முன்னர் நினைத்ததைவிட நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் உணவைச் சமைக்க நெருப்பைப் பயன்படுத்தியுள்ளனர் என்று இஸ்ரேலிய ஆய்வாளர்கள் முன்னின்று நடத்திய ஆய்வு கூறுகிறது.
வடக்கு இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட 7,80,000 ஆண்டுகள் பழைமையான எச்சங்களில் அவர்கள் இதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தனர். இந்த எச்சங்கள் ஒரு பெரிய கெண்டை மீன் போன்ற தோற்றமுடையவை.
விஞ்ஞானிகள், “பச்சை உணவை உண்பதிலிருந்து சமைத்த உணவை உண்ணும் மாற்றம் மனித வளர்ச்சி மற்றும் நடத்தைகளில் வியத்தகு தாக்கங்களை ஏற்படுத்தியது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
முன்பு சமைப்பதற்குக் கிடைத்த ஆரம்ப சான்றுகள், கி.மு. 1,70,000-க்கு முந்தையவை.
தற்போது இரண்டு மீட்டர் (6.5 அடி) நீளமுள்ள மீனின் எச்சங்கள் கலிலி கடலுக்கு வடக்கே ஜோர்டான் நதியில் சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள கெஷர் பெனோட் யாகோப் தொல்பொருள் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் இரிட் சோஹர் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் மீன்களுடைய பற்களின் ஈறுகளில் இருந்து படிகக் கற்களை ஆய்வு செய்தனர். அந்தத் தளத்தில் அவை அதிகளவில் காணப்பட்டன. படிகக் கற்கள் விரிவடைந்தவிதம், அவை நேரடியாக நெருப்பில் சுடப்படவில்லை, ஆனால் குறைந்தளவிலான வெப்பநிலையில் சமைக்கப்பட்டன என்பதற்கான அற்குறியாக இருந்தன.
“உணவைச் சமைக்கத் தேவையான திறனைப் பெறுவது குறிப்பிடத்தக்க பரிணாம முன்னேற்றத்தைக் குறிக்கிறது. ஏனெனில், இது கிடைக்கக்கூடிய உணவு வளங்களைத் தகுந்த முறையில் பயன்படுத்துவதற்கான கூடுதல் வழியை வழங்கியது,” என்று அகழ்வாராய்ச்சியின் இயக்குநரான ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாமா கோரான்-இன்பார் கூறினார்.
“சமையல் என்பது மீன் மட்டுமல்ல, பல்வேறு வகையான உயிரினங்கள் மற்றும் தாவரங்களை உள்ளடக்கியது.”
மலேரியாவை பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்காக 1950-களில் அழிக்கப்படும் வரை இந்த மீன் வகை, அந்த இடத்தில் இருந்த பழங்கால ஹூலா ஏரியை ஒரு காலத்தில் குடியிருந்தது என்ற தீர்மானத்திற்கு விஞ்ஞானிகள் வந்தனர்.
அந்தத் தளத்தில் கிடைத்த மற்ற ஆதாரங்கள், அந்தப் பகுதி வேட்டை மற்றும் சேகரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்ட மக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த பகுதி என்பதைக் குறிக்கிறது.
இத்தகைய நன்னீர் பகுதிகள், ஆப்ரிக்காவிலிருந்து லெவன்ட் மற்றும் அதைத் தாண்டிய பகுதிகளுக்கு இடம் பெயர்வதற்கு ஆரம்பக்கால மனிதர்கள் பின்பற்றிய பாதை குறித்த சான்றுகளை வழங்குவதாக ஆய்வுக்குழு நம்புகிறது.