Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ்: சீனாவில் உணவின்றி செத்து மடியும் செல்லப்பிராணிகள்

கொரோனா வைரஸ்: சீனாவில் உணவின்றி செத்து மடியும் செல்லப்பிராணிகள்
, திங்கள், 2 மார்ச் 2020 (14:00 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்து காணப்படும் சீனாவில் கைவிடப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸின் பாதிப்பின் மையமாக திகழும் சீனாவில் இதுவரை இந்த நோய்த்தொற்றால் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்; 78,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோ அல்லது நோய்த்தொற்று அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டோ உள்ளவர்களால் தங்களது செல்லப்பிராணிகளை பராமரிக்க முடியாத சூழ்நிலை சீனாவில் நிலவுகிறது. இது ஒருபுறமிருக்க, விலங்குகள் கொரோனா வைரஸை பரப்புவதில்லை என்று உலக சுகாதார நிறுவனம்  தெளிவுபடுத்திய பிறகும் கூட, பலர் தாங்கள் வளர்த்து வரும் விலங்குகளை கைவிடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
 
"நான் இந்த மாதம் மீட்டுள்ள பெரும்பாலான விலங்குகள் அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்டவையாக இருக்கின்றன" என்று பிபிசி கூறுகிறார் சீனாவில்  முதல் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட வுஹானில் செயல்படும் பர்ரி ஏன்ஜல்ஸ் ஹெவன் அமைப்பை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர்.
 
"கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நல்ல வேளையாக அவர் வளர்த்து வந்த நாயை  காவல்துறையினர் மீட்டு என்னிடம் சேர்த்துவிட்டனர்."
 
அலுவலக கட்டுப்பாடுகள் குறித்த அச்சத்தால் தனது பெயரை வெளியிட விரும்பாத இந்த தன்னார்வலர், தான் பணிபுரியும் காப்பகத்தில் இருக்கும் விலங்குகளை  தவிர்த்து, தனது சொந்த வீட்டில் 35 நாய்கள் மற்றும் 28 பூனைகளை பராமரித்து வருவதாக கூறுகிறார்.
 
"இங்கு மோசமான சூழ்நிலை நிலவுகிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படாததால் எனது நாய்கள் மற்றும் பூனைகளுக்கான உணவு  விரைவில் தீர்ந்து போகும் என்று நான் அஞ்சுகிறேன். எனக்கோ அல்லது எனது குடும்பத்தினருக்கோ கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், காவல்துறையினர்  எங்களிடம் உள்ள அனைத்து நாய்கள் மற்றும் பூனைகளை கொன்றுவிடுவார்கள் என்று நான் பெரிதும் வருந்துகிறேன்."
 
வழக்கமாக இந்த காப்பகத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டண சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், வருமானம் ஏதுமில்லை என்றும், இதன் காரணமாக  ஏற்கனவே உள்ள சேமிப்புகள் விரைவில் தீர்ந்துவிடும் சூழ்நிலை நிலவுவதாகவும் அவர் கூறுகிறார்.
 
"விலங்குகளை மீட்டு, பராமரிப்பது என்பது மிகவும் செலவு பிடிக்கும் விடயம்." கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அமலில் உள்ள கட்டுப்பாடுகள்  தளர்த்தப்பட்டவுடன் இந்த விலங்குகளை தத்தெடுப்பதற்கு அனுமதி அளிக்கப்படும்.
 
கடந்த டிசம்பர் மாதம் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கமானது, சீன புத்தாண்டையொட்டி பொது மக்களின் நடமாட்டம்  அதிகரித்தபோது உச்சத்தை தொட ஆரம்பித்தது. புத்தாண்டு விடுமுறைக்காக மற்ற நகரங்களுக்கு சென்ற மக்கள், சில தினங்களில் வீடு திரும்பிவிட போகிறோம்  என்ற எண்ணத்தில் தங்களது செல்லப்பிராணிகளுக்கு தேவையான உணவுப்பொருட்களை வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தனர்.
 
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சீனாவின் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, ஹூபேய் மாகாணத்தை சேர்ந்த 60 மில்லியன் மக்கள்  பயண தடையால் பாதிக்கப்பட்டனர். தங்களது செல்லப்பிராணிகளுக்காக வீட்டில் வைத்துவிட்டு வந்த உணவுகள் தீர்ந்துவிடும் சூழ்நிலை இருந்தபோதும், வீட்டிற்கு  திரும்ப முடியாமல் மக்கள் தவித்தனர்.
 
இதனால் கலக்கமடைந்த சில உரிமையாளர்கள், சீன சமூக ஊடகமான வைபோவில் உதவிகோரினர். "உதவி! நான் எழோ நகரத்தில் வசிக்கிறேன். எனது பூனை  வீட்டில் சிக்குண்டுள்ளது" என்று வுஹானுக்கு அருகிலுள்ள ஊரிலிருந்து பெண்ணொருவர் பதிவிட்டிருந்தார். "எனது பூனைக்கு உணவளிக்க உதவி செய்யும் ஒருவரை  நான் தேடுகிறேன். இந்த சேவைக்கு நான் பணமளிக்க தயாராக இருக்கிறேன். தயவுசெய்து இந்த தகவலை பகிருங்கள்."
 
லாவோ மாவோ என்பவர் மேற்கண்ட சூழ்நிலைகளினால் தவிப்பவர்களின் செல்லப்பிராணிகளை பராமரிக்கும் குழுவை சேர்ந்தவர். இந்த குழு இதுவரை  ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகளை மீட்டுள்ளது.
webdunia
"சமீப காலமாக உதவி தேவைப்படும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்று அவர் பிபிசியிடம் கூறினார். "விலங்குகளின் சூழ்நிலை மிகவும்  மோசமாக உள்ளது. உதவிகோரியவர்கள் கூறிய ஏராளமான இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தபோது விலங்குகள் உணவின்றி பசியில் செத்து மடிந்திருந்தன.  மரணத்தின் பிடியில் இருந்த சில விலங்குகளை மட்டுமே எங்களால் காப்பாற்ற முடிந்தது."
 
இதுபோன்ற சூழ்நிலை ஹூபேய் மாகாணத்தில் மட்டுமின்றி சீனா முழுவதும் காணப்படுவதாக விலங்கு நல அமைப்புகள் பிபிசியிடம் தெரிவித்தன.
 
முன்னெப்போதுமில்லாத வகையில் செல்லப்பிராணிகளை காப்பாற்ற கோரியும், மீட்க கோரியும் எண்ணற்ற கோரிக்கைகள் வருவதாக கூறுகிறார் பெயர் வெளியிட  விரும்பாத தன்னார்வலர் ஒருவர். உணவளிக்க யாரும் இல்லாததால் விலங்குகளுக்குள் சண்டை ஏற்பட்டு, அவை ஒன்றையொன்று கொன்று சாப்பிடும் சம்பவங்கள்  அதிகரித்துள்ளதாக அவர் கூறுகிறார்.
 
"பல்வேறு சூழ்நிலைகளில், பொது மக்கள் அளிக்கும் ஆதரவு மெய்சிலிர்க்க வைக்கிறது. பலர் உதவி செய்வதன் மூலமாகவோ, விலங்குகளை தத்தெடுப்பதன்  மூலமாகவோ தங்களால் இயன்றதை செய்கிறார்கள். விலங்குகளை பாதுகாப்பதற்காக சீன மக்களுடன் வெளிநாட்டினரும் இணைந்து செயல்படுகிறார்கள்."

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புழல் சிறையில் பிளஸ் 2 தேர்வு எழுதும் கைதிகள்..