இன்று (15.02.2021, திங்கட்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மாநில முதலமைச்சரும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான பிப்லாப் தேப் உரையாற்றினார். அப்போது அவர் இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா விரும்புவதாக கூறியதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகி உள்ளது.
"இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'உள்துறை அமைச்சரான அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவராக இருந்தபோது அகர்தலா மாநில அரசு விருந்தினர் மாளிகையில் பல்வேறு தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், இந்திய மாநிலங்களை தாண்டி நேபாளம் மற்றும் இலங்கையிலும் ஆட்சியை விரிவுபடுத்த கட்சி திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்' என்று கூறினார்.
திரிபுரா முதலமைச்சரின் இந்த பேச்சு மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இறையாண்மை மிகுந்த நேபாளம், இலங்கை நாடுகளுக்கு எதிராக ஜனநாயக விரோதமாக பேசியிருக்கும் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன."
இது அண்டை நாட்டு உள்விவகாரங்களில் தலையிடும் செயல் எனவும், இதனால் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை பாதிக்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குற்றம் சாட்டியுள்ளது. முதலமைச்சர் ஒருவரிடம் இருந்து இதுபோன்ற கருத்துகள் வருவது துரதிரஷ்டவசமானது என கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தேர்தலில் சசிகலா போட்டியிட சட்டரீதியாக முயற்சி"
சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ரீதியாக சில முயற்சிகளைச் செய்து வருகிறோம் என்றும் அதில் வெற்றி பெற்றவுடன் அவர் போட்டியிடுவார் என்றும் டி.டி.வி. தினகரன் கூறியதாக இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
"தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோதி தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதனால் அவர் தமிழகத்துக்கு வருகை புரிவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதிமுகவினர் பேசும் பேச்சுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அம்மாவின் தொண்டர்கள் இருப்பது அமமுகவில் தான். இந்த இயக்கம் மட்டும் தான் முதல் அணி. இதில் மூன்றாவது, நான்காவது அணி எல்லாம் இல்லை.
சசிகலா உறவினர்களின் சொத்துகள் அரசுடமையாக்கப்படுகின்றன என்று கேட்கிறார்கள். அது சுதாகரன் சொத்தோ, இளவரசி சொத்தோ கிடையாது. அது கம்பெனி சொத்து. நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கிறது.
சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ரீதியாக சில முயற்சிகளைச் செய்து வருகிறோம். அதில் வெற்றி பெற்றவுடன் அவர் போட்டியிடுவார். சசிகலா போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்'' என டிடிவி தினகரன் கூறியுள்ளதாக அச்செய்தியில் உள்ளது.
டெஸ்ட் தொடா்: மே.இ. தீவுகள் சாம்பியன்
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே முதல் டெஸ்டில் வென்றிருந்த அந்த அணி, 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை முற்றிலுமாகக் கைப்பற்றியது என தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
டாக்காவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 142.2 ஓவா்களில் 409 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோஷுவா டி சில்வா 92 ரன்கள் விளாச, வங்கதேச தரப்பில் அபு ஜெயத் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தாா்.
பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் 96.5 ஓவா்களில் 296 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மெஹதி ஹசன் மிராஸ் 57 ரன்கள் சோ்க்க, மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரகீம் காா்ன்வால் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தாா்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 113 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 52.5 ஓவா்களில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கிருமா போனா் மட்டும் 38 ரன்கள் சோ்க்க, தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தாா்.
இறுதியாக 231 ரன்களை இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், 61.3 ஓவா்களில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிம் இக்பால் மட்டும் 50 ரன்கள் சோ்த்தாா். ரகீம் காா்ன்வால் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தாா். அவா் ஆட்டநாயகனாக, கிருமா போனா் தொடா் நாயகன் ஆனார்" என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.