Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ்: மலேசியாவில் இந்தியர் பலியா?

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (13:30 IST)
மலேசியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை எட்டு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மலேசியாவில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையல்ல என்று அந்நாட்டு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் மலேசியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படுவதை யாரும் நம்பத் தேவையில்லை என மலேசிய சுகாதார அமைச்சு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

மலேசியாவி கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று சுகாதார அமைச்சின் பொதுச்செயலர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவும் செய்தியாளர்களிடம் உறுதி செய்தார்.

முன்னதாக இந்திய செய்தி முகமை ஒன்று இந்திய ஆடவர் மலேசியாவில் பலியானதாக செய்தி வெளியிட்டிருந்தது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அந்த நபர் மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும், அவர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அந்தச் செய்தி முகமை வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

மலேசிய அதிகாரிகள் கடந்த புதன்கிழமை தம்மை தொடர்பு கொண்டு தனது பேரன் மலேசியாவில் உயிரிழந்த தகவலை தெரிவித்தனர் என்று அந்த இளைஞரின் தாத்தாவான அப்துல் ரஹீம் குறிப்பிட்டதாகவும் அந்தச் செய்தி முகமை மேலும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இத்தகவலை மலேசிய சுகாதார அமைச்சு அறவே மறுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா கிருமித் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சு, இந்தியர்கள் யாரும் கண்காகணிப்பு வளையத்தில் இல்லை எனத் தெளிவுபடுத்தி உள்ளது.

ஜனவரி 30ஆம் தேதி மாலை வரை இதுதான் உண்மை நிலை என்றும் மலேசிய சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

விமானங்களை தடை செய்ய வேண்டிய அவசியமில்லை

இதற்கிடையே சீனாவில் இருந்து மலேசியா வரும் அனைத்து விமானங்களையும் தடுக்கத் தேவையில்லை என பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவசரமாக முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், இது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மகாதீர், "அனைத்து விமானங்களையும் தடுக்க வேண்டுமா? அல்லது வைரஸ் தொற்று பாதிப்புள்ள வுஹான், ஹுபே மாகாணத்தில் இருந்து வரக்கூடிய விமானங்களுக்கு மட்டும் தடை விதித்தால் போதுமா? என்பது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்," என்றார்.

இதற்கிடையே மலேசியாவின் சரவாக் மாநில அரசாங்கம், அங்குள்ள கல்வி மையங்களில் படிக்கும் சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் மலேசியா திரும்ப அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.

அங்கு படித்து வரும் மாணவர்கள் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக தாய்நாடு சென்றுள்ளனர். இந்நிலையில் விடுமுறைக்குப் பிறகு கல்வி மையங்கள் திறக்கப்படும் போது சீன மாணவர்களுக்கு அனுமதி இல்லை என்று சரவாக் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சபா மாநிலத்தில் இருந்து சீனாவுக்கான அனைத்து விமானச் சேவைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இரு மாநில அரசுகளும் தெரிவித்துள்ளன.

மலேசியர்களை அழைத்து வர சிறப்புப் பணிக்குழு அமைப்பு

இதற்கிடையே வுஹான், ஹுபே பகுதிகளில் தங்கியுள்ள மலேசியர்களை மீண்டும் மலேசியா அழைத்து வருவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், சீனத்தரப்பில் இருந்து இன்னும் பதில் வரவில்லை என்றும் பிரதமர் மகாதீர் கூறினார்.

ஹுபே பகுதியில் உள்ள மலேசியர்கள் எங்கு உள்ளனர் என்பதைக் கண்டறிந்து, பத்திரமாக மலேசியா அழைத்து வரும் பணியை செய்து முடிக்க சிறப்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் சுல்கிஃப்ளி அகமத் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவானது வெளியுறவு அமைச்சு, தேசிய பேரிடர் மேலாண்மை முகமை, தேசிய பாதுகாப்பு கவுன்சில், மலேசிய ஏர்லைன்ஸ், ஏர் ஆசியா ஆகிய தரப்புகளுடன் இணைந்து செயல்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தைப்பூசம் திட்டமிட்டபடி நடைபெறும்

பினாங்கு மாநிலத்தில் தைப்பூச விழா திட்டமிட்டபடி நடைபெறும் என அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி தெரிவித்துள்ளார்.

தைப்பூச விழா ரத்தானதாக வெளியான தகவல் பொய்யானது எனவும் அம்மாநில இந்து அறவாரிய ஆணையரான அவர் குறிப்பிட்டார்.

"கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தைப்பூச விழா ரத்து செய்யப்படவில்லை. பிப்ரவரி 8ஆம் தேதி அது திட்டமிட்டபடி நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன," என்று சதீஷ் முனியாண்டி தெரிவித்துள்ளார்.

மலேசிய தகவல் துறை மற்றும் பல்லூடகத் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும் திட்டமிட்டபடி தைப்பூசம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மலேசிய துணைப் பிரதமர் தெரிவித்த கருத்தைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, "துணைப் பிரதமர் சரியான தகவலைத்தான் கூறியுள்ளார். லட்சக்கணக்கானோர் கூடும் நிகழ்வு என்பதால் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்களை ஏற்று மலேசிய அரசு அறிவிப்பு வெளியிடும் என்றுதான் துணைப் பிரதமர் தெரிவித்தாரே தவிர, தைப்பூசம் நடைபெறாது என்று கூறவில்லை," என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

சீனர்களை திருப்பி அனுப்பிய மலேசியா

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அங்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வுஹான் பகுதியில் இருந்து கேலாலம்பூர் வந்து சேர்ந்த 14 சீனக் குடிமக்கள் நாட்டுக்குள் நுழைய மலேசிய அரசு அனுமதி மறுத்தது.

இதையடுத்து கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து அந்தப் 14 பயணிகளும் சீனாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மலேசிய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இது கருதப்படுகிறது.

"குடியேற்ற அதிகாரிகள் அந்தப் பயணிகள் வுஹான் பகுதியில் இருந்து வந்திருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்தே அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அனைத்து குடியேற்ற மையங்களிலும் பணியில் உள்ள அதிகாரிகள் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்," என மலேசிய உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொய்யான தகவல்கள் பரப்புவதை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இத்தகைய தகவல்களால் பொதுமக்கள் மத்தியில் வீண் அச்சமும் கவலையும் ஏற்படுகிறது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments