கால்பந்து வீரர் மாரடோனா உயிரிழந்து நான்கு நாட்களுக்குப் பிறகு அவரின் மருத்துவர் வீட்டில் அர்ஜென்டினா அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மரடோனாவின் சிகிச்சையில் ஏதேனும் கவனக் குறைவு நடைபெற்றதா என்பதை விசாரிக்கும் வகையில் மருத்துவர் லியோபோல்டோ லூக்கின் வீடு மற்றும் மருத்துவமனையில் சோதனை நடைபெற்றது.
60 வயதாகும் மாரடோனா தனது வீட்டில் அறுவை சிகிச்சையிலிருந்து தேறி வரும்போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
மருத்துவரின் மீது எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. அவரும் தான் குற்றம் ஏதும் புரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாத தொடக்கத்தில் மாரடோனாவிற்கு மூளையில் ரத்தக் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சை பெறுவதாகவும் இருந்தார் மரடோனா. இந்நிலையில்தான் மாரடைப்பால் உயிரிழந்தார் மாரடோனா.
தனது தந்தையின் விவரமான மருத்துவ அறிக்கையைக் கோரியுள்ளார் மரடோனாவின் மகள்.
விசாரணை எதற்காக?
மாரடோனாவின் மருத்துவர் லூக்கின் வீட்டில் 30 அதிகாரிகளும், அவரது மருத்துவமனையில் 20 போலீஸ் அதிகாரிகளும் ஞாயிறன்று காலை சோதனையிட்டனர்.
மாரடோனாவின் கடைசி நாட்கள் குறித்து தெரிந்து கொள்வதற்காக விசாரணையாளர்களால் இந்த சோதனைக்கு உத்தரவிடப்பட்டது.
சோதனையில் கணினிகள், மொபைல் ஃபோன், மருத்துவக் குறிப்புகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாரடோனா அறுவை சிகிச்சைக்குப் பின் வீட்டிலிருந்தபோது, எப்போது அழைத்தாலும் வரக்கூடிய மருத்துவர்கள், போதைப்பழக்கத்தில் இருப்பவர்களை கண்காணிக்கும் செவிலியர்கள், மற்றும் மின்சாரம் மூலம் இதயத் துடிப்பை மீண்டும் கொண்டுவரச் செய்யும் கருவிகள் கொண்ட அவசர ஊர்தி என அனைத்தும் வழங்கப்படவில்லை என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
மாரடோனா வீட்டிலிருக்கும்போது அவரின் மருத்துவர் போதுமான வசதிகளைச் செய்து கொடுத்தாரா என்று அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
மருத்துவரின் கூற்று என்ன?
ஞாயிறன்று நடைபெற்ற ஒரு உணர்ச்சிகரமான செய்தியாளர் சந்திப்பில் மாரடோனாவின் மருத்துவர் லூக், ஒரு நண்பரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தான் எடுத்ததாக அழுது கொண்டே கூறினார்.
மேலும் மாரடோனா கடைசி நிமிடங்களில் மிகவும் வருத்தமாக இருந்ததாகத் தெரிவித்தார் அவர்.
ஒரு கட்டத்தில் செய்தியாளர்களை நோக்கி, "உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்? நான் என்ன செய்தேன் என்றா? நான் அவரை நேசித்தேன், என்னால் முடிந்தவரை அனைத்தும் செய்தேன்," என மருத்துவர் லூக் உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.
மேலும் அதிகாரிகளின் விசாரணை குறித்துப் பேசிய மருத்துவர், தனது பொறுப்புகள் உண்மையில் என்ன என்று சந்தேகம் எழுப்பினார். "நான் ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், அதோடு என் வேலை முடிந்துவிட்டது." என மாரடோனாவின் சிகிச்சை குறித்தும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் வீட்டில் இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது தனது பொறுப்பில்லை என்றும் தெரிவித்தார்.
"அவர் குடிப்பழக்கத்திலிருந்து விடுப்பட உதவும் மறுவாழ்வு மையத்திற்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை அவர் விரும்பவில்லை," என்று தெரிவித்த மருத்துவர் லூக், மாரடோனா "கட்டுப்படுத்த முடியாத நிலையில்" இருந்தார் என்றும் தெரிவித்தார்.
மேலும் மாரடோனாவின் வீட்டிற்கு வெளியே அவசர ஊர்தி நிறுத்தப்படாததற்கு யார் காரணம் என்றும் தனக்குத் தெரியவில்லை என லூக் தெரிவித்தார்.
மேலும், "மாரடோனா மிகவும் வருத்தமாக இருந்தார். அவர் தனிமையில் இருக்க விரும்பினார். அதற்குக் காரணம் அவர் அவரின் மகள்களையோ, அவரது குடும்பத்தாரையோ அல்லது அவரைச் சுற்றி இருந்தவர்களையோ நேசிக்கவில்லை என்று பொருள் இல்லை." என லூக் தெரிவித்தார்.