Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அயோத்தி கோயில் அடிக்கல் நாட்ட குறிக்கப்பட்டுள்ள நேரம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள்

அயோத்தி கோயில் அடிக்கல் நாட்ட குறிக்கப்பட்டுள்ள நேரம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள்
, திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (15:43 IST)
ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். கோயிலின் அடித்தளத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட ஐந்து செங்கற்களை வெறும் 32 வினாடிகளில் வைக்க வேண்டும்.

இந்தச் சடங்கின் தேதி மற்றும் நேரம் குறித்து நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, இந்த நிகழ்வுக்கான நேரத்தைக் குறித்த, மிகச் சிறந்த ஜோதிட வல்லுநராகக் கருதப்படும் ஆச்சார்யா கணேஸ்வர் ராஜ் ராஜேஸ்வர் சாஸ்திரி திராவிட், காஷியின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பூமி பூஜைச் சடங்கு ரக்ஷபந்தன் நாளில் தொடங்கினாலும், அடிக்கல் நாட்டுவதற்குக் குறிக்கப்பட்டுள்ள முகூர்த்த நேரம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி, அதுவும் மதியம் 12.15.15 முதல் 12.15.47 வரையுள்ள மணித்துளிகளே.

ஆச்சார்யா திராவிட் அடிக்கல் நாட்டுவதற்குக் குறித்த முஹூர்த்த நேரத்தை ஜோதிஷ பீடாதிபதி, மற்றும் துவாரகா ஷாரதா பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி ஆகியோர் எதிர்த்ததால், முஹூர்த்த நேரம் குறித்த சர்ச்சையும் தொடங்கியுள்ளது.

ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர், கோயிலை 'ஒழுங்கான முறையில் எழுப்ப வேண்டும்' என்றும், 'சரியான நேரத்தில் அடிக்கல் நாட்ட வேண்டும்' என்றும் கூறினார்.

சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியின் கூற்றுப்படி, இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரம், நல்ல நேரம் அல்ல. ஆனால் ஆச்சார்யா கணேஷ்வர் ராஜ் ராஜேஸ்வர் சாஸ்திரி திராவிட், முஹூர்த்த நேரம் குறித்துக் கேள்வி எழுப்புபவர்களுக்கு, அது குறித்த விவாதத்துக்கும் சவால் விடுக்கிறார். இருப்பினும், திராவிட்டுடன் விவாதிக்க இதுவரை யாரும் முன்வரவில்லை.

பிபிசியிடம் பேசிய காஷியின் யோகா குரு சக்ரவர்த்தி விஜய் நாவட், "வானியல் அறிஞரான ஆச்சார்ய திராவிட் ஜோதிட கணக்கீடுகளைச் செய்வதில் நாட்டிலேயே பிரபலமானவர். அவரது புகழை அறிந்து தான் ஸ்ரீ ராம் ஜன்மபூமி அறக்கட்டளை, சாதுர்மாஸ காலத்திற்கு முன்பே, பண்டிட் கணேஸ்வர் சாஸ்திரியிடம் கூடிய விரைவில் முகூர்த்தம் குறித்துக் கொடுக்கக் கோரியது.

இருப்பினும், இந்து மத நம்பிக்கையின் படி, சாதுர்மாஸ காலத்தில் (அதாவது விஷ்ணுவின் நான்கு மாத தூக்கம்) எந்த சுப காரியங்களும் செய்ய, தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறும் அவர், இருப்பினும், சிறப்புச் சூழ்நிலைகளில், பரிகாரங்கள் செய்து சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
webdunia

"பண்டிட் கணேஸ்வர் சாஸ்திரி திராவிட், ஜோதிடத்தின் அரிய உயரிய நூல்களான முஹூர்த்த சிந்தாமணி, ஜோதிர்விதாபரண், முஹூர்த்த பாரிஜாத், ராஜ் மார்தாண்ட், பியூஷ்தாரா, ஸ்ரீ கிருஷ்ண யஜுர் வேதம், அமர்கோஷ், ஷப்த கல்பத்ரும கோஷ் போன்ற சாஸ்திர கிரந்தங்களின் ஆதாரத்தில் தான் சிறப்புச் சுழ்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதியைக் குறித்துள்ளார்" என்று நாவட் கூறுகிறார்.

விஷ்வ இந்து பரிஷத்தின் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால், அறிஞர்கள் மற்றும் சாதுக்களின் கூற்றுகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றாலும், குறிக்கப்பட்ட முஹூர்த்த நேரம் சரியானது என்றே தாம் கருதுவதாகக் கூறுகிறார்.

தொலைபேசியில் பிபிசிக்கு அளித்த பேட்டில், "ஸ்ரீ ராமரின் கோயில் கட்டுவதற்கு எந்த முஹூர்த்தமும் தேவையில்லை. இந்துக்களுக்கு மட்டுமல்ல, பாரதம் முழுமைக்கும் அவர் நம்பிக்கை மையமாக இருக்கிறார், அதனால்தான் கோயில் கட்டுமானத்திற்கு அனைத்துப் புனித தலங்களின் மண்ணும் புனித நதிகளின் நீரும் வருவிக்கப்படுகின்றன. தவிர, மூன்று லட்சம் கற்கள் ஏற்கனவே அயோத்தியை வந்தடைந்துள்ளன." என்று அவர் கூறுகிறார்.

அரசியல் கோணம்

இந்தச் சடங்கிற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெறுகின்றன. ஆனால் மத்திய மற்றும் உத்தரபிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்த சடங்கைக் கூட அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்த விரும்புவதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
குறிப்பாக எதிர்வரும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாட்டில் நிலவி வரும் கொரோனா தொற்றுப்பரவல் சூழலில், இது சரியான நேரம் அல்ல என்பது அவர்கள் கருத்து.

"ராமர் கோயில் கட்டுமானத்திற்கு வில் அம்பு கொண்ட ராமரின் உருவத்திற்குப் பதிலாக, ராமர், சீதா, ஹனுமான் உருவங்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், ராமர் கருணையின் உருவம்; அவர் முரட்டுத் தனமானவர் அல்ல", என்று முன்னாள் சட்ட அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான வீரப்ப மொய்லி கூறுகிறார்.
webdunia

மற்றொரு காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், அனைத்து அரசியல் கட்சிகளும் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

இந்தச் சடங்கிற்குக் குறிக்கப்பட்டுள்ள நேரம் குறித்துத்தாம் ஆச்சரியப்படுவதாக ராஷ்டிரிய ஜனதா தளச் செய்தித் தொடர்பாளர் மனோஜ் ஜா பிபிசியிடம் தெரிவித்தார். "ராமர் தசரதருக்கு மட்டும் மகன் அல்ல. அவர் அனைவரின் நம்பிக்கை, எனவே அவரது கோவிலை எப்போது வேண்டுமானாலும் கட்டலாம். உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எப்போது வேண்டுமானாலும் கட்டலாம். அதை அவசரமாகச் செய்ய வேண்டிய தேவையில்லை." என்கிறார் அவர்.

பாரதிய ஜனதாவும் பிரதமரும் ஒரு முன்மாதிரியாகத் திகழவேண்டிய பொறுப்புள்ளது என்று ஜா கூறுகிறார். மேலும் அவர், "தொற்றுநோய் பரவி, சுகாதாரச் சேவைகள் பல மாநிலங்களில் முற்றிலுமாகச் சரிந்துவிட்டன. பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கே இடம் இல்லாதபோது. சமூக இடைவெளி தேவைப்படும்போது, பிரதமர் நரேந்திர மோடி சரியான முடிவை எடுத்திருக்க வேண்டும்."

இது குறித்து ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் மாநில இணைத் தலைவரான அலோக் குமார் பிபிசியிடம் பேசுகையில், "கோயில் நிர்மாணிப்பதை எந்தவொரு பிரதான அரசியல் கட்சியும் எதிர்க்கவில்லை" என்று கூறினார். காங்கிரஸ் கட்சியையும் சேர்த்தே குறிப்பிட்ட அவர், "ஆரம்பத்தில் சரத் பவார் சில அறிக்கைகளை வெளியிட்டார், ஆனால் பின்னர் அவர் தவறாகபுரிந்து கொண்டதாகத் தெளிவுபடுத்தினார்.

அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைப்பதைப் பொருத்தவரை, சமூக இடைவெளியைப் பின்பற்ற, சடங்கில் 150 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அலோக் குமார் கூறுகிறார். இல்லையெனில் லட்சக் கணக்கான மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டிருப்பார்கள் என்று அவர் கூறினார். ஸ்ரீ ராமரின் அடையாளம் அம்பு வில் என்றும் எனவே இந்தப் படம் அழைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

முக்கியப் பிரச்சனைகளுடன் தொடர்புடைய கேள்விகள்

இவை ஒரு புறமிருக்க, ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை நீக்கி, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்நிலையில், கஷ்மீரில் இதனால் ஏற்பட்ட சாதக பாதகங்கள் குறித்த சர்ச்சைகளின் குரல் வளையை நெறிக்கவே ராமர் கோயில் கட்டுமானம் பெரும் கொண்டாட்டமாக ஆக்கப்படுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.

கொரோனா காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவுகள் குறித்த விவாதங்களும் சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கப்படும் விதமாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது, தொலைக்காட்சியில் ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவின் நேரடி ஒளிபரப்பு ஊடகங்களின் நிகழ்ச்சி நிரலை அமைக்கும்.
webdunia

இந்த நேரத்தில் அல்லது இந்த நிகழ்வு குறித்து எந்தவொரு எதிர்க்கட்சியும் ஒரு அறிக்கையை வெளியிட முடியாது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர், ஏனெனில் அது அந்தக் கட்சிகளுக்கு அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும், எனவே பெரிய தலைவர்கள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

லக்னோவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் வீரேந்திரநாத் பட், "சுதந்திரம் பெற்றதிலிருந்து, அரசியல் கட்சிகள் இத்தகைய அரசியலைச் செய்துள்ளன, இதனால் சமூகம் சீர்கெட்டுள்ளது, மக்கள் தங்களுக்குள் கருத்தியல் அல்லது மத மற்றும் சாதி அடிப்படையில் பிளவுபட்டுள்ளனர். மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியும் பிராந்தியக் கட்சிகளும் கூட இதைப் பயன்படுத்திக் கொண்டன" என்று கூறுகிறார்.

அவர் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடது சாரிக் கட்சிகளைக் குறிப்பிட்டு, "சிறுபான்மையினரிடையே பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தை உருவாக்குவதன் மூலம், தலைவர்கள் அரசியல் பலன்களை அடைந்துள்ளனர். ஆனால் இதனால், அதிக நஷ்டமடைந்த கட்சி காங்கிரஸ் தான்" என்று கூறுகிறார்.

கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், அரசாங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ளது போல இந்தியாவில் ஒரு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்றும். அது, மதங்களையும் சாதிகளையும் கடந்து, வேறுபாடுகளை மறந்து மக்களனைவரும் ஒன்றிணைந்து சமூகத்தில் நிலவும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று பட் நம்புகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எகிப்த் பிரமிடுகளை கட்டியது ஏலியன்கள்: எலான் மஸ்க் சர்ச்சை ட்விட்!