தென் ஆப்ரிக்காவில் கோலோச்சி வந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்களான குப்தா சகோதரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக தென் ஆப்ரிக்க அரசு தெரிவித்துள்ளது.
அதூல் மற்றும் ராஜேஷ் குப்தா ஆகிய இருவரும் தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் சூமாவுடன் இருந்த நெருக்கமான தொடர்பை பயன்படுத்தி லாபமடைந்தனர் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அவர்களை தென் ஆப்ரிக்காவுக்கு அழைத்து செல்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தென் ஆப்ரிக்கா தெரிவித்துள்ளது.
குப்தா சகோதரர்கள் மீது நீதி விசாரணை தொடங்கிய பிறகு அவர்கள் 2018ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறினர்.
லாபமிக்க அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கும், அதிகாரமிக்க அரசு பதவிகளின் நியமனங்களில் தலையிடவும் லஞ்சம் வழங்கியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குப்தா குடும்பம் 1993ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தென் ஆப்ரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.
குப்தா சகோதரர்கள் அவர்கள் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார்கள்.
குப்தா சகோதரர்கள் தென் ஆப்ரிக்காவிலிருந்து வெளியேறிய பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் வெளியேற்ற ஒப்பந்தம் குறித்து தென் ஆப்ரிக்கா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.
தென் ஆப்ரிக்காவின் தற்போதைய அதிபர் சிரில் ராமபோசா, இந்த ஒப்பந்தம், குப்தா சகோதரர்கள் நாட்டுக்கு திரும்பி, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வழிவகுக்கும் என தான் நம்பியதாக தெரிவித்தார்.
இருப்பினும் அவர்கள் உடனடியாக தென் ஆப்ரிக்காவுக்கு அழைத்து வரப்படுவார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்தியாவில் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு
குப்தா சகோதரர்கள் இந்தியாவில் பணமோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2018ஆம் ஆண்டு டெல்லியில் அமைந்துள்ள அவர்கள் அலுவலகம் உட்பட பல்வேறு நகரங்களில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
குப்தா சகோதரர்கள் மீது சுமத்தப்பட்ட பெரும்பாலான குற்றச்சாட்டுகள் ஜேக்கப் சூமாவுடன் அவர்களுக்கு இருந்த நெருக்கமான உறவுடன் தொடர்புடையதாக உள்ளது.
ஜேக்கப் சூமா 2009ஆண்டிலிருந்து ஒன்பது வருடங்கள் தென் ஆப்ரிக்காவின் அதிபராக இருந்தார். அதன்பிறகு அவர் மீது சுமத்தப்பட்ட அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
சூமாவுடனான தொடர்பை பயன்படுத்தி தென் ஆப்ரிக்க அரசின் அனைத்து மட்டங்களிலும் குப்தா சகோதரர்கள் அதிகாரம் செலுத்தினர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜேக்கப் சூமாவும் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.
சூமாவுடன் நெருக்கம்
குப்தா குடும்பத்தினர் ஜேக்கப் சூமாவுடன் மிக நெருக்கமாக இருந்தனர். இதனால் சுப்தா'ஸ் என்ற வார்த்தை உருவானது.
குப்தா சகோதரர்களுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றில் சூமாவின் மனைவிகளில் ஒருவர், ஒரு மகன், மகள் ஆகியோர் உயர் பதவிகளில் இருந்தனர்.
அரசுத் துறைகளுடனான லாபகரமான ஒப்பந்தங்கள் மூலம் குப்தா குடும்பத்தினருக்கு சொந்தமான பல நிறுவனங்கள் பயனடைந்தன.
அதேபோல குப்தா குடும்பத்தினரிடமிருந்து தங்களுக்கு நேரடியாக ஆணைகள் வந்ததாகவும், அது அவர்களின் நிறுவனங்களின் நலன் சார்ந்த ஆணைகளாக இருந்தன என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களுக்கு ஒத்துப் போனால் பணம் மற்றும் பதவி உயர்வு அல்லது பதவியிலிருந்து நீக்கம் என்றும் கூறப்படுகிறது.
இவர்களால் பல பொதுத் துறைகள் கைப்பற்றப்பட்டன என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நிதியமைச்சகம், இயற்கை வளம் மற்றும் பொது நிறுவனங்கள், வரி வசூலிக்கும் முகமைகள், தொலைத்தொடர்புகள், தேசிய ஊடகமான எஸ்ஏபிசி, தென் ஆப்ரிக்க விமான சேவை என இந்த பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது.
யார் இந்த குப்தா சகோதரர்கள்?
அஜய், அதூல் மற்றும் ராஜேஷ் குப்தா இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து தென் ஆப்ரிக்காவுக்கு 1993ஆம் ஆண்டு இடம் பெயர்ந்தனர்.
தென் ஆப்ரிக்காவில் அப்போதுதான் இனவெறி கொடுமை வீழ்ச்சி கண்டிருந்தது.
தென் ஆப்பிரிக்காவில் சுரங்கம், விமானப் போக்குவரத்து, ஊடகம், தொழில்நுட்பம், கணினி, எரிசக்தி உள்ளிட்ட பல தொழில்களில் குப்தா குடும்பத்தினர் ஈடுபட்டனர்.
அதூல் குப்தா, சஹாரா கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை தென் ஆப்ரிக்காவில் நிறுவ வந்தபோது அங்கு போதுமான விதிமுறைகள் இல்லை என தெரிவித்திருந்தார்.
பின் 10 ஆயிரம் பேரை பணி நியமனம் செய்யும் அளவிற்கு நிறுவனம் வளர்ந்தது.
ஜேக்கப் சூமாவை தான் முதன்முறையாக கண்டபோது, அவர் அதிபராகவில்லை என்றும் அதூல் குப்தா தெரிவித்திருந்தார்.