விண்வெளி வீரர்களைப் போல் பிற மனிதர்களும் எதிர்வரும் காலத்தில் செவ்வாய் கிரகத்திற்குப் பயணிக்கலாம் என்பதுடன், அங்கு வாழவும் செய்யலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சர்வ சாதாரணமாகக் கூறுகிறது.
பூமிப் பந்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சுதந்திரமான ஒரு வாழ்க்கையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட, செவ்வாய் கிரகத்தை நோக்கிய மனிதனின் விண்வெளிப் பயணத்திற்கான அனைத்து அறிவியல், தொழில்நுட்ப முயற்சிகளையும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே மேற்கொண்டு வருகின்றனர்.
செவ்வாய் கிரக பயணம்
விஞ்ஞானத்தின் வியக்கத்தக்க வளர்ச்சியால் பூமியிலிருந்து பல்லாயிரம் மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள செவ்வாய் கிரகத்திற்கும் மனிதன் இன்னும் சில, பல ஆண்டுகளில் சென்றுவிட வாய்ப்புகள் உள்ளன.
அப்படியோர் அற்புதம் நிகழ்ந்து, செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் குடியேறினாலும், தற்போது பூமியில் இருப்பதைப் போன்றே அங்கும் சிக்கலின்றி இனப்பெருக்கம் செய்ய இயலுமா என்பதுதான் அறிவியல் உலகத்தின் முன் தற்போதுள்ள சவால் நிறைந்த கேள்வி.
அப்படி செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் மனிதன் அங்கு குழந்தைப் பேற்றை அடைய முடியாதபட்சத்தில், அதற்காக அவன் மீண்டும் 225 மில்லியன் கிமீ என்னும் நீண்ட நெடிய தொலைவைக் கடக்க, ஏழு மாதங்கள் பயணித்து பூமிக்கு வந்தாக வேண்டும்.
இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம். ஆகையால் விண்வெளியிலேயே மனிதன் இனப்பெருக்கம் செய்து கொள்ள வேண்டிய நிலை வரும்.
ஆனால், அதிக கதிர்வீச்சு போன்ற காரணங்களால், விண்வெளியில் மனித உடலுக்கு எதிரான சூழலே நிலவுகிறது. அத்துடன் அங்கு மனிதர்களின் விந்தணுக்களும் கருமுட்டைகளும் அதிக செயல்திறன் கொண்டவையாக இருப்பதும் குழந்தை பிறப்பில் பல்வேறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விந்தணு
ஆனாலும், விண்வெளியில் மனிதனின் இனப்பெருக்கத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் முயற்சிகளில் நாசா இறங்கியுள்ளது.
இந்த ஆய்வின் முக்கிய அம்சமாக, மனிதனின் உறைந்த நிலையிலான விந்தணுக்களின் முதல் மாதிரியை அண்மையில் நாசா விண்வெளிக்கு அனுப்பியது.
அங்கு அவை மீண்டும் திறன்மிக்கவையாகச் செயல்பட்டாலும், அவற்றின் இயக்கம் வழக்கத்தில் இருந்து மாறுப்பட்டு இருந்ததுடன், மரபணுக்களிலும் (DNA) சேதம் ஏற்பட்டிருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
விண்வெளியில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES
விந்தணுக்களின் இதுபோன்ற எதிர்மறை மாற்றங்கள், அவை கருமுட்டையுடன் இணைந்து கரு உருவாவதற்கான வாய்ப்பைக் குறைத்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஆனால் இதற்கு நேர்மாறாக, விண்வெளியில் பல மாதங்கள் உறைந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த மனித விந்தணுக்களை மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்து, அவற்றை பெண்ணின் கருமுட்டைகளுடன் இணைத்தபோது, கரு உண்டாகி ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் அதிசயத்தையும் விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.
அத்துடன் விண்வெளியில் இருந்தபோது விந்தணுக்களில் ஏற்பட்ட மரபணுக்கள் சிதைவும், பூமியில் அது கருமுட்டையுடன் இணையும்போது அந்தச் சிதைவு இயற்கையாகவே சரியாகும் விந்தையையும் விஞ்ஞான உலகம் கண்டு உணர்ந்துள்ளது.
புற்றுநோய் அபாயம்
இத்தகைய சூழலில், விண்வெளியில் மனிதக் கரு ஒன்றை உருவாக்கி வளர்க்க வேண்டுமென்றால், முதலில் அங்குள்ள கடுமையான, ஊறு விளைக்கும் கதிர்வீச்சில் இருந்து அதைக் காக்க வேண்டும்.
இல்லையெனில், கருவின் விரைவான வளர்ச்சியின் விளைவாக, பிறக்கும் குழந்தை பல்வேறு மரபணு மாற்றங்களுக்கு ஆளாக நேரிடும். அத்துடன் குழந்தைப் பருவ புற்றுநோய்கள் உண்டாகும் அபாயமும் அதற்கு அதிகமாக இருக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
விண்வெளியில் நிலவும் அதிகமான கதிர்வீச்சு சூழலைப் போலவே, புவியீர்ப்பு விசையில் இருந்து அதிகமான நேரம் விலகி இருப்பதும் குழந்தை பிறப்பு மற்றும் அதன் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
விண்வெளியில் மாதக்கணக்கில் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் வீரர்கள், குறைந்த ஈர்ப்பு விசையின் விளைவாக தசைகளில் தேய்மானம், எலும்புகளின் அடர்த்தி குறைவது, உடம்பில் பயணிக்கும் ரத்தத்தின் அளவு குறைவது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்பதை விஞ்ஞான உலகம் நன்கு அறியும்.
புவி ஈர்ப்பு விசை எனும் மாபெரும் சக்தி
இத்தகைய சூழலிலும், பூமிக்கு வெளியே எதிர்காலத்தில் மனித இனப்பெருக்கத்திற்கு வாய்ப்புள்ளதாகவும், அது அநேகமாக செவ்வாய் கிரகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எதிர்பார்ப்பின்படி அங்கு ஒரு குழந்தை பிறந்தால், பூமியின் மேற்பரப்பில் உள்ள ஈர்ப்பு விசையில் 38% மட்டுமே செவ்வாயில் இருப்பதன் காரணமாக, குழந்தையின் பிறப்பு மற்றும் வளர்ச்சியை அது பாதிக்கும் என்ற அச்சத்தையும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.
சரி… மனித இனப்பெருக்கத்திற்கு செவ்வாய் கிரகத்தில் பல்வேறு சவால்கள் இருக்கும் நிலையில், மைக்ரோ கிராவிட்டி (மனிதனோ அல்லது பொருளோ எடையற்றதாகத் தோன்றும் நிலை) நிலவும் விண்வெளி நிலையத்தில் ஆரோக்கியமான இனப்பெருக்கம் சாத்தியமா?
இதுவும் ஆராயப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியிலும் நேர்மறையான முடிவுகள் வந்ததாகத் தெரியவில்லை.
அதற்குக் காரணம் விண்வெளி நிலையத்தில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட எலிகளின் செயல்பாடுகள், பூமியில் பிறக்கும் எலிகளின் இயல்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதையும், அவற்றிடம் எலிகளுக்குரிய இயல்பான உணர்வுகள் இல்லாமல் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மைக்ரோ கிராவிட்டி சூழலில் பிறக்கும் எலிகளுக்கே இந்த நிலைமை என்றால், இந்தச் சூழலில் மனிதக் குழந்தைகள் பிரசவிக்கப்படுவதாக வைத்துக் கொண்டால், அந்தக் குழந்தைகளின் நடவடிக்கைகளும் புவியில் பிறககும் குழந்தைகளின் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டுதான் இருக்கும் என்பதே மருத்துவ விஞ்ஞானிகளின் ஆணித்தரமான கருத்தாக உள்ளது.
மூட்டைப்பூச்சிகளால் மனிதனை உயிரோடு சாப்பிட முடியுமா? அமெரிக்கச் சிறையில் அதிர்ச்சி சம்பவம்
அதாவது, விண்வெளி நிலையத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அது ஊர்ந்து செல்ல இயல்பாகக் கற்றுக் கொள்ளாது; மாறாக மிதப்பதற்குக் கற்றுக்கொள்ளும். இதேபோன்று மெல்ல மெல்ல நடை பழகுவதற்குப் பதிலாக, இரு கைகளால் தன்னைத்தானே உந்தித் தள்ளுவதற்குப் பழகும்.
அதன் தசை மற்றும் எலும்புகளும் உடலின் கீழ் பகுதியில் சிறியதாகவும் உடலின் மேல்பகுதியில் பெரியதாகவும் உடலமைப்பு சமமற்று காணப்படும்.
விண்வெளி வீரர்களைப் போலவே அந்தக் குழந்தையின் உடம்புக்குள் இருக்கும் திரவங்கள் மார்பு, தலைப் பகுதி என்று மேல்நோக்கிச் செல்லும் என்பதால், அந்தக் குழந்தைக்கு அது வீங்கிய முகத்தோற்றத்தையே கொடுக்கும்.
மொத்தத்தில் விண்வெளியில் பிறந்து வளர்ந்த குழந்தையால் பூமியில் ஒருபோதும் வாழ முடியாது. அதனால் நிற்கவோ, நடக்கவோ, ஏன் சுவாசிக்கவோகூட முடியாமல் போகலாம்.
இதைப்போன்று, விண்வெளிக்குச் செல்லும் ஒரு வீரருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அவருக்கு விண்வெளி நிலையத்திலேயே அந்த சிகிச்சையை மேற்கொள்ள இயலாது. அவர் தமது ஆராய்ச்சிப் பணிகளைக் கைவிட்டு உடனே பூமிக்குத் திரும்பியாக வேண்டும்.
அப்படியென்றால், சிசேரியன் மூலம் ஒரு பெண்ணுக்கு குழந்தையைப் பிரசவிக்கும் சூழல் ஏற்பட்டால், விண்வெளியில் அதை மேற்கொள்வது சாத்தியமா என்ற கேள்வியையும் மருத்துவ நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.
ஏனெனில், எலி, பன்றி என்று மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் விலங்குகளுக்குக்கூட இதுநாள் வரை விண்வெளியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விஞ்ஞானிகளுக்கு சவால்
புவி ஈர்ப்பு விசை என்னும் மாபெரும் சக்தியே மனிதனை பூமியில் இன்றளவும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்த சக்தியை மீறி, வேற்று கிரகத்தில் மனிதன் வாழ்வது சாத்தியமா?
அவ்வாறு வாழும் வாய்ப்பு கிடைத்தால், அங்கு மனிதன் உடல்ரீதியாகச் சந்திக்கும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு தமது அடுத்த சந்ததியை இனப்பெருக்கம் செய்ய முடியுமா?
அவ்வாறு முடிந்தாலும், பூமியில் வாழ இயலாத ஒரு குழந்தையை கஷ்டப்பட்டு பெற்றெடுப்பது இயற்கை நெறிமுறைகளுக்கு எதிரானது ஆகாதா என்பன போன்ற கேள்விகள் பல்வேறு தளங்களில் எழுப்பப்பபட்டு வருகின்றன.
சூரிய குடும்பத்தில் பூமியைத் தாண்டி வேறொரு கிரகத்தில் மனிதனை வாழ வைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ள விஞ்ஞானிகள், மனித இனப்பெருக்கத்திற்கு விண்வெளியில் உள்ள சவால்களுக்குத் தீர்வு காண்பதே இந்தக் கேள்விகளுக்கான விடையாக இருக்கும்.