Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலேசியத் தமிழ் தொழிலாளர்களை காவு வாங்கும் மலிவு விலை மது: காரணமும் தீர்வும்

Advertiesment
Malaysian Tamil
, வெள்ளி, 29 நவம்பர் 2019 (18:02 IST)
மலேசியாவில் அண்மைக் காலங்களில் மலிவு விலை மது விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், மலேசியத் தமிழ் இளைஞர்கள் மது மற்றும் போதைப் பழக்கத்தால் திசைமாறிச் செல்வதாகவும், மலிவு விலை மதுவை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் எனவும் குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
150 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து கூலி தொழிலாளர்களாக மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் புலம் பெயர்ந்து சென்றடைந்த தேசத்தில் தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைச் சூழலை அமைத்துக் கொள்ளவும், புலம்பெயர்ந்துள்ள தேசத்தின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப மாறிக் கொள்ளவும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்.
 
ஏற்கனவே மலேசியாவில் குடியேறிய தமிழர்கள் மட்டுமல்லாது, தற்போது தமிழகத்தில் இருந்து உடல் உழைப்பு சார்ந்த வேலைகளுக்காக மலேசியாவில் கால்பதிக்கும் தொழிலாளர்களும் மலிவு விலை மதுவால் போதைக்கு அடிமையாகின்றனர்.
Malaysian Tamil
மலிவு விலை மது விற்பனைக்கு மலேசிய அரசு தடைவிதிக்குமா? மலிவு விலை மதுவால் மலேசியத் தமிழர்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்பதை அறிய பிபிசி தமிழுக்காகப் பல்வேறு தரப்பினரிடமும் பேசினோம்.
 
13 வயதிலேயே மது குடிக்கும் சிறுவர்கள்: கவலை தரும் புள்ளிவிவரங்கள்
மலேசியாவில் 13 அல்லது 14 வயதிலேயே மது அருந்தும் பழக்கத்திற்கு சிறுவர்கள் ஆளாவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் மலேசியர்கள் மதுவுக்காக 2 பில்லியன் ரிங்கிட் செலவிடுவதாக கடந்த 2016ஆம் ஆண்டு இச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
"கடந்த 2012இல் வெளியான புள்ளிவிவரங்களின்படி மலேசியாவில் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30.8 விழுக்காட்டினருக்கு அந்நோய் வர மதுப்பழக்கமே காரணம் என தெரியவந்துள்ளது. இதேபோல் பெண்களில் 28.6 விழுக்காட்டினருக்குக் கல்லீரல் அழற்சி ஏற்பட மதுவே முதன்மைக் காரணமாக இருந்துள்ளது," என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
 
2012ஆம் ஆண்டு கணக்கின்படி மலேசியாவில் நிகழும் சாலை விபத்துகளில் 30 விழுக்காடு விபத்துகளுக்கு மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதே காரணம் என மலேசிய சாலைப் பாதுகாப்புக் கவுன்சிலின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகம் தெரிவிக்கிறது.
Malaysian Tamil
ஆனால் மலிவு விலை மது தடை செய்யப்பட்டால், கள்ளச் சாராயப் பயன்பாடு பெருகிவிடும் என்று ஒருதரப்பினர் எச்சரிக்கின்றனர். மலேசிய அரசும் இதைச் சுட்டிக்காட்டுகிறது.
 
இந்நிலையில் முழுமையான மதுவிலக்கு என்பது சரியான தீர்வாக இருக்காது என்று மலேசிய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மதுவால் ஏற்படும் தீங்குகளைக் குறைக்க வேறு சிறந்த வழிகள் குறித்து ஆராய வேண்டும் என அச்சங்கம் கூறுகிறது.
 
தினமும் ஐந்து புட்டி மது அருந்தும் உடல் உழைப்புத் தொழிலாளர்கள்
 
மலேசியாவில் தற்போது 1.80 ரிங்கிட்டுக்கு (இந்திய மதிப்பில் ரூ.32) 150 மில்லி அளவுள்ள மதுப்புட்டியை வாங்கிவிட முடியும். அதனால் இளைஞர்கள் அந்த மதுவகைகளின் பால் அதிகம் ஈர்க்கப்படுவதாகச் சொல்கிறார் மலேசிய மலிவுவிலை மது எதிர்ப்பு இயக்கத்தின் செயல்பாட்டுத் தலைவர் டேவிட் மார்ஷல்.
 
கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக மலிவு விலை மதுவைத் தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார் இவர்.
 
"மலேசியாவின் மது விற்பனைச் சந்தையின் மதிப்பு 13 பில்லியன் மலேசிய ரிங்கிட். இந்நிலையில் மலிவு விலை மதுபானங்களின் விற்பனை அளவானது வெறும் 800 மில்லியன் மலேசிய ரிங்கிட்தான். இதர மது வகைகள் அனைத்துமே இறக்குமதி செய்யப்படுகின்றன. விலை அதிகம் என்பதால் சாமானியர்கள் அதை வாங்க இயலாது. எனவே, மிக மலிவான விலை நிர்ணயித்து விற்பனை செய்யப்படும் மது வகைகளை வாங்கவேண்டி உள்ளது.
 
"மிகக் குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும்தான் மலிவு விலை மதுவை அதிகம் வாங்குகின்றனர். ஆனால் அதன் தரம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை அவர்கள் யோசிப்பதில்லை," என்கிறார் டேவிட் மார்ஷல்.
Malaysian Tamil
1.80 மலேசிய ரிங்கிட்டுக்குச் சிறிய மதுப்புட்டி கிடைப்பதால் உடல் உழைப்புத் தொழிலாளர்கள், இளைஞர்கள் பலர் காலையில் பணிக்குச் செல்லும் முன்பே ஒரு புட்டி மது வாங்கி அருந்துவதாகச் சொல்லும் இவர், பிறகு மதியம், மாலை வேளைகளில் தலா ஒன்று, இரவு 2 புட்டிகள் என சர்வ சாதாரணமாக நாள்தோறும் 5 புட்டி மதுவை உட்கொள்வது சிலருக்கு வழக்கமாகி விட்டது என்கிறார்.
 
இதற்காக அவர்களுக்கு நாள்தோறும் 9 மலேசிய ரிங்கிட் (ரூ.160) மட்டுமே தேவைப்படுகிறது என்றும், இதனால் அதிக மது குடிப்பது - குறைவான, ஊட்டச்சத்து இல்லாத உணவு ஆகியவற்றால் அவர்களது உடல்நிலை, உடனுக்குடன் பாதிக்கப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
 
"இதனால் 60 வயது வரையேனும் வாழ வேண்டியவர் 40 வயதிலேலேயே இறந்து விடுகிறார். மதுவால் ஏராளமான மலேசிய இந்தியர்கள் உயிரிழந்து வருவதால் தனித்து வாழும் தாய்மார்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் மேல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை என்றாலும் நிச்சயம் இந்த விவரம் சரியாகத்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது," என்கிறார் டேவிட் மார்ஷல்.
 
பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் இல்லாத நிலை
மலிவு விலை மதுவை ஒழிக்கவேண்டும் என்பதற்காக இவரது அமைப்பு கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி நாடு முழுவதிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் கையெழுத்துகளைப் பெற்றுள்ளது.
Malaysian Tamil
"இதையடுத்து மலிவு விலை மது விற்பனை தொடர்பாக சில கட்டுப்பாடுகளையேனும் விதிக்கவேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதன்படி 50 ரிங்கிட்டுக்கும் குறைவான தொகையில் மது விற்கக் கூடாது, சிறிய புட்டிகளில் வைத்து மது விற்பனை செய்யக்கூடாது, சிகரெட் உறைகளில் காணப்படுவதுபோல் மதுப் புட்டிகளிலும் அதை அருந்துவதால் பாதிப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டிக்கர்களை ஒட்டவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
 
"இது தொடர்பாக கடந்த 2014ஆம் ஆண்டு அப்போதைய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்திடம் மனு அளித்தோம். இதையடுத்து ஒரு குழுவை அமைத்து இந்தக் கோரிக்கைகள் தொடர்பாகப் பரிசீலிக்க அவர் உத்தரவு பிறப்பித்தார். அதன் பலனாக நாங்கள் முன்வைத்த 7 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை அரசுத் தரப்பு ஏற்றது. எனினும் அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.”
 
"காரணம், மது உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் இவற்றைப் பின்பற்ற கால அவகாசம் கோரியுள்ளனர். மலேசியாவில் 30-க்கும் குறைவான மதுபான உற்பத்தி நிறுவனங்களே உள்ளன. ஆனால், எங்களுடைய கோரிக்கைகளை அமல்படுத்துவதற்கான சுகாதார அமைச்சின் முடிவை மாற்றியமைக்கும் அளவுக்கு அவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர்.”
 
"மது விற்பனையால் அரசாங்கத்துக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கின்றது. ஆனால், மதுவுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்கான மறுவாழ்வு மையங்கள் மலேசியாவில் போதுமான அளவு இல்லை. அரசாங்கம் இது தொடர்பாக கூட நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது."
 
"மலேசியாவில் இந்தியர்கள்தான் மதுப்பழக்கத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் 7 மாநிலங்களில்தான் இந்தியர்கள் அதிகளவு வசிக்கின்றனர். அந்த மாநிலங்களிலேனும் மறுவாழ்வு மையங்களைத் தொடங்கக் கூடாதா? என்பதே எங்கள் கேள்வி," என்கிறார் டேவிட் மார்ஷல்.
 
மது விலையை அதிகப்படுத்துவதே உடனடித் தீர்வாக அமையும்
Image caption
பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினரான சதீஷ் முனியாண்டி
தேசிய அளவில் மதுக்கொள்கை ஒன்றை வகுப்பதே இப்பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் என்கிறார் பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினரான சதீஷ் முனியாண்டி.
 
போலி மது, மலிவு விலை மதுப் பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் தானும் குரல் கொடுத்திருப்பதாக இவர் சொல்கிறார்.
 
மலிவு விலை மதுவால் இந்திய இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்று குறிப்பிடும் சதீஷ் முனியாண்டி, மது விலையை அதிகப்படுத்துவதுதான் நல்ல தீர்வாக அமையும் என்கிறார். விலை அதிகரிக்கும்போது வாங்கும் சக்தி குறையும் என்றும், நாள் ஒன்றுக்குப் பல புட்டி மதுவை அருந்தும் ஒருவர் வேறு வழியின்றி அதன் எண்ணிக்கையைக் குறைப்பார் என்றும் இவர் எதிர்பார்க்கிறார்.
 
மது குடிப்பதால் உண்டாகும் 7 வகை புற்றுநோய்- ஆராய்ச்சியில் தகவல்
13 ஆண்டுகளில் மது அருந்துவதை பாதியாக குறைத்த ரஷ்யா - எப்படி நடந்தது அதிசயம்?
மேலும் 100 மில்லிக்கும் குறைவான அளவு கொண்ட மதுப்புட்டிகளை விற்பதற்குத் தடை விதிக்கவேண்டும் என்பதும் இவரது கோரிக்கை. ஆனால், மது உற்பத்தியாளர்கள் தரப்பில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது.
 
மலேசியாவின் மத்திய அமைச்சரவையில் 4 இந்தியர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்திய சமுதாயத்துக்கு மிகவும் அவசியமான மது ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக அவர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை? என்று பலரும் தம்மிடம் கேள்வி எழுப்பியதை ஒப்புக்கொள்ளும் சதீஷ் முனியாண்டி, 4 அமைச்சர்களும் சமுதாய அக்கறையுடன் செயல்படுகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்கிறார்.
 
"இந்திய இளைஞர்களை மது மற்றும் போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடச் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கிறோம். அதற்கான திட்டங்களையும் முன்வைத்திருக்கிறோம். அவற்றைச் செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவேதான் தேசிய அளவில் கொள்கை முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம்,” என்கிறார் சதீஷ் முனியாண்டி.
 
40 ஆண்டுகளாக மதுவை ஒழிப்பு போராட்டம்
படத்தின் காப்புரிமைSUBBARAO
Image caption
பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி மேலதிகாரி சுப்பாராவ்
கடந்த 40 ஆண்டு காலமாக மலேசியாவில் மதுவை முழுமையாக ஒழிக்கவேண்டும் எனப் போராடி வருகிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.
 
கடந்த நான்கைந்து ஆண்டுகளாக மலேசியாவுக்கு வரும் அந்நியத் தொழிலாளர்களும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகித் தங்கள் சம்பாத்தியத்தில் சரிபாதியை இழந்து வருவதாக கவலை தெரிவிக்கிறார் இச்சங்கத்தின் கல்வி மேலதிகாரியான என்.வி. சுப்பாராவ்.
 
"கடந்த 1980களில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மது வகைகளை பிளாஸ்டிக் உறைகளில் அடைத்து விற்பனை செய்து வந்தனர். மலாய் மொழியில் 'சம்சு' (Samsu) என்றால் சாராயம் என்று அர்த்தம். 100 அல்லது 150 மில்லி லிட்டர் சாராயத்தை பிளாஸ்டிக் உறைகளில் நிரப்பி விற்றபோது பெரியவர்கள் மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களும் அதை வாங்கத் தொடங்கினர்.”
 
"விலை குறைவான, எளிதில் வாங்கக்கூடிய வகையில் சாராயத்தை விற்றதால், பள்ளி மாணவர்கள் சாராய உறைகளை வாங்கி கால்சட்டைப் பையில் வைத்துக்கொண்டு செல்வது சுலபமாக இருந்தது. எங்கு சென்றாலும் ஏதோ குளிர்பானம் பருகுவது போல் சாராயத்தைப் பருகத் தொடங்கினர்.”
 
"எனவே, பிளாஸ்டிக் உறை மதுவுக்குத் தடை விதிக்கக் கோரி பெரும் போராட்டங்களில் ஈடுபட்டோம். அதன் பிறகே எத்தகைய மதுவாக இருந்தாலும் அதைப் புட்டிகளில் (பாட்டில்) அடைத்து விற்கும் முறை நடைமுறைக்கு வந்தது. ஆனால், அந்தச் சூழ்நிலையையும் மது விற்பனையாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்," என்கிறார் சுப்பாராவ்.
 
புகைப் பழக்கத்தால் 20 ஆயிரம் பேர் உயிரிழப்பு: மதுவால் எத்தனை பேர்?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
"மலேசியாவில் எத்தனை பேர் மதுப் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர், ஆண்டுதோறும் எத்தனைப் பேர் மதுவால் இறக்கின்றனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் இறந்து போவதாகக் கூறப்படுகிறது.
 
"எங்களைப் பொறுத்தவரை மலேசிய இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 5 லட்சம் மலேசிய ரிங்கிட்டை (இந்திய மதிப்பில் 90 லட்சம் ரூபாய்) செலவிடுவதாகக் கணக்கிட்டுள்ளோம். அப்படியெனில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேருக்கு மதுப்பழக்கம் இருக்கும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. உண்மையில் இதைவிட அதிகமானோருக்கு அப்பழக்கம் இருக்கும். அதேசமயம் கல்லீரல் பாதிப்பால் இறப்போரின் எண்ணிக்கையும் மலேசியாவில் அதிகரித்து வருகிறது.
 
"அண்மைக் காலமாக வெளிநாட்டு தொழிலாளர்கள் போலி மது, மலிவு விலை மதுவால் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுப் பரிதவிப்பதும், பெண்களும் கூட மது அருந்துவதாக வெளிவரும் தகவல்களும் கவலை அளிக்கின்றன.
 
"வங்கதேச, மியன்மர் தொழிலாளர்களும், தமிழகத் தொழிலாளர்களும் மலிவு விலை மதுவால் வருமானத்தை இழக்கிறார்கள். மலேசியாவுக்காக உழைக்கும் அவர்களைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. எனவே அரசாங்கம் இது தொடர்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது," என்கிறார் சுப்பாராவ்.
 
ஒயின் அருந்துவது நல்லது என்றால் ஏன் தடை செய்ய வேண்டும்: மலேசிய மருத்துவ சங்கம்
படத்தின் காப்புரிமைFACEBOOK
Image caption
மலேசிய மருத்துவ சங்கத் தலைவர் ஞான பாஸ்கரன்
அண்மையில் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஆனால் இந்த நடவடிக்கை சரியானதல்ல என்கிறது மலேசிய மருத்துவ சங்கம்.
 
அச்சங்கத்தின் தலைவரான மருத்துவர் ஞான பாஸ்கரன், முழு மதுவிலக்கை அமல்படுத்துவதைக் காட்டிலும் மதுவால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சிறந்த தீர்வாக அமையும் என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
மதுவை முற்றிலும் ஒழிப்பதை விட அவற்றை விற்பனை செய்வதற்கான நடைமுறைகளில் கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது நல்லது என்கிறார் இவர்.
 
"மலிவு விலை மது விற்பனையைக் கட்டுப்படுத்துவது குறித்தும், 24 மணி நேரமும் மது விற்கும் கடைகளின் எண்ணிக்கை, விற்பனை நேரத்தைக் குறைப்பது குறித்தும் அரசு பரிசீலிக்கலாம்.
 
"இதய நோயாளிகள் மருத்துவக் காரணங்களுக்காக மிகவும் குறைவான அளவு இரவு நேரத்தில் மது அருந்தலாம் என மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. உடனே மருத்துவர்கள் மதுப் பழக்கத்தை ஆதரிப்பதாக நினைத்துவிடக் கூடாது . மலிவு விலை மதுவால் உடல்நலம் பாதிக்கப்படும், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்பது உண்மைதான். அதே சமயம் மலிவு விலை மதுவை தடை செய்தால் கள்ளச் சாராயப் புழக்கம் அதிகரித்துவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்," என்கிறார் மருத்துவர் ஞானபாஸ்கரன்.
 
"மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவோரைக் கண்டறிய சாலைத் தடுப்புச் சோதனைகளை அதிகப்படுத்தலாம். மாறாக, நாள்தோறும் 'ஒயின்' அருந்துவது உடல்நலத்துக்கு நல்லது எனும்போது அந்த வாய்ப்பை ஒருவர் பயன்படுத்திக் கொள்வதை ஏன் தடுக்கவேண்டும்?" என்று கேள்வி எழுப்புகிறார் மற்றொரு மருத்துவச் சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் சௌவ்.
 
மது உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு
படத்தின் காப்புரிமைSUBRAMANIAM-DATO
Image caption
மலேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்
மது மற்றும் போதைப் பழக்கத்தில் சிக்கியுள்ள மலேசிய இந்தியர்களை மீட்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டிருந்ததாகவும், அவற்றைச் செயல்படுத்துவதற்கு முன் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டதாகவும் சொல்கிறார் மலேசியாவின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரான டத்தோ டாக்டர் சுப்ரமணியம்.
 
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மலிவு விலை மது வகைகளின் விலையை கணிசமாக உயர்த்துவது, கடைகளில் அவற்றை விற்பனை செய்யும் நேரத்தைக் குறைப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டு அவற்றில் சிலவற்றை தாம் ஏற்றுக் கொண்டதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
"இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது வருமானம் குறைவாக உள்ள நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாங்கும் மது வகைகளின் விலையை ஏன் உயர்த்துகிறீர்கள்? ஏன் பணக்காரர்கள் வாங்கும் மதுவின் விலையை உயர்த்தவில்லை? என்று ஒருதரப்பினர் கேள்வி எழுப்பினர்.
 
"இத்தகைய கேள்விகளைக் கடந்து நடவடிக்கை எடுத்த போதிலும், மது உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அப்போதைய நிதியமைச்சர் இதில் தலையிட்டு, உற்பத்தியாளர்களின் கோரிக்கையையும் பரிசீலிக்க வேண்டும் என்றார். ஆட்சி மாற்றத்துக்குப் பின் முந்தைய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடரும் என கூறினர். ஆனால் புதிய ஆட்சியில் எந்தளவு நடைமுறைப்படுத்தி உள்ளனர் என்பது தெரியவில்லை," என்றார் டாக்டர் சுப்ரமணியம்.
 
கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
 
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்
முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil
மீத்தேன் கலந்த மதுவால் உயிரிழந்த தமிழகத் தொழிலாளர்கள்
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், உயர் பிரிவு விசாவில் பணியாற்ற வரும் தொழில் நிபுணர்களும் கூட மலிவு விலை மதுவுக்கு பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலைத் தருகிறது கோலாலம்பூரில் இயங்கும் வெளிநாடு வாழ் தமிழர்கள் (இந்திய குடியுரிமை) மன்றம்.
 
அதன் நிர்வாகிகளிடம் பேசியபோது, சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதில் உயிரிழந்ததாக குறிப்பிட்டனர்.
 
"அவர்களில் ஆறு பேர் இங்குள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தனர். மற்றொருவர் நல்ல ஊதியத்துடன், தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர். அப்படிப்பட்டவர் எப்படி மலிவு விலை மதுவை தரமானது என்று நம்பி தொடர்ந்து வாங்கினார் என்பது தெரியவில்லை”.
 
"மதுவுடன் மீத்தேன் கலப்பதால்தான் இத்தகைய உயிரிழப்பு ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். தமிழகத் தொழிலாளர்கள் பலரும் விவரம் தெரியாமல் தவறு செய்து பலியாவது வருத்தம் அளிக்கிறது," என்று மன்ற நிர்வாகிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
 
இந்நிலையில் மலிவு விலை மதுவின் தரம், விலை ஆகியவற்றை மலேசிய உணவு தரக் கட்டுப்பாட்டுப் பிரிவுதான் தீர்மானிக்கிறது. அத்துறையின் அதிகாரியைத் தொடர்பு கொண்டபோது போலி மது வகைகள் சந்தைக்குள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், மலிவு விலை மதுவைத் தடை செய்தால் கள்ளச் சாராயம் பெருகும் என்றும் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளையே பெரும்பான்மையை நிரூபிக்கிறார் உத்தவ் தாக்கரே?