Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அமேசான் ஓட்டுநர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறு நீர் கழித்தார்களா? மன்னிப்பு கேட்டது யாரிடம்?

அமேசான் ஓட்டுநர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறு நீர் கழித்தார்களா? மன்னிப்பு கேட்டது யாரிடம்?
, ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (12:20 IST)
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர் மார்க் போகன் "அமேசான் நிறுவனத்தின் ஓட்டுநர்கள், பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறுநீர் கழிக்கிறார்கள்" என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த அமேசான், அதன் பின் ஆமோதித்து அவரிடம் மன்னிப்பு கோரி இருக்கிறது.

"உங்கள் ஊழியர்களை ஒன்று சேரவிடாமல் தடுப்பது மற்றும் ஊழியர்களை பிளாஸ்டிக் பாட்டிலில் சிறுநீர் கழிக்க வைக்கும் நிலையில், ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 15 டாலர் கூலி கொடுப்பதன் மூலம் மட்டும் அமேசான் ஒரு நல்ல பணிச்சூழல் நிலவும் இடமாக மாறிவிடாது" என கடந்த மார்ச் 25-ம் தேதி தன் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் போகன்.

"ஊழியர்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் சிறுநீர் கழிக்கிறார்கள் என்பதை நீங்கள் நம்பவில்லை தானே? அது உண்மையானால், யாரும் எங்களுக்காக வேலை பார்க்கமாட்டார்கள். உலகம் முழுக்க லட்சக் கணக்கான அமேசான் ஊழியர்கள் தாங்கள் செய்வதைக் குறித்து பெருமிதப்படுகிறார்கள். அவர்களுக்கு நல்ல ஊதியமும், நல்ல மருத்துவ வசதிகளும் முதல் நாளிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது" என அதற்கு அமேசான் நிறுவனம் பதிலளித்தது.

மேலும் "நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு வழங்குவதை மற்ற நிறுவனங்களும் வழங்கும் படி கொள்கைகளை உருவாக்குவீர்கள் என நம்புகிறோம்" எனவும் தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது அமேசான் நிறுவனம்.

ஆனால் எதார்த்தத்தில், அமேசான் ஊழியர்கள் பலரும் பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறுநீர் கழித்ததற்கான ஆதாரங்கள் வெளிவந்தன. பல செய்தி நிறுவனங்கள், பல அமேசான் ஊழியர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறுநீர் கழித்ததை உறுதிப்படுத்தின. அதோடு, அமேசானின் சேவை மையங்கள் மற்றும் அமேசான் டெலிவரி சேவை என இரண்டிலும் நீண்ட நேரம் வேலை பார்க்க வேண்டி இருப்பது குறித்தும் அச்செய்தி நிறுவனங்களில் விவரிக்கப்பட்டு இருக்கின்றன.

"இந்த சம்பவம் அமேசான் உயரதிகாரிகளுக்குத் தெரியும்" என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான, நிறுவன உள்விவகார டாக்குமெண்ட்களைக் கைப்பற்றியதாக 'தி இன்டர்செப்ட்' என்கிற இணைய தள பத்திரிகை வலைதளம் கூறியுள்ளது.
webdunia

இத்தனை விவரங்கள் வெளியான பின் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் மார்க் போகனிடம், ஒரு செய்தி அறிக்கை மூலம், இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டது அமேசான்.

நாங்கள் காங்கிரஸ் உறுப்பினர் மார்க் போகனிடம் மன்னிப்பு கேட்கிறோம்"

"அந்த ட்விட் தவறானது. அது எங்கள் நிறுவனத்தின் மிகப் பெரிய ஓட்டுநர்கள் கூட்டத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அது எங்கள் சேவை மையத்தை (Fulfillment centers) மட்டுமே கவனத்தில் கொண்டிருந்தது" என அச்செய்தி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மேலும் அமேசானின் சேவை மையங்களில் டஜன் கணக்கில் கழிவறைகள் இருக்கின்றன, அதை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டிருந்தது.

"அமேசான் ஓட்டுநர்கள் போக்குவரத்து நெரிசல் காரணத்தினால் அல்லது கிராம புறங்களில் பயணிப்பது காரணமாக, குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் பல பொது கழிவறைகள் மூடப்பட்டிருந்த போது கழிவறைகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் அறிவோம்".

"இந்த பிரச்சனை நீண்ட காலமாக, தொழில் துறையில் நிலவி வருகிறது". "இதை தீர்க்க விரும்புகிறோம்" எனவும் அச்செய்தி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

அமேசானின் மன்னிப்பை நிராகரித்திருக்கிறார் காங்கிரஸ் உறுப்பினர் மார்க் போகன். "இது என்னைப் பற்றியது அல்ல. இது உங்கள் ஊழியர்களைப் பற்றியது. அவர்களை நீங்கள் மரியாதையாக நடத்துவதில்லை. உங்கள் ஊழியர்களுக்கு போதுமான நல்ல பணிச் சூழலை உருவாக்காததை முதலில் ஆமோதியுங்கள். பிறகு அதை சரி செய்யுங்கள். எந்த வித தலையீடும் இல்லாமல் அவர்களை ஒன்று சேர விடுங்கள்" என அமேசானுக்கு பதிலளித்திருக்கிறார் போகன்.

இதுநாள் வரை அமேசான் நிறுவனம், அமெரிக்காவில் தன் ஊழியர்களுக்கு எந்த வித தொழிற்சங்கங்களையும் உருவாக விடாமல் பார்த்துக் கொண்டது. ஆனால் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அமேசான் ஊழியர்களுக்கு தொழிற்சங்கங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருமான வரி அதிகாரிகளே கூட சீட் கிடைக்கும்னு சொன்னாங்க! – ஐடி ரெய்டு குறித்து மு.க.ஸ்டாலின்!