இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1965ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 151 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கடந்த 12 மணிநேரத்தில் மட்டும் 131 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
“டெல்லியில் நடந்த மத நிகழ்வில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களது மதத்தை குறிவைத்து சமூக ஊடகங்களில்
பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருந்தொற்றை எதிர்த்து போராடி கொண்டிருக்கும் வேளையில், மதரீதியான பிளவுகளை ஏற்படுத்த முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் நடந்த மத நிகழ்வில் கலந்து கொண்ட 275 வெளிநாட்டினர் (இந்தோனீஷியாவைச் சேர்ந்த 172, கிர்கிஸ்தானைச் சேர்ந்த 36 பேர் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த 21 பேர் உட்பட) அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.
மும்பையிலுள்ள கடற்படை தளத்திற்கு வரும் வீரர்களின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு தேவையான கருவியை தாங்களே உருவாக்கியுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது. கடற்படைக்கு சொந்தமான உதிரி பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி ஒன்றின் விலை ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவே இருக்கும் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் மும்பையிலுள்ள தாராவி குடிசைப்பகுதியில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 56 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட முடக்க நிலை நடவடிக்கைகள் சரிவர செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களை மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கேட்டுக்கொண்டுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
"முடக்க நிலை நடவடிக்கைகளின் கீழ் உள்துறை அமைச்சகம் அளித்த வழிகாட்டுதல்களை தாண்டி சில மாநில அரசாங்கங்கள் / யூனியன் பிரதேச நிர்வாகங்கள் விதிவிலக்குகளை அனுமதிக்கின்றன. இது பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 இன் கீழ் உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட முடக்க நிலை உத்தரவை மீறுவதாகும்" என்று அஜய் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையும் சேர்த்து இதுவரை 234 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 190 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோன்று புதுச்சேரியில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக விளங்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முடக்க நிலை சரிவர பின்பற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி சந்தையில் சமூக விலக்கம் சரிவர கடைபிடிக்கப்படவில்லை என்று புகைப்படங்களுடன் ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
“டெல்லியில் நடந்த மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 17 பேர் ராமேஸ்வரத்திற்கு திரும்பியுள்ளனர். அவர்களில் கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள இருவர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்” என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கூறியுள்ளார்.