Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

'4 நிமிட' முத்தக் காட்சி எடுக்கப்பட்ட வரலாறு தெரியுமா?

'4 நிமிட' முத்தக் காட்சி எடுக்கப்பட்ட வரலாறு தெரியுமா?
, புதன், 18 ஜனவரி 2023 (10:25 IST)
தமிழ் திரையுலகில் முத்தக்காட்சி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது கமல்ஹாசன் தான். ஆனால், அவருடைய முத்தங்களையே விஞ்சும் ஒரு முத்தக்காட்சி 1933இல் பாலிவுட்டில் படமாக்கப்பட்டுள்ளது.
 
ஒர் அழகிய இளவரசி மயக்க நிலையில் இருக்கும் தனது காதலுனுக்கு முத்தம் கொடுத்து உயிர்ப்பிக்க செய்த முயற்சி, சினிமாவில் வரலாறு ஆனது.
 
1933-ம் ஆண்டு நிஜ வாழ்க்கை ஜோடிகளான தேவிகா ராணி மற்றும் ஹிமான்ஷு ராய் நடிப்பில் வெளியான கர்மா படத்தில் இடம்பெற்ற லிப் லாக் முத்தக்காட்சி பாலிவுட் சினிமாவில் வெளியான முதல் முத்தக் காட்சி என்று கூறப்படுகிறது. அதே போல இந்த காட்சி "பாலிவுட்டின் மிக நீண்ட முத்தம்" என்று நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இரண்டும் உண்மை இல்லை.
 
அந்த முத்தக்காட்சி நான்கு நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது என்று அப்போதைய பத்திரிகைகள் செய்தி எழுதின. இந்த ஜோடி முத்ததை திரையில் பரிமாறிக்கொள்வது குறித்து இந்தியாவில் பல கட்டுக்கதைகளின் அப்போது பேசு பொருளாகி இருந்தது.
 
ராய் மற்றும் ராணி 1934 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் தொழில்முறை திரைப்பட ஸ்டுடியோவான பாம்பே டாக்கீஸை நிறுவினர். இது இந்தியாவில் பேசும் சினிமாவின் முதல் தசாப்தத்தில் ஆதிக்கம் செலுத்தி பல ட்ரெண்ட்களுக்கு வித்திட்டது. அவற்றில் பல இன்றும் பின்பற்றப்படுகின்றன.
 
சமீபத்தில் இந்திய சினிமா குறித்த சிறந்த புத்தகத்திற்கான தேசிய திரைப்பட விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்ற புத்தகம், இந்த ஜோடியின் முத்தம் மற்றும் அவர்களின் வாழ்க்கையை நேரடியாக பதிவு செய்ய முயற்சிக்கிறது.
webdunia
"ராய் மற்றும் ராணி திருமணம் செய்து கொண்ட நேரத்தில் இந்த படம் தயாரிக்கப்பட்டது, அவர்கள் மிகத் தீவிரமாக காதலித்து வந்தனர், எனவே உணர்ச்சிகரமான முத்தங்களை திரையில் பரிமாறிக்கொண்டதில் ஆச்சரியமில்லை" என்று தி லாங்கஸ்ட் கிஸ்: லைஃப் அண்டு டைம்ஸ் ஆஃப் தேவிகா ராணி என்ற புத்தகத்தின் ஆசிரியர் கிஷ்வர் தேசாய் கூறுகிறார்.
 
மேலும், அந்த நேரத்தில் இந்திய சினிமாவில் ஒரு முத்தக் காட்சி இருந்தது வித்தியாசமானது அல்ல, ஏனெனில் அப்போது இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்ட இருந்ததன் காரணமாக பல படங்கள் மேற்கத்திய பார்வையாளர்களுக்காக தயாரிக்கப்பட்டன. 1920, 1930-களின் பிற்பகுதியில் வெளியான இந்த படங்களில் முத்தக்காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
 
கர்மா திரைப்படமும், அக்கால சினிமாவைப் போலவே, "சில மேற்குலக பாணியிலான காட்சிகளை கொண்டு இருந்தது"
 
"காதல் படம்" என்று வர்ணிக்கப்பட்ட இந்த 63 நிமிட படம் பிரிட்டிஷ் இயக்குநர் ஜே.எல் ஃப்ரீயர் ஹன்ட் என்பவரால் இயக்கப்பட்டது, மேலும் இந்த படத்தில் "உண்மையான அரண்மனைகள் மற்றும் கிழக்கத்திய பிரகாசத்தின் காட்சிகளைக் கொண்டிருந்தது" என்று பெருமையாக பேசப்பட்டது.
 
மேற்கத்திய நாடுகள் விரும்பும் இந்திய க்ளிஷேக்களான இந்திய அரசர்கள், புலி வேட்டை, பாம்புகளின் இனச்சேர்க்கை மற்றும் மகுடி ஊதும் பாம்பு மந்திரவாதி போன்ற காட்சிகள் இருந்தன. 
 
புகழ்பெற்ற இந்த முத்தக்காட்சி படத்தின் இறுதியில், ஒரு நாகப்பாம்பு கடித்து மயக்க நிலையில் படுத்திருக்கும் இளவரசரை உயிர்ப்பிக்கும் முயற்சியின் போது இளவரசி அவரை முத்தமிடுவது போல காட்சிப் படுத்தப்பட்டு இருக்கும். 
 
"இது நான்கு நிமிடங்களுக்கு மேல் நீளமான காட்சி என்பது கட்டுக்கதை, இதில் உண்மை இல்லை" என்று திருமதி தேசாய் கூறுகிறார். "மேலும் இது பாலிவுட்டின் மிக நீண்ட முத்தக் காட்சியும் கிடையாது. அது ஒரு தொடர் முத்தம் கிடையாது. அடுத்தடுத்து கொடுக்கப்பட்ட முத்தங்கள் இவை, இவற்றின் மொத்த நீளம் இரண்டு நிமிடங்கள் வரை தான் இருக்கும்."
webdunia
அந்த நேரத்தில் இந்த முத்தம் படத்தின் விற்பனைக்கான அம்சமாக இல்லை என்று அவர் கூறுகிறார். "இந்த பத்திரிகைக்களால் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை".
 
இந்திய சினிமாவில் காட்டப்படும் காட்சிகள் இப்போது தைரியமாக காட்டப்பட்டாலும், பல காலமாக திரையிலும், திரைக்கு வெளியேயும் பொதுவெளிகளில் அன்பை பகிர்வது இந்தியாவில் சங்கடத்தை உருவாக்கும் செயலாக இருந்து வந்துள்ளது.  
 
2007 ஆம் ஆண்டில், ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெர் டெல்லியில் நடந்த ஒரு தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை முத்தமிட்டதை அடுத்து போராட்டங்கள் வெடித்தன. அவர் இந்திய கலாச்சாரத்தை அவமதித்ததாக கூறி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஹாலிவுட் நடிகரின் உருவபொம்மையை எரித்தனர்.
 
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மற்றொரு சம்பவத்தில், டெல்லியில் ஒரு இளம் திருமணமான தம்பதியினர் பொதுவெளியில் முத்தமிட்டதற்காக ஆபாசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
 
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, திரைப்பட தணிக்கைக் குழு சற்று மோசமான எதையும் உன்னிப்பாகக் கவனித்து வந்தது. முத்தங்களை பகிர்ந்து கொள்ளும் காட்சிகளில் பூக்களால் உதடுகள் மறைக்கப்படும் வகையில் காட்சிகள் படமாக்கப்பட்டன. 
 
அந்த வகையில், கர்மா தனித்து நிற்கிறது. ஏனென்றால் நீண்ட காலத்திற்கு முன்பு தயாரிக்கப்பட்ட ஒரு படத்தில் முத்தக் காட்சி இடம் பெற்று இருந்தது. ஆனால் படம் படுதோல்வி அடைந்தது.
 
"மேடை நாடக பாணியில் நடிகை பாடியது இந்திய ரசிகர்களுக்கு உகந்ததாக இருக்கவில்லை. அவர்கள் இதை ரசிக்கவில்லை" என்று தேசாய் கூறுகிறார்.
 
ஆனால், இந்த படத்தை உருவாக்கியதன் நோக்கம் வெற்றி பெறுவது அல்ல, பம்பாயில் இருந்து ஒரு படத்தை உலக அரங்கிற்கு அனுப்ப முடியும் என்பதை காட்டவே இந்த படம் உருவாக்கப்பட்டது" என்று அவர் கூறுகிறார்.
 
"ஹிமான்ஷு ராய் ஏற்கனவே ஐரோப்பாவில் ஒரு வெற்றியாளராக இருந்தார், அங்கு அவர் வளர்ந்து வரும் நட்சத்திரமாக கருதப்பட்டார். ஆனால் அவர் ஒரு புத்திசாலித்தனமான தொழிலதிபராக விளங்கினார். அவர் பம்பாயில் (இப்போது மும்பை) ஒரு திரைப்பட ஸ்டுடியோவை அமைப்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தார். மேலும் கர்மா போன்ற ஒரு படத்தை எடுப்பதன் மூலம், ஹாலிவுட் படத்திற்கு சமமான ஒரு படத்தை உருவாக்க முடியும் என்ற செய்தியை வெளியுலத்திற்கு அனுப்ப முயன்றார்.
 
முதலீட்டாளர்கள் பிரிட்டிஷ் அல்லது வசதி படைத்த பார்சி சமூகத்தினர் என்பதால் இது அவசியம் என்று அவர் கூறுகிறார்.
 
அங்குதான் ராணியின் இருப்பு உதவியது. நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூரின் கொள்ளுப் பேத்தியான இவர், தனது ஒன்பதாம் வயதில் இருந்து இங்கிலாந்தில் பள்ளிப்படிப்பை தொடங்கினார்.
 
லண்டனில் உள்ள மார்பிள் ஆர்ச் தியேட்டரில் கர்மா படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது என்று தேசாய் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தியேட்டரில் திரையிடும் நாளன்று பிரிட்டிஷ் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் ராணி மேரி ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்ற வதந்திகளுக்கு மத்தியில் பிரிட்டிஷ் அரசின் பிரபுத்துவம் கொண்ட  பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
குறிப்பாக தேவிகா ராணியின் அழகு மற்றும் உச்சரிப்பிற்காக விமர்சகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது என்று திருமதி தேசாய் கூறுகிறார்.
 
செய்தித்தாள் ஒன்று "அவளை விட அழகான ஒருவரைக் கண்டுபிடிப்பது கடினம்" என்று எழுதியது. மற்றொரு செய்தித்தாள் "அவளுடைய அழகான அம்சங்கள், பளபளப்பான கண்கள் மற்றும் அழகான அசைவுகள்" என்று தேவிகா ராணி குறித்து எழுதி இருந்தது.
 
இந்த படத்தின் மூலம் தேவிகா, "ஹாலிவுட் மற்றும் ஐரோப்பிய சினிமாவில் புகழ்பெற்ற இந்திய நடிகை" என்ற பெயரைப் பெற்றார். 
 
ஆனால் அவர் ராய் உடன் மும்பைக்குத் திரும்பி இந்தியாவின் முதல் தொழில்முறை ஸ்டுடியோவை அமைத்தார். "அங்கு அவர் கடினமாக உழைத்தார்".
 
அவர் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மேலும் புகழ்பெற்ற நடிகரான அசோக் குமாருடன் திரையில் ஒரு வெற்றிகரமான ஜோடியாக திகழ்தார். அச்சூத் கன்யா (தீண்டத்தகாத பெண்) உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பணியாற்றினார் தேவிகா. அதில் உயர் சாதி ஆணுடன் காதல் கொள்ளும் கீழ் சாதி பெண்ணாக நடித்தார்.
 
தனது திறமை மற்றும் அழகால், ரசிகர்களின் இதயங்களை ராணி ஆட்சி செய்தார். "இந்திய சினிமாவின் முதல் பெண்" என்று ராணி அழைக்கப்பட்டார். ஆனால் விரைவிலேயே ராய் உடனான அவரது உறவு கசக்கத் தொடங்கியது.
 
"ராணி மிகவும் கடினமாக உழைத்தார், ஆனால் போதுமான அளவு பாராட்டப்படவில்லை. மேலும் ராய்க்கு முன்பே திருமணமாகி ஒரு மகள் இருப்பதை அறிந்தபோது, ராய் உடனான அவரது உறவு இன்னும்  மோசமடைந்தது" என தேசாய் கூறுகிறார்.
 
1936ஆம் ஆண்டில் அவர் ஒரு சக நடிகருடன் சென்ற போது அவர்களின் உறவில் ஏற்பட்ட பிளவு அனைவருக்கும் தெரிந்தது. இருந்தபோதிலும், "அவர் திறந்த கரங்களுடன் மீண்டும் வரவேற்கப்பட்டார், காரணம் அவர் உண்மையிலேயே ஈடுசெய்ய முடியாதவர்" என்கிறார் தேசாய்.
 
இரண்டாம் உலகப் போர் உருவானது பம்பாய் டாக்கீஸை கடுமையாக பாதித்தது. ஏனெனில் அங்கிருந்த ஜெர்மன் ஊழியர்கள் இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் முகாம்களில் வைக்கப்பட்டனர்.
 
ராய் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு 1940இல் இறந்த பிறகு, தேவிகா ராணி ஒரு தயாரிப்பாளராக மதுபாலா மற்றும் திலீப் குமார் போன்ற பழம்பெரும் நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர்ஹிட் படங்களை வழங்கினார்.
 
ஆனால் 1945இல், அவர் தனது பங்குகளை விற்றுவிட்டு, ஸ்வெடோஸ்லாவ் ரோரிச்சை மணந்து இமாச்சல பிரதேசத்திற்கு குடிபெயர்ந்தார். பின்னர் பெங்களூருக்கு இடம் பெயர்ந்த அவர், 1994ஆம் ஆண்டு இறக்கும் வரை அங்கு வாழ்ந்தார்.
 
"ரோரிச்சுடனான திருமணத்திற்குப் பிறகு, அவர் விரும்பிய வாழ்க்கையைப் பெற்றிருக்கலாம்" என்று தேசாய் கூறுகிறார்.
 
எனினும், ராணி வெளியேறிய பிறகு  பாம்பே டாக்கீஸ் நீண்ட நீடிக்கவில்லை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரோட்டுல என்னோட மோதி ஜெயிக்க தயாரா? – அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால்!