Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.எஸ்.கே. வெற்றி வாய்ப்பு எப்படி? கொரோனா அச்சத்துடன் நாளை தொடங்குகிறது ஐபிஎல்

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (15:23 IST)
வரும் நாள்களில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதியாகும், எந்தத் தேதியில் கொரோனா உச்சம்பெறும், பயணங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற சந்தேகங்களும் அச்சமும் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, உலகின் பிரமாண்டமான விளையாட்டுத் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் போட்டிகளை நடத்துவோருக்கும் இருக்கிறது.

இந்த அச்சத்துக்கு மத்தியிலேயே வெள்ளிக்கிழமை சென்னையில் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா. அடுத்த 52 நாள்களுக்கு ஆறு நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன. இப்போதைக்கு மைதானத்துக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நகரங்களில் திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் என்ன செய்வது என்பது குறித்தும் யோசனைகள் செய்யப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு ஆறு நகரங்கள் தவிர, தேவைப்பட்டால் ஹைதராபாத்துக்கு போட்டிகளை மாற்றுவது என திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனால் போட்டிகள் எப்படி, எங்கு நடைபெறப் போகின்றன என்பதை உண்மையில் கொரோனாதான் தீர்மானகிக்கப்போகிறது.

கடந்த முறை கொரோனா வேகமாகப் பரவி வந்தபோது, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு போட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. தொலைக்காட்சிகளிலும் ஆன்லைனிலும் அதிகம் பேர் பார்த்த விளையாட்டு நிகழ்ச்சி என்ற பெருமை அப்போது அதற்குக் கிடைத்தது.

இப்போது தினசரி கொரோனா பாதிப்புகளில் உலகிலேயே இந்தியாவுக்கு முதலிடம். மொத்த எண்ணிக்கையில் பிரேசிலைக் கடந்து இரண்டாம் இடத்தை எட்டிவிட எத்தனிக்கிறது. மிக வேகமாக தொற்று பரவுவதைக் கருதி மகாராஷ்டிரா, டெல்லி, மத்தியப்பிரதேசம் உள்பட சில மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை ஏற்கெனவே அறிவித்திருக்கின்றன. சில மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. போட்டிகள் நடத்தப்படும் மும்பை, டெல்லி, சென்னை நகரங்களில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள்

ஐபிஎல் அணிகளுக்கு பயோ பப்பிள் என்ற கொரோனா நடமாட்ட விதிமுறைகள் இந்தப் போட்டிகளிலும் தொடருகின்றன. வீரர்கள், பயற்சியாளர்கள், நிர்வாகத்தினர் ஆகியோருக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும். எங்கெல்லாம் செல்ல வேண்டும், யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பவை பயோ பப்பிள் விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. போட்டிகள் முடியும் வரை யாரும் குறிபிட்ட வரம்பைத் தாண்டி வெளியே செல்ல முடியாது. இந்த முன்னெச்சரிக்கை வளையத்தையும் கொரோனா உடைத்திருக்கிறது. பயோ பப்பிள் வரம்புக்குள் இருந்த மும்பை அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான கிரண் மோரே, பெங்களூர் அணியின் ஆல் ரவுண்டரான டேனியல் சாம்ஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த இரு அணிகளும்தான் சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மோதப் போகின்றன.

மைதானத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. பந்தில் எச்சிலைத் தடவக்கூடாது, பிற அணி வீரர்களுடன் கைகுலுக்கக்கூடாது என்பன போன்ற பிற கட்டுப்பாடுகளும் தொடருகின்றன.

பயோ பப்பிள் கட்டுப்பாடுகள் தவிர, ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கேரவன் முறையில் போட்டிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. இதன்படி ஒரு அணி குறிப்பிட்ட மைதானத்தில் ஆட வேண்டிய அனைத்துப் போட்டிகளையும் ஆடி முடித்த பிறகே அடுத்த மைதானத்துக்குச் செல்ல வேண்டும். சொந்த ஊரில் எந்த அணிக்கும் போட்டிகள் கிடையாது.

சென்னை வெல்லுமா?

கோப்பையை யார் வெல்வார்கள் என்று கேட்டால் பெரும்பாலானவர்களின் தேர்வு மும்பை இந்தியன்ஸ் அணியாகத்தான் இருக்கிறது. ஆனால் பிற அணிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. உதாரணத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ். 10 பிளே ஆப், 8 இறுதிப் போட்டிகளில் விளையாடிய பெருமை சென்னை தவிர, வேறு எந்த ஐபிஎல் அணிக்கும் இல்லை.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தபடியாக அதிக பண மதிப்பு கொண்டதும் சென்னை அணிதான். மஞ்சள் நிறமும், கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இந்த அணியின் அடையாளங்கள். மூன்று முறை கோப்பையை வென்ற சென்னை அணி, டூ பிளெஸ்ஸி, சாம் கரன், ஜடேஜா, லுங்கி இங்கிடி, டிவைன் பிரேவோ போன்ற முக்கிய வீரர்களைக் கொண்டது. ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கையளிக்கிறார். வேகப் பந்துவீச்சில் கூடுதல் வலிமை காட்டினால் இந்த அணிக்கு கோப்பை கிடைக்கும் என்ற பொதுவான கருத்து உள்ளது. வரும் 10-ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் சென்னை அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதுகிறது.

முதல் போட்டி மும்பை Vs பெங்களூரு

இதுவரை நடந்த 13 ஐபிஎல் தொடர்களில் 5 முறை கோப்பையை வென்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். தொடர்ந்து மூன்றாவது முறையாக, அதாவது ஹாட்ரிக் பட்டத்தை வெல்லும் கனவுடன் அந்த அணி களமிறங்கப் போகிறது. ரோஹித் சர்மா, குயின்டன் டி காக், ஹர்திக் பாண்டயா, சூர்ய குமார் யாதவ், பொலார்ட், க்ருணாள் பாண்ட்யா, பும்ரா, போல்ட் போன்ற முக்கிய நட்சத்திரங்களைக் கொண்ட அணி இது. மும்பை அணிக்கு பெரிய அளவில் எந்த விதமான பலவீனங்களும் இல்லை என்றாலும், ஸ்பின்னர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற விமர்சனம் அந்த அணி மீது உண்டு.

முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராகக் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஐபிஎல் பயணம் இதுவரை தடுமாற்றங்களைக் கொண்டதாகவே இருந்திருக்கிறது. ஒரு போட்டியில் கொண்டாடினால், அடுத்த போட்டியிலேயே சரிந்து வீழும். நிலையற்றது. மூன்று முறை இறுதிப் போட்டிக்குச் சென்றாலும் ஒரு முறைகூட கோப்பையை வென்றதில்லை. ஆறு முறை லீக் சுற்றிலேயே வெளியேறி இருக்கிறது. விராட் கோலி, டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், படிக்கல் போன்ற நட்சத்திரங்களைக் கொண்ட அணி இது. வாஷிங்டன் சுந்தர் இந்த முறை கவனத்தை ஈர்த்திருக்கிறார். டெத் ஓவர்ஸ் எனப்படும் கடைசி ஓவர்களை வீசுவதில் பெங்களூர் அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது.

புள்ளி விவரங்கள் மும்பை அணிக்கே சாதகமாக இருக்கின்றன. ஆனால் 20 ஓவர் நாடகத்தில் முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments