Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்டார்டிகாவில் 'பாரதி': இந்தியா கண்டறிந்த புதிய தாவரத்தின் பெயர்

Advertiesment
BBC Tamil
, வியாழன், 8 ஜூலை 2021 (15:29 IST)
அன்டார்டிகாவில் புதிய தாவர இனம் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு 'பாரதி' என பெயரிடப்பட்டுள்ளது.

துருவ பகுதிகளை ஆய்வு செய்து வரும் தாவரவியல் நிபுணர்கள், 2017-ஆம் ஆண்டு ஒரு வகை பாசியைக் கண்டறிந்தனர். அதைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.

ஆயினும் அது எந்த வகையைச் சேர்ந்தது என்பதை முடிவு செய்வதற்கு பெரும் உழைப்புத் தேவைப்பட்டது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அதன் அடையாளம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான இந்தியக் குழுவின் கட்டுரை ஆசியா - பசிபிக் பயோடைவர்சிட்டி என்ற முன்னணி இதழில் வெளியாகி உள்ளது. இந்தயக் குழுவின் கண்டுபிடிப்பு, பொது விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தாவர வகைக்கு அவர்கள் பிரியம் பாரதீயன்சிஸ் எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

'பாரதி' என்பது ஹிந்துக் கடவுளான சரஸ்வதியின் மற்றொரு பெயராகும். அன்டார்டிகாவில் இதே பெயரில் இந்திய முகாம் ஒன்று இயங்கி வருகிறது. இது உலகத்திலேயே மிகவும் தொலைவில் தனித்துள்ள மையங்களுள் ஒன்றாகும்.

2017-ஆம் ஆண்டு அன்டார்டிகாவில் இந்தியா சார்பிலான 36-ஆவது ஆய்வுப் பயணத்தில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் ஃபெலிக்ஸ் பேஸ்ட் என்பவர் லார்ஸ்மன் ஹில்ஸ் பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது பச்சை நிறத்திலான ஓரு மாறுபட்ட தாவரத்தைக் கண்டார்.இந்தப் பகுதி தெற்கத்தியப் பெருங்கடலை நோக்கி, பாரதி ஆய்வு மையத்துக்கு அருகே அமைந்திருக்கிறது.

சாதாரணமாக தாவரங்கள் வளர்வதற்கு நைட்ரஜனுடன் பொட்டாசியம், பாஸ்பரஸ், சூரிய ஒளி, நீர் ஆகியவை தேவை. அண்டார்டிகாவைப் பொறுத்தவரை வெறும் ஒரு சதவிகித நிலப்பரப்பு மட்டுமே பனிக்கட்டிகளால் மூடப்படாத பகுதி.

"மிகப்பெரிய கேள்வி என்னவென்றால் பாறைகளையும் பனிக்கட்டைகளையும் கொண்ட பகுதியில் ஒரு பாசி எப்படி வளர்ந்தது என்பதுதான்" என்கிறார் பேஸ்ட்.

பென்குவின்கள் அதிகம் வாழும் பகுதிகளில்தான் இந்தப் பாசி அதிகமாக வளர்ந்து இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.. பென்குவின்களிளின் எச்சத்தில் நைட்ரஜன் இருப்பதும் இதற்கு ஒரு காரணம்
BBC Tamil

"இங்கு தாவரங்கள் பென்குவின்களின் கழிவுகளின் மேல்தான் வாழ்கின்றன. இங்குள்ள காலநிலையில் அந்த இயற்கை உரம் மக்கிப்போவதில்லை" என்கிறார் பேராசிரியர் பேஸ்ட்.

சூரிய ஒளி எப்படிக் கிடைக்கிறது என்று கேள்வி ஒன்று எஞ்சியிருக்கிறது. உண்மையைக் கூற வேண்டுமானால் விஞ்ஞானிகளுக்கு இதுபற்றிய உறுதியான விடை தெரியாது.

அன்டார்டிகாவில் ஆறு மாதக் கடுங்குளிரில் எந்த விதமான சூரியஒளியும் இல்லாமல் -76 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான உறைநிலையில் தாவரங்கள் எப்படித் தாக்குப்பிடிக்கின்றன என்பது அறிவியலில் இன்னும் ஒரு புதிர்தான்.

சூரிய ஒளி இல்லாத கடுங்குளிர்க் காலத்தில் பாசிகள் உறைந்து ஒரு விதையைப் போன்ற நிலைக்குச் சென்றுவிடும். சூரிய ஒளி கிடைக்கும் காலத்தில் மீண்டும் துளிர்விட்டு முளைக்கும்.. பனிகட்டிகள் உருகுவதால் கிடைக்கும் நீரைப் பயன்படுத்தி வளரத் தொடங்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்

2017-ஆம் ஆண்டில் புதிய பாசியைக் கண்டபோது அவற்றைச் சேகரித்த இந்திய விஞ்ஞானிகள் அவற்றின் மரபணு வரிசையைக் கண்டறிய 5 ஆண்டுகள் செலவிட்டனர். பிற தாவரங்களுடன் அவற்றை ஒப்பிட்டனர். அதற்காக அண்டார்டிகாவில் கிடைத்த நூற்றுக்கும் மேற்பட்ட பாசி வகைகளின் உயிரியல் விவரங்கள் ஆவணப்படுத்தப்பட்டன.

அந்த ஆய்வுப் பயணத்தின்போது இந்திய விஞ்ஞானிகளைக் கவலையடையச் செய்தது பருவநிலை மாற்றம் தொடர்பான ஆதாரங்கள்தான்.

உருகும் பனிப்பாறைகள், சேதமடைந்த பனியடுக்குகள், பனியடுக்குகளுக்கு மேல் உருவான ஏரிகள் போன்றவற்றை விஞ்ஞானிகள் கண்டார்கள்.

"அன்டார்டிகா பசுமையாகிக் கொண்டு வருகிறது. பல தாவர வகைகள் இந்தப் பனிக் கண்டத்தில் உயிர் வாழ முடியாது என்று முன்பு கருதப்பட்டு வருகிறது. ஆனால் இந்தக் கண்டம் சூடாகி வருவதால் பல இடங்களில் தாவரங்கள் பெருகியிருப்பதைக் காண முடிகிறது" என்கிறார் பேஸ்ட்.

"அன்டார்டிகா பசுமையாக மாறி வருகிறது என்பது கவலையளிக்கிறது" என்றார் பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான பேராசிரியர் ராகவேந்திர பிரசாத் திவாரி.

"அன்டார்டிகாவின் பனிகட்டிப் படலத்துக்குக் கீழே என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. கொடிய நோய்களைப் பரப்பும் நுண்ணுயிரிகள் கூட அங்கு இருக்கலாம். பனிக்கட்டிகள் உருகிய பிறகு அவை வெளியேறி வரக்கூடும்" என்றார் திவாரி.

அன்டார்டிகாவில் முகாம் அமைத்து ஆராய்ச்சி தொடங்கி பிறகு 40 ஆண்டுகளில் இந்திய விஞ்ஞானிகள் ஒரு தாவர வகையைக் கண்டறிந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

அன்டார்டிகாவில் முதன் முதலாக 1984-ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. அது 1990-ஆம் ஆண்டு பனியில் மூழ்கியதால் கைவிடப்பட்டது. 'மைத்ரி', 'பாரதி' ஆகிய இரு நிலையங்கள் முறையே 1989 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டன. இவை இப்போதும் செயல்பட்டு வருகின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணைவேந்தர் நியமனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றபடவில்லை… திருமா வளவன் புகார்!