Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் 'சிங்க ராஜாவாக' மிரட்டிய தோனி - இறுதிப் போட்டியில் சென்னை

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (09:23 IST)
"ஆட்டத்தை முடித்து வைக்கும் சிங்கம் மீண்டும் வந்துவிட்டது. இருக்கையில் இருந்து குதித்து எழுந்தேன்". இப்படிப் பதிவிட்டிருந்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. பின்னர் அதை அழித்துவிட்டு "என்றென்றும்" என்ற சொல்லைச் சேர்த்தார்.
 
கோலி மாத்திரமல்ல டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் பிளே ஆப் முதல் போட்டியில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆட்டத்தைப் பார்த்த அவரது ரசிகர்களுக்கும், ஏன் வெறுப்போருக்கும் கூட இந்த மனநிலைதான்.
 
இந்தப் போட்டியில் அவர் 15 நிமிடங்கள்கூட களத்தில் இருக்கவில்லை. சந்தித்தது வெறும் 6 பந்துகள்தான். ஆனால் அந்த இருப்பே சென்னை அணியின் வெற்றிக்குப் போதுமானதாக இருந்தது.
 
இந்தியாவில் பலருக்கு உற்சாகத்திலும், பலருக்கு வெறுப்பிலும் தூக்கம் வரவிடாமல் செய்துவிட்டார் தோனி என்று பதிவிட்டிருக்கிறார் ரசிகர் ஒருவர். கிரிக்கெட் ரசிகர்கள், நட்சத்திரங்கள் மட்டுமின்றி, சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் தோனியை வியந்து பாராட்டியிருக்கிறார்கள். மீம்களும் சமூக வலைத்தளங்களில் நிறைந்திருக்கின்றன.
 
தோனி செய்தது என்ன?
 
சென்னை அணி வெற்றிபெற, 11 பந்துகளில் 24 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் தோனி களமிறங்கினார். உண்மையில் அந்த நேரத்தில் அவரது வருகையை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த இடத்தில் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா களமிறங்குவதுதான் வழக்கம். சமீபத்திய போட்டிகளில் ரன் குவிக்கத் தடுமாறிவந்த தோனி திடீரெனக் களமிறங்கியது பலருக்கும் வியப்பாகவே இருந்திருக்கும்.
19-ஆவது ஓவரின் தொடக்கத்தில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ருது கெய்க்வாட் ஆட்டமிழந்தார். அந்த நேரத்தில் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு 27 சதவிகிதமாகக் குறைந்து நெருக்கடி ஏற்பட்டிருந்தது. ஆனால் வந்து தான் சந்தித்த சில பந்துகளிலேயே சென்னை அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார் தோனி.
 
ஆவேஷ் கான் வீசி, தோனி சந்தித்த முதல் பந்து மட்டையிலேயே படவில்லை. ஆனால் அடுத்த பந்திலேயே பந்து சிக்சருக்குப் பறந்தது. அது சென்னை அணிக்கு நம்பிக்கையாக மாறியது. எனினும் டெல்லி அணியின் டாம் கர்ரன் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் மொயின் அலி ஆட்டமிழந்துவிட மீண்டும் சென்னை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
 
ஆனால் தோனியின் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை அடித்தார். அதுவரை டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சாளராக இருந்த டாம் கர்ரன் பதற்றமானதைப் பார்க்க முடிந்தது. அடுத்த ஆப் சைடுக்கு வெளியே வைடாக வீசும் அளவுக்கு அவர் பதற்றமாகியிருந்தார். மூன்று பந்துகளில் நான்கு ரன்கள் தேவை என்றிருந்தபோது, தனது பாணியில் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் தோனி.
 
ஆறே பந்துகளில் 18 ரன்களைக் குவித்து அணியை வெற்றி பெறவைத்தார். இந்தப் சீசனில் முந்தைய போட்டிகளில் அவர்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் தனது மட்டையின் மூலம் பதில் கூறிவிட்டார்.
 
"இந்த சீசனில் இதுவரை நான் எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்தப் போட்டியில் எனது ஆட்டம் முக்கியமானதாக இருந்தது" என்று போட்டியின் முடிவில் பேசியபோது தோனி குறிப்பிட்டார்.
 
அடித்தளம் அமைத்துக் கொடுத்த கெய்க்வாட்
டாஸ் வென்ற தோனி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 20 ஓவர்களில் டெல்லி அணி 172 ரன்களை எடுத்தது. அந்த அணியின் பிரித்வி ஷா 60 ரன்களையும் ரிஷப் பந்த் 51 ரன்களையும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய ஹெட்மேயர் 24 பந்துகளில் 37 ரன்களைக் குவித்தார்.
 
சென்னையின் பிராவோ, ஷ்ரத்துல் தாக்குர் ஆகியோரின் பந்துகளில் டெல்லி வீரர்கள் அதிக ரன்களைக் குவித்தனர். எனினும் கடைசி ஓவரில் மூன்று பந்துகளில் ரன் எதுவும் எடுக்கவிடாமல் கட்டுப்படுத்தினார் தாக்குர்.
 
தோனியின் புதிய முயற்சிகள்
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணிக்கு தொடக்க ஓவரிலேயே அதிர்ச்சி இருந்தது. நோர்கியோவின் பந்தில் டூ பிளெஸ்ஸி ஆட்டமிழந்தார். புதிய முயற்சியாக மூன்றாவது வீரராக உத்தப்பா களமிறக்கப்பட்டார். அந்த முடிவுக்கு சிறப்பான பலன் இருந்தது.
 
14-ஆவது ஓவர் வரை கெய்க்வாட் - உத்தப்பா இணை சென்னை அணியை வெற்றியோ நோக்கி பதற்றமே இல்லாமல் அழைத்துச் சென்றது. 44 பந்துகளில் உத்தப்பா ஆட்டமிழந்தபோதும் புதிய முயற்சி ஒன்றைச் செய்தார் தோனி. ஷ்ரத்துல் தாக்குரை அந்த இடத்தில் களமிறக்கினார். ஆனால் அது சிறப்பாக அமையவில்லை. ரன் ஏதும் எடுக்காமல் அவர் வெளியேறினார்.
 
அதன் பிறகு வந்த ராயுடு ரன் அவுட் ஆனபோது, சென்னையின் வெற்றி கேள்விக்குறியானது. 15-ஆவது ஓவர் முடியும்போது 30 பந்துகளில் 52 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலை. ஆனால் பந்துவீச்சு இறுக்கமாக இருந்தது. 19-ஆவது ஓவரில் கெய்க்வாட் ஆட்டமிழக்கும்போது போட்டி முழுவதும் டெல்லி அணியின் கைக்குச் சென்றுவிட்டது.
 
அதன் பிறகுதான் தோனி களமிறங்கி மாயாஜாலத்தை நிகழ்த்தினார். டெல்லி அணியின் கையில் இருந்த வெற்றியைக் வசமாக்கினார்.
 
கடைசி ஓவரில் டாம் கர்ரனை பந்துவீசத் தேர்வு செய்தது குறித்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், சற்று கவலையான தொனியில் போட்டியின் முடிவில் பேசினார். ஆனால் தோனி அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து வெறிறியைத் தட்டிப் பறிப்பார் என்று ரிஷப் பந்தோ, டாம் கர்ரனோ, ஏன் அரங்கத்திலும் உலகின் பிற இடங்களிலும் இருந்தவர்களும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments