Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்கிலில் தந்தை, பூஞ்சில் மகன்: பயங்கரவாதத்துக்கு இரையான ஒரே குடும்பத்து இரு உயிர்கள் - நெகிழ்ச்சி பின்னணி

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (22:22 IST)
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நேற்று ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 4 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள்.
 
சில மணி நேரங்களுக்கு பின்னர், இது பயங்கரவாத தாக்குதல் என்று தெரிவித்த ராணுவம், பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டு வெடித்து வாகனம் தீ பிடித்து எரிந்தது என்று குறிப்பிட்டிருந்தது.
 
இந்த தாக்குதலில் ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் பிரிவைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார்.
 
இந்த சம்பவம் நடைபெறும்போது, இந்திய ராணுவத்தின் வாகனம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் காலியில் இருந்து சாங்கியோட் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தது.
 
தாக்குதல் பலியான வீரர்களின் பெயரை வெளியிட்டுள்ள இந்திய ராணுவம், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளது.
 
இறந்தவர்களில் ஹவில்தார் மன்தீப் சிங் பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள சங்கோயன் கலான் கிராமத்தைச் சேர்ந்தவர். லான்ஸ் நாயக் குல்வந்த் சிங் மோகா மாவட்டத்தில் உள்ள சாரிக் கிராமத்தைச் சேர்ந்தவர்.
 
சிப்பாய் சேவக் சிங் பதிண்டாவில் உள்ள தல்வாண்டி சாபோவில் உள்ள பாகா கிராமத்தைச் சேர்ந்தவர். குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தல்வண்டி பாரத் கிராமத்தில் வசிப்பவர் சிபாய் ஹர்கிரிஷன் சிங்.
 
தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்தாவது ராணுவ வீரர் ஒடிசாவின் பூரியைச் சேர்ந்த லான்ஸ் நாயக் தேபாஷிஷ் ஆவார்.
 
27 வயதான ஹர்கிரிஷன் சிங் 49 ராஷ்ட்ரிய ரைபிள்ஸில் பணியாற்றி வந்தார். இவரது தந்தை மங்கள் சிங்கும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்று பிபிசி பஞ்சாபி சேவையின் செய்தியாளர் குர்பிரீத் சிங் சாவ்லா கூறுகிறார்.
 
ஹர்கிரிஷன் சிங் மரணமடைந்த தகவல் அவரது கிராமமான தல்வாண்டி பாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து கிராம மக்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
 
ஹர்கிரிஷன் சிங் கடந்த 2017ல் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். தற்போது அவருக்கு தல்ஜித் கவுர் என்ற கர்ப்பிணி மனைவியும் 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
 
நம்மிடம் பேசிய தல்ஜித் கவுர், ` நேற்று குடும்பத்தில் உள்ள அனைவரும் அவருடன் வீடியோ காலில் பேசினோம். எங்கள் மகள் குஷ்பிரீத் கவுரிடம் அவர் நீண்ட நேரம் வீடியோ காலில் பேசினார்` என்று தெரிவித்தார்.
 
கடந்த பிப்ரவரி மாதம் விடுப்பில் இருந்த அவர் அதன் பின்னர் ராணுவத்துக்கு திரும்பியிருந்தார்.
 
மோகா மாவட்டத்தில் உள்ள சாரிக் கிராமத்தைச் சேர்ந்த குல்வந்த் சிங், தாக்குதலில் உயிரிழந்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மக்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
 
குல்வந்த் சிங்கின் தந்தை பல்தேவ் சிங்கும் ராணுவத்தில் பணியாற்றி வந்தவர் என்றும் கார்கில் போரில் அவர் உயிரிழந்தார் என்றும் குல்வந்த் சிங்கின் மாமா மந்தர் சிங் பிபிசி பஞ்சாபியிடம் குறிப்பிட்டார்.
 
14 ஆண்டுகளுக்கு முன்பு குல்வந்த் சிங் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் கிராமத்தில் அவர் விடுமுறையை கழித்துள்ளார்.
 
 
கடந்த 2018ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த குர்சேவக் சிங், சமீபத்தில் விடுப்பில் இருந்தார். 20 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
 
பகவந்த் மான் அஞ்சலி
 
இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டரில், "ராஷ்டிரிய ரைபிள்ஸின் ஐந்து வீரர்களில், நான்கு பஞ்சாப் வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்கள், அவர்களின் அவர்கள் சாகாவரம் பெற்றவர்கள். அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு கடவுள் வலிமை தரட்டும். உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி என்று கூறியுள்ளார்.
 
ராஷ்டிரிய ரைபிள்ஸ் என்பது இந்திய ராணுவத்தின் உயர் பயிற்சி பெற்ற பயங்கரவாத எதிர்ப்புப் படையாகும். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக 1990ல் இப்படை உருவாக்கப்பட்டது. இது ஒரு துணை ராணுவப் படை அல்ல, ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்ட படை.
 
இந்திய ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களைக் கொண்ட இந்தப் படையின் ஜம்மு காஷ்மீரில் தலைமையகம் உள்ளது.
 
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் முக்கிய பங்கு வகித்துள்ளது.
 
துன்பங்களை எதிர்கொள்ளும் துணிச்சலுக்காகவும் அர்ப்பணிப்பிற்காகவும் இந்திய அரசால் பலமுறை பாராட்டப்பட்டது.
 
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிப்பது, ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்பு மற்றும் சந்தேக நபர்களை கைது செய்தல் உள்ளிட்ட பல வெற்றிகரமான நடவடிக்கைகளில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் ஈடுபட்டுள்ளது.
 
மாநிலத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்கு மருத்துவ முகாம்கள், பள்ளிகள் மற்றும் பிற சமூக நலத் திட்டங்கள் போன்ற உதவிகளை வழங்குவதில் இந்த படை தீவிரமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை நெரித்து உயிருடன் புதைத்த கூலிப்படை! உயிருடன் வந்து நின்று அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்!

2600 லிட்டர் தாய்ப்பால் தானம்.. கின்னஸ் சாதனை பெண்ணுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

இன்னும் பதவி ஏற்கல.. அதுக்குள்ள ரஷ்யாவுக்கு போன் போட்ட ட்ரம்ப்! - போரை நிறுத்துவாரா?

வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தை தொடும் பூண்டு விலை! - மக்கள் அதிர்ச்சி!

போலீசாரிடம் பிடிபடாமல் இருக்கும் நடிகை கஸ்தூரி.. முன் ஜாமீனுக்கு முயற்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments