கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரேசிலின் மிகப் பெரிய நகரமான சாவ் பாலோவில் இதே நிலை நீடித்தால் அடுத்த இரண்டு வாரங்களில் நகரின் சுகாதார அமைப்பு தகர்ந்துபோகும் என்று அதன் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாவ் பாலோ நகரிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 90 சதவீத இடம் ஏற்கனவே நிரம்பிவிட்டதாக மேயர் புருனோ கோவாஸ் எச்சரிக்கிறார்.
முடக்க நிலையை கடைபிடிக்காதவர்கள் மக்களின் உயிருடன் விளையாடுவதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
பிரேசிலில் கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றான சாவ் பாலோவில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட மூன்றாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
என்ன நடக்கிறது சாவ் பாலோவில்?
உலகின் பெரும்பாலான நகரங்களை போன்று சாவ் பாலோவிலும் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே முடக்க நிலை அமலுக்கு வந்துவிட்டது. அங்கு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி - கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு விட்டன.
"சாவ் பாலோவில் விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களைத் தண்டிக்கும் திட்டங்கள் ஏதும் அமலில் இல்லை. எனவே, மக்கள் முகக்கவசங்களை அணியாமலும், சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் தெருக்களில் வழக்கம்போல் சென்றதை பார்க்க முடிந்தது" என்று அவர் கூறுகிறார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளும் முடக்க நிலையில் தளர்வுகளை அறிவித்து இயல்புநிலையை நோக்கி திரும்பி வரும் நிலையில், சாவ் பாலோ நகரில் முடக்க நிலையை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் பேச்சுவார்த்தை இப்போதுதான் தொடங்கி உள்ளது.
சுமார் 1.2 கோடி மக்கள் தொகை கொண்ட சாவ் பாலோ நகரில் முடக்க நிலையை தீவிரப்படுத்துவது குறித்து தான் மாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக மேயர் கூறுகிறார்.
நகரம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நெருக்கடி நிலை உருவாவதற்கு முன்னர் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டுமென்றும், அதற்கு மக்கள் தொடர்ந்து வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டுமென்றும் மேயர் கோவாஸ் கூறுகிறார்.