Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிஹார் தேர்தல் முடிவுகள்: பிரசாரம் முதல் கருத்து கணிப்பு வரை - எளிமையான விளக்கம்

பிஹார் தேர்தல் முடிவுகள்: பிரசாரம் முதல் கருத்து கணிப்பு வரை - எளிமையான விளக்கம்
, செவ்வாய், 10 நவம்பர் 2020 (07:57 IST)
பிஹார் மாநிலத்தை ஆளப்போவது யார் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.

மூன்று கட்டமாக நடந்த இந்த தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் இந்தியாவின் முதலாவது மாநிலமாக பிஹார் விளங்குகிறது.

யார் யார் போட்டி? யார் யாருடன் கூட்டணி ?

ஆளும் ஐக்கிய ஜனதாதளம் - BJP இடையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய மகா கட்பந்தன் அணி, பாஸ்வானின் லோக் ஜனசக்தி, அசாதுதின் ஓவைசி தலைமையிலான கூட்டணி ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டன.

லோக் ஜனசக்தி கட்சி, நிதீஷ் குமார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியது. அதே நேரம் பாஜகவுடன் தங்களுக்கு எந்த பிணக்கும் இல்லை என்று அக்கட்சி தெரிவித்திருந்தது.

அது போல மகாகட்பந்தன் கூட்டணியிலும் விரிசல் இல்லாமல் இல்லை.

தொகுதிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஏற்பட்ட மனகசப்பில் அந்த கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறின.

உபேந்திர குஷ்வாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி (ஆர்.எல்.எஸ்.பி), முகேஷ் சாஹ்னி- ன் விகாஷீல் இன்சான் (வி.ஐ.பி, ) ஜித்தன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி (எச்.ஏ.எம்) ஆகியவை மகாகத்பந்தன் கூட்டணியிலிருந்து வெளியேறின.

எப்போது வாக்கு பதிவு நடந்தது?

பிஹாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 28-ஆம் தேதி 71 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 3-ஆம் தேதி 94 சட்டப்பேரவை தொகுதிகளிக்கும் நடைபெற்றது. 78 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்றாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7 நடைபெற்றது.

பிரசாரம், விமர்சனம் மற்றும் சில குறிப்புகள்

பிஹாரில் தாங்கள் வெற்றி பெற்றால் மாநிலத்தில அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு கடும் விமர்சனத்துக்கு இலக்கானது.

தேர்தல் சமயத்தில் ராம்விலாஸ் பாஸ்வான் மரணித்தார். அவரது மகன் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் நிதிஷ் குமாருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். ஆனால், பாஜகவுக்கு ஆதரவாகவே அவர் பேசினார்.

கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது, இந்த தேர்தலுக்கு பின்னர் தான் எந்த தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக பூர்னியா பகுதியில் பிரசார நிகழ்ச்சியில் பேசிய நிதிஷ் குமார் , "இதுவே எனது கடைசி தேர்தல்' என தெரிவித்தார்.

பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இந்த தேர்தலில் பிரசாரம் செய்தனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி, பிஹார் மக்களிடம் பிரதமர் மோதி பொய் பிரசாரம் செய்வதாக சாடினார்.

அவர், " கடந்த தேர்தலின்போது, 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்களே, அதை நடைமுறைப்படுத்தினீர்களா ?," என கேள்வி எழுப்பினார்

நரேந்திர மோதி ராகுல் காந்தியையும், தேஜஸ்வியையும் இரட்டை இளவரசர்கள் என சாடினார்.

அவர், " பிஹாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி, 2 பட்டத்து இளவரசர்களின் (ராகுல் காந்தி, லாலு மகன் தேஜஸ்வி யாதவ்) கூட்டணி. அவர்களுக்குத் தத்தமது சிம்மாசனங்களைப் பாதுகாப்பதில்தான் அக்கறை இருக்கிறது. ஒரு பக்கம் பா.ஜ.க. கூட்டணியின் இரட்டை என்ஜின் அரசால் முன்னேற்றம் வந்துள்ளது. மற்றொருபக்கம், இரட்டை இளவரசர்கள் தத்தமது சிம்மாசனத்தைக் காப்பாற்றும் ஒரே திட்டத்துடன் செயல்படுகின்றனர்," என்றார்.

கருத்து கணிப்புகள் கூறுவது என்ன?
பல்வேறு அரசியல் விமர்சகர்கள் பா.ஜ.க கூட்டணியே இந்த தேர்தலில் வெற்றி பெறும் என முதலில் அவதானித்து இருந்தனர். அதே நேரம் கடந்த தேர்தல்களை போல இந்த வெற்றியானது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அவ்வளவு சுலபமானதாக இருக்காது என அவர்கள் கூறி இருந்தனர்.

ஆனால், தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகள் மகாகத்பந்தனுக்கு சாதகமாகவே வந்துள்ளன.

ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் ஜன் கி பாத் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில், மகாகத்பந் கூட்டணி 118-138 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 91 முதல் 117 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

டுடேஸ் சாணக்யா நடத்திய கருத்து கணிப்பில், மகாகத்பந் கூட்டணி 161 - 191 தொகுதிகளில் வெல்லும் எனவும், தேசிய ஜனநாயக கூட்டணி 44-56 தொகுதிகளில் வெல்லும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் 44 விழுக்காட்டினர் தேஜஸ்வி யாதவுக்கு ஆதரவாகவும், 35 விழுக்காட்டினர் நிதிஷ் குமாருக்கு ஆதரவாகவும், 7 விழுக்காட்டினர் சிராக் பாஸ்வானுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் 139-161 தொகுதிகளில் மகாகத்பந் கூட்டணி வெல்லும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி 69 -91 தொகுதிகளில் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீகார் அடுத்த முதல்வர் யார்? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!