இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் இரான் நடத்திய தாக்குதலில் 34 அமெரிக்க படையினருக்கு, அதிர்ச்சியால் மூளைக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.
17 துருப்புகள் இன்னும் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமை அலுவலகமான பெண்டகனின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
இரான் ராணுவ ஜெனரல் காசெம் சூலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது கடந்த ஜனவரி 8ஆம் தேதி இரான் தாக்குதல் நடத்தியது.
இதில் அமெரிக்கர்களுக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என்பதால் இரான் மீது பதில் தாக்குதல் நடத்தப் போவதில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஆனால், இரான் நடத்திய தாக்குதலால் 11 அமெரிக்க வீரர்கள் அதிர்ச்சியால் ஏற்பட்ட மூளை பாதிப்புகள் (Tramatic Brain Injury) காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க வந்த டிரம்பிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "அந்த அமெரிக்கர்களுக்கு தலைவலி போன்ற சிறு பிரச்சனைகள் இருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால், தீவிர பிரச்சனைகள் என்று ஏதுமில்லை. நான் இதற்கு முன் பார்த்த காயங்களுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமில்லை," என்று தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் ஜோனாதன் ஹாஃப்மேன், "தாக்குதலில் பாதிக்கப்பட்ட எட்டு ராணுவ வீரர்கள் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஒன்பது பேர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்," என்றார்.
மேலும் 16 பேர் இராக்கிலும், ஒருவருக்கு குவைத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 17 பேர் மீண்டும் பணிக்கு திரும்பி விட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.