

எக்சோசிமில்கோவின் மிதக்கும் தோட்டங்கள் முதன் முதலில் உருவாக்கப்பட்டு 700 ஆண்டுகள் கழித்து நிச்சயமற்ற ஒரு காலத்தில், விரும்பதகாத சூழ்நிலைகளில் மீண்டும் ஒருமுறை மெக்சிக்கோ நகரத்திற்கு உணவளித்து பாதுகாக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments