Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ்: ஊரடங்கு நிலைக்கு பிந்தைய மனக்கலக்கத்தை எதிர்கொள்வது எப்படி?

Webdunia
சனி, 2 மே 2020 (15:30 IST)
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட முடக்க நிலையை சில நாடுகள் தளர்த்த தொடங்கி உள்ள சூழ்நிலையில், இதன் பிறகு வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற கவலை மக்களிடையே பெருமளவில் எழத் தொடங்கியுள்ளதாக உளவியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அதே சமயத்தில், தொடர்ந்து கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வரும் பகுதிகளில் வாழும் மக்களும் முடக்க நிலைக்கு பிறகான தங்களது வாழ்க்கை குறித்து அச்சம் தெரிவிக்கின்றனர்.

கோவிட்-19 நோய்த்தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட சீன நகரமான வுஹானில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் முடக்க நிலை திரும்ப பெறப்பட்டது.

அப்போது, அந்த நகரத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள், பல வாரங்களுக்கு பிறகு வீடுகளை விட்டு வெளியே செல்வதை மிகவும் அசௌகரியமாக உணர்ந்தனர்.

மற்றொரு புறம், நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்படுவதற்கு முன்பே தமது நாட்டில் முடக்க நிலையை முடிவுக்கு கொண்டுவந்தால், நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து விடுமோ என்றும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

முடக்க நிலையில் வாழ்க்கை

முடக்க நிலை முடிவுக்கு வந்த பிறகு, “நம்மில் பலர் மிகவும் அசௌகரியமாக உணருவோம்” என்று கூறுகிறார் 25 வயதான எழுத்தாளரும், பெண்ணுரிமை ஆர்வலருமான அகன்ஷா பாட்டியா.

பெரும்பாலான மக்களை போன்றே முடக்க நிலையின் காரணமாக தானும் பல போராட்டங்களை எதிர்கொண்டதாகவும், ஆனால் தற்போது முடக்க நிலைக்கு பிறகு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப செல்ல முடியுமா என்ற கவலை மேலோங்கி உள்ளதாகவும் அகன்ஷா கூறுகிறார்.

“முடக்க நிலைக்கு முன்பே மனக்கலக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தற்போது இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்த பிறகு மீண்டும் வெளியே செல்ல வேண்டுமென்றால் அது எப்படி இருக்கும் என்று நீங்களே நினைத்து பாருங்கள்.”

கோவிட்-19 போன்ற பெருந்தொற்று பரவலின்போது, உங்கள் மன நலத்தை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த செய்திகளுடன் கூடிய விளக்கப்படங்களை தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் பிரேசிலிய கலைஞர் மார்செலா சபியா பகிர்ந்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு தனது மனக்கலக்கம் அதிகரித்துள்ளதாக அவர் கூறுகிறார்.

“பாதுகாப்பற்ற, இயல்புக்கு மாறான நிலையை நீண்ட காலத்திற்கு எதிர்கொள்வது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் கூறுகிறார்.

முடக்க நிலை ஏற்படுத்தும் தாக்கங்கள்

ஏற்கனவே மனநலம் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் மட்டுந்தான் தற்போது கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்ல முடியாது.

“நீண்டகாலத்திற்கு நான்கு சுவர்களுக்குள்ளேயே இருந்துவிட்டு, வெளியே செல்வது என்பது அந்நியமாக இருக்கும்” என்று கூறுகிறார் பிரிட்டனை சேர்ந்த அரசுசாரா அமைப்பொன்றின் தலைமை செயலதிகாரியான நிக்கி லெட்பெட்டர்.

“கடந்த சில காலமாக நீங்கள் செய்யாத விடயங்களை மீண்டும் செய்ய முற்படும்போது அதில் நம்பிக்கையற்ற மனநிலையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம்.”

கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே மன அழுத்தத்தையும் அச்சத்தையும் விளைவித்த விடயங்கள், உதாரணமாக அலுவலக கூட்டங்கள் அல்லது நெரிசல் மிக்க பொதுப்போக்குவரத்தில் பயணிப்பது உள்ளிட்டவை மென்மேலும் அசௌகரியத்தை அளிக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் முன்களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் தங்களது தொழில் வீழ்ச்சியடையாமல் இருக்க போராடி வருவோர் வரை பலருக்கும் கடந்த சில வாரங்கள் மிகவும் அழுத்தம் தரும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.

மிகவும் குறைந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட பெரும் மாற்றத்தை சந்தித்தது “மக்களுக்கு மிகவும் அழுத்தத்தை அளித்துள்ளது” என்று கூறுகிறார் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியரான ஸ்டீவன் டெய்லர்.

“தங்களது பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒன்றாக முடக்க நிலையை கருத்துவதன் மூலம் அதனால் ஏற்படும் மனக்கலக்கத்தை மக்கள் எதிர்கொள்ள முயற்சிக்கிறார்கள்.”

“ஒரு பெருந்தொற்று பரவல் மற்றும் கட்டுப்படுத்துதலை எதிர்கொள்வது என்பது ஒரு சிக்கலான உளவியல் சார்ந்த பிரச்சனை.”

விரைந்து முடித்தல்

முடக்க நிலை கட்டுப்பாடுகளை தளர்த்தும்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே பாதுகாப்பான உணர்வையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துவதில் ஒவ்வொரு நாட்டின் தலைவரின் பங்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று டெய்லர் கூறுகிறார்.

“முடக்க நிலைக்கு பிறகான இயல்பு வாழ்க்கைக்கு செல்வது குறித்து தலைவர்கள் தெளிவான தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதற்காக தலைவர்கள் மக்களுடன் இயல்பாக பழகலாம், உணவகங்களுக்கு செல்லலாம்” என்று அவர் கூறுகிறார்.
"வழிகாட்டுதல்கள் மக்களின் மனதில் தெளிவாக இருக்க வேண்டும். அது நிச்சயமற்ற தன்மையையும், பதட்டத்தையும் குறைக்க உதவும்.”

கொரோனா வைரஸுக்கு பிறகான கலக்கத்தை எதிர்கொள்வது எப்படி?

நீங்கள் கோவிட்-19 நோய்த்தொற்று பரவலுக்கு முன்போ அல்லது பின்போ என எப்போது மனக்கலக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதை எதிர்கொள்வதற்கும், முடக்க நிலைக்கு பிறகான வாழ்க்கைப்போக்கு குறித்த அச்சத்திலிருந்து விடுபடுபவதற்கும் சில வழிமுறைகள் உள்ளன.

“மாற்றத்தை ஏற்றுக்கொள்வது மக்களுக்கு சற்றே கடினமாக உள்ளது” என்று நிக்கி லெட்பெட்டர் கூறுகிறார். “நீங்கள் ஒரே நாளில் இலக்கை அடைய வேண்டியதில்லை. புதிய இயல்புக்கு ஏற்றவாறு தகவமைத்து கொள்வதை கடினமாக உணர்ந்தால், முழு நம்பிக்கையும் இழந்துவிடாதீர்கள்.”

“முதலில் முடக்க நிலையை ஏற்றுக்கொள்வதற்கு சிரமப்பட்ட நாம், பிறகு அதற்கான வழியை கண்டறிந்தது போல, முடக்க நிலை தளர்வுக்கு பிந்தைய சூழ்நிலைக்கு ஏற்றவாறும் நம்மால் பழக்கிக்கொள்ள முடியும்.”

நாம் வெளியே அதிகம் செல்ல தொடங்கியவுடன், ‘உடலியல் மற்றும் மனநிலை’ சார்ந்த மாற்றங்கள் ஏற்பட துவங்கும்.

“தங்களது கவலைகள் குறித்து நம்பகமான குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரிடம் பேசினால், அது மன இறுக்கத்தை குறைக்கக் கூடும். ஒருவேளை இந்த செயல்முறை பலனளிக்காததை போன்று உணருவதோடு மேலதிக அழுத்தத்தை எதிர்கொள்பவர்கள், காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்” டெய்லர் கூறுகிறார்.

“தற்போது மனக்கலக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பலரும் அதிலிருந்து அடுத்த சில வாரங்களிலோ அல்லது மாதங்களிலோ வெளிவர முடியும். அதற்கான மனபலம் மக்களிடம் இருக்கிறது.”

இந்தியாவில் எப்போது முடக்க நிலை முடிவுக்கு வரும் என்று ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் அகன்ஷா, மனநல மருத்துவர்கள் கூறுவதை போன்று தான் நல்ல உணவுகளை உண்பதிலும், உடற்பயிற்சிகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தி வருவதாக கூறுகிறார்.

“புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வது நல்லதுதான். ஆனால், அதை உங்களுக்கு நீங்களே திணித்து கொள்ளாமல், படிப்படியாக முயற்சி செய்யுங்கள்.”

“எனக்கு கொரிய நாடகங்கள் மிகவும் பிடிக்கும். எனவே, மொழிப்பெயர்ப்பு தேவையே இல்லாமல் நாடகங்களை பார்ப்பதற்காக அந்த மொழியையே கற்றுக்கொள்ள துவங்கியுள்ளேன்.”

“நான் தற்போது யோகாவில் கவனத்தை செலுத்தி வருகிறேன். மேலும், இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலையை தனியே எதிர்கொள்வதன் மூலம், எனது மனநலத்தை மேம்படுத்துவதற்கு இன்னும் எவ்வளவு நேரத்தை செலவிட வேண்டியுள்ளது என்பதை அறிந்து கொள்கிறேன்” என்று மார்செலா கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments