Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பழனி முருகன் கோவிலில் காணிக்கை திருட்டு எதிரொலி - 13 புதிய கட்டுப்பாடுகள்

Palani
, புதன், 15 ஜூன் 2022 (15:07 IST)
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள்.

அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதுடன் மலைக்கோவிலில் உள்ள அனைத்து உண்டியல்களிலும் காணிக்கையை அதிகளவில் செலுத்திவருகின்றனர். குறிப்பாக, திருவிழா நாட்கள், தொடர் விடுமுறைகள் போன்ற நாட்களில் ஓரிரு வாரங்களிலேயே கோவில் இருக்கக்கூடிய அனைத்து உண்டியல்களும் முழுமையாக நிரம்பி விடும். இதையடுத்து, கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்படும்.

வெளிநாட்டு கரன்சி காணிக்கைகள்

பொதுவாக, உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், தங்கச்சங்கிலி, தங்கக்காசு போன்றவையும், வெள்ளியாலான பிஸ்கட், காசுகள், வெள்ளிவேல், வெள்ளிகொலுசு போன்றவையும் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.

அதேபோல், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகளும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்படுகின்றன.

ரப்பர் பேண்டில் தங்க நகை திருட்டு

கடந்த மே மாதம் உண்டியல் நிரம்பியதை அடுத்து இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் மேற்பார்வையில், கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கல்லூரி மாணவர்கள் உதவியுடன் காணிக்கையை எண்ணும் பணி தொடங்கியது.

அப்போது, பழனி கோவிலில் பொருட்கள் பாதுகாப்பு அறையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் அவரது காலில் ரப்பர் பேண்ட் வைத்து சுமார் 10.8 கிராம் அளவுள்ள தங்க நகையை நூதனமாகத் திருடியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, கோவில் ஊழியர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொள்ளும் பொழுது அதே திருக்கோவிலில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர் ஒருவர் காணிக்கை எண்ணும் பணியும் போது சுமார் 93 ஆயிரம் ரூபாயை திருடியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

13 புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

கடந்த முறை நடைபெற்ற திருட்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தற்போது உண்டியல் எண்ணும் பணியின்போது கடைபிடிக்க வேண்டிய 13 கட்டுப்பாடுகளை புதிதாக கோவில் நிர்வாகம் விதித்துள்ளது.

அதன்படி, "உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் நாளன்று கோவில் பணியாளர்கள் காலை 6.15 மணிக்குள் பணி நடக்கும் மண்டபத்துக்குள் வந்து வருகை பதிவேட்டில் கையொப்பம் இட வேண்டும்.

அவ்வாறு வர தவறிய பணியாளர்களுக்கு அன்றையதினம் விடுப்பாக கருதப்பட்டு ஊதியம் பிடித்துக் கொள்ளப்படும். ஆண் பணியாளர்கள் வேட்டி நிச்சயம் அணிந்து வரவேண்டும், மற்ற உடை அணிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் கைக்கடிகாரம், மோதிரம், வளையல், காப்பு உள்ளிட்டவைகளை அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உண்டியல் எண்ணும் பணி தொடங்குவதற்கு முன்பும் நிறைவு பெற்ற பிறகும் வருகை பதிவேட்டில் வந்த நேரத்தையும் பணி முடிந்து செல்லும் நேரத்தையும் நிச்சயம் குறித்து கையொப்பமிட வேண்டும். பணியின் இடையில் உணவு இடைவேளைக்கு சென்றால்கூட செல்லும் நேரத்தையும் வந்த நேரத்தையும் நிச்சயம் குறித்து கையெழுத்திட வேண்டும்" உள்ளிட்ட 13 புதிய கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் தற்போது அமல்படுத்தி இருக்கிறது.

"உண்டியல் எண்ணும் பணியின்போது பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து பலமுறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம். இந்த முறை 13 கட்டுப்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கையை முழுமையாக கடைபிடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். நிச்சயம் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்" என, பிபிசி தமிழிடம் பழனி கோயில் இணை ஆணையா் நடராஜன் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடிவுக்கு வந்தது 27 ஆண்டுகளாக இயங்கி வந்த “Internet Explorer”… பயனர்கள் சோகம்